Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022 ரிஷபம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022  ரிஷபம்

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் மற்றவர்களுக்காக செயல்படும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியும் தர்ம கர்மாதிபதியுமான சனி பகவான் இவ்வருடம் முழுவதும் 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால பாதிப்புகள் விலகி மன நிம்மதி ஏற்படும். தொழில் ரீதியாக படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவது மூலம் லாபகரமான பலனை அடைய முடியும். வெளியூர் வெளிநாடு தொடர்புகள் மூலம் நீங்கள் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில நேரங்களில் வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடையும் யோகம் உண்டு.

சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியில், கேது 7-ல் இவ்வாண்டு முழுவதும் சஞ்சரிக்க உள்ளதால் முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே  தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

உங்கள் ஜென்ம ராசிக்கு 8, 11-க்கு அதிபதியும், ஆண்டுக் கோளுமான குரு பகவான் இவ்வாண்டில் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்பதால் பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் தான் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். எது எப்படி இருந்தாலும் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்கள் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் ஏற்படும் என்றாலும் சிறு தடைக்கு பின்பு கைகூடும். 

இவ்வாண்டில் குரு 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

 

தேக ஆரோக்கியம்

நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்கை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிலும் தெம்புடன் செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச் செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்க கூடிய காலம் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துடன் இருந்து மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் சற்று வேலைபளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்து கொண்டால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழக்கு இழக்கு நேராமல் பாதுகாத்து கொள்ள வேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க சற்று உழைக்க வேண்டி இருக்கும். நீர் வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்க மாட்டார்கள். வாய்க்காய் வரப்பு பிரச்சனைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் மேன்மை ஏற்படும். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் மறையும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் தேவைக் கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.

படிப்பு

கல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்று விட முடியும். சிறு சிறு இடையூறுகள் தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடன் இருப்பது நற்பலனை தரும்.

 

மாதப்பலன்

சித்திரை

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். பண வரவுகள் நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் சனி 9-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் நிலவும் என்றாலும் எதிர்பார்த்த லாபத்தினையும் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் மனநிம்மதி சற்று குறையும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். முடிந்த வரை முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். விண் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. முருக வழிபடுவது நல்லது.

ஆனி

ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூல பலன்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவில் இருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு ஏற்படும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

ஆடி

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி

உங்கள் ராசியில் ராகு, 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி மன நிம்மதி குறையும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 9-ல் சனி குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும். சூரியன், செவ்வாய் 5-ல் இருப்பதால் எதிலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே நற்பலன் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

ஐப்பசி    

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் இம்மாதத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை அடைவார்கள். அஷ்டலட்சுமியை வழிபடவும்.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 9-ல் சனி, வரும் 18-ஆம் தேதி வரை 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். இம்மாதத்தில் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி

உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது, கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் சிறுசிறு தடைகளுக்குப்பின் வந்து சேரும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.    

தை

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் ஓரளவு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

மாசி

உங்கள் ராசிக்கு 9-ல் சனி, புதன், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாராள தன வரவுகளால் பொருளாதாரம் மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளை வாங்க முடியும். பூர்வீக சொத்துகளாலும் லாபங்களை அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபார செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

பங்குனி

மாத கோளான சூரியன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் இம்மாதத்தில் 9, 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8            நிறம் - வெண்மை, நீலம்,        கிழமை - வெள்ளி, சனி

கல் -  வைரம்   திசை - தென்கிழக்கு,       தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

No comments: