Wednesday, March 31, 2021

பிலவ வருட பலன்கள் 2021-2022 கும்பம்

 பிலவ வருட பலன்கள் 2021-2022

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்பராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமும் உங்கள் ராசியாதிபதியுமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி உங்கள் ஜென்ம ராசியில் குரு, சுக ஸ்தானமான 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சாரம் செய்வதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். நேரத்திற்கு உணவு உன்பது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதாவது உடம்பு பாதிப்பு அதன் மூலம் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக மருத்துவ காப்பீடு எடுத்து வைத்து கொள்வது நல்லது.

பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும். ஒரு சில உதவிகள் கிடைப்பதால் உங்கள் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும்.

கணவன்- மனைவியிடையே கடந்த காலங்களில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். உங்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுப காரியம் கைகூடும் வாய்ப்பு அதன் மூலம் சுப செலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தவிர்ப்பது அப்படி செய்ய வேண்டும் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும் என்தால் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்களது உழைப்பிற்கான ஊதியம் அடைய முடியாத காலம் என்பதால் தேவையற்ற மன கவலை ஏற்படும். தற்போது இருப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணம் கோளாறு போன்றவை தோன்றும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களை உற்றார் உறவினர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள் என்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல்- வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றமான நிலையை அடைய முடியும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகள் உதவியால் அனுகூலம் அடைவார்கள். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது, உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். வெளியூர் செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்து தேவைக் கேற்றபடி இருக்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, சரியான நேரத்தில் படபிடிப்பில் கலந்து கொள்வது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருப்பதால் சற்றே நிம்மதி குறைவு உண்டாகும். வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் சற்றே அலைச்சல் அதனால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஒரளவுக்கு தேவைக் கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

படிப்பு

கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகள் வீண் அலைச்சலையும், பிரச்சினைகளையும் உண்டாக்கும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

 

மாதப்பலன்

சித்திரை

ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெற சற்றே தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

வைகாசி

உங்கள் ராசிக்கு இம்மாதத்தில் 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் சேரும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உடல் நிலையில் சற்றே கவனம் செலுத்தவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ஆனி

உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் சிறு தடைக்குப் பின்  கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சிறப்பான பணவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

ஆடி

உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நற்பலன் உண்டாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் செவ்வாய் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். முருகரையும் விநாயகரையும் வழிபடுவது உத்தமம்.

ஆவணி

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களே உங்கள் அமைதியை குறைப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடிகள் நிலவினாலும் மந்தநிலை ஏற்படாது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.  

புரட்டாசி

உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் மனநிம்மதி குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிவனையும், முருகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.

ஐப்பசி    

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். சிறப்பான பணவரவால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

கார்த்திகை

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டு சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நல்லது

மார்கழி

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டானாலும் சிறிது மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமடையும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

தை

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறும் யோகம் உண்டு. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். சிவனையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.

மாசி

ஜென்ம ராசியில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முன்கோபத்தை குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். மாத முற்பாதியில் சுக்கிரன், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

பங்குனி

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, பணவிஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல் நிலை ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகி புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8             கிழமை - வெள்ளி, சனி         திசை - மேற்கு

கல் - நீலக்கல்  நிறம் - வெள்ளை, நீலம்          தெய்வம் - ஐயப்பன்