Friday, April 23, 2021

மேஷம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

 

மேஷம்  - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

(06-04-2021 முதல் 13-04-2022)

ஜோதிட மாமணி

முனைவர் முருகுபாலமுருகன்

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

வெகுளியாகவும், மனம் திறந்து பேசக்கூடிய நற்குணமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி செவ்வாயின் நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியுமான குரு பகவான் வரும் 06-04-2021 முதல் 13-04-2022 வரை ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். குரு தனது சிறப்பு பார்வையாக 3, 5, 7-ஆம் வீடுகளை பார்வை செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் எல்லா வகையிலும் லாபமும் வெற்றியும் உண்டாகும். உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து அனைத்து குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த வம்பு வழக்குகள் மறைந்து தீர்வு உங்களுக்கு சாதகமாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சொந்த வீடு மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் நீங்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வேலைபளு சற்று கூடுதலாக இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளி காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் சென்று பண்புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.

உங்கள் ராசிக்கு சர்ப்ப கிரகமான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நேரத்திற்கு உணவு உண்பது உத்தமம். உங்களது மனைவியின் ஆரோக்கியத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு குரு 11-ல் சஞ்சரிப்பது பல்வேறு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் வரும் 15-09-2021 முதல் 19-11-2021 வரை குரு மகர ராசிக்கு பின்னோக்கி செல்வதால் உங்கள் ராசிக்கு 10-ல் சிறிது காலம் சஞ்சரிப்பார். இக்காலத்தில் தொழில் பொருளாதாரத்தில் மிகவும் கவனமாக இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.

 

தேகஆரோக்கியம்

ஜென்ம ராசிக்கு 11-ல் குரு பகவான் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால், உங்களின் தேக ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சினைகள் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இதுவரை இருந்து வந்த நோய்கள் கூட உங்களை விட்டு படிப்படியாக விலகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் எதையும் சமாளிக்க முடியும்.

குடும்பம் பொருளாதாரம்

குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிறப்பான மணவாழ்க்கையும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். சிலர் வீடு, மனை வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பார்கள். இதுவரை இருந்த பொருளாதாரத் தடை விலகும்.

கொடுக்கல்- வாங்கல்

குருவின் சாதகமான சஞ்சாரத்தால் பண விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக விலகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளை கையாளும் போது சற்று கவனமுடன் இருந்தால் லாபத்தை காண முடியும். இதுவரை விரோதிகளாக இருந்தவர்களும் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

தொழில் வியாபாரிகளுக்கு

சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் குரு தற்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் இதுவரை சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் மறைந்து, எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கப்பெற்று மனநிறைவு உண்டாகும். செய்யும் பணிகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மேலும் உற்சாகம் பிறக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் கனவுகள் நினைவாகும். வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து சென்றால் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் அழகான புத்திர பாக்கியத்தை பெறுவர். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். அனைவரும் உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவுடன் செயல்படுவார்கள். உறவினர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

உங்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறக் கூடிய காலம் என்றே சொல்லலாம். உங்களின் பேச்சிற்கு சமுதாயத்தில் கௌரவமான நிலையிருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். மதிப்பு மிகுந்த பதவிகள் உங்களை தேடி வரும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய பல யுக்திகளைக் கையாண்டு லாபத்தினைப் பெறுவீர்கள். எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதனையாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். லாபங்கள் பெருகுவதால் புதிய பூமி, நிலம், நவீன கருவிகள் போன்றவற்றையும் வாங்குவீர்கள்.

படிப்பு

கல்வியில் திறம்படச் செயல்பட்டு பல சாதனைகளைச் செய்வீர்கள். உங்களால் நீங்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் பெருமை ஏற்படும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தேடி வரும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் யோகம் அமையும். பெற்றோரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 06-04-2021 முதல் 21-05-2021 வரை

குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தில் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இது வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறையும். நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். உங்களுடைய கடன் சுமைகள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் அனைத்தும் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாய் அமையும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அனுகூலங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்றாலும் அதிக அலைச்சல் ஏற்படும். 2-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 22-05-2021 முதல் 20-06-2021 வரை

குரு பகவான் ராகு நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. சொந்த வீடு, வாகனம் வாங்கு யோகம் உண்டாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் முன்நின்று செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். நல்ல நண்பர்களின் நட்பும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைப்பதோடு அதிகாரிகளின் பேராதரவும் நிலைத்திருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் ஏற்படும்.

 

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021 வரை

குரு பகவான் வக்ர கதியில் இருப்பதால் பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். ராகு 2-ல், கேது 8-ல் இருப்பதால் உங்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது மிகவும் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக அடிக்கடி தேவையற்ற பயணங்கள் ஏற்படும். தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

 

குரு பகவான் மகர ராசியில் 18-10-2021 முதல் 19-11-2021 வரை

குருபகவான் இக்காலங்களில் உங்கள் ராசிக்கு 10-ஆம் வீடான மகர ராசியில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகள் சற்று சாதகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருந்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான் ஓரளவுக்கு மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகபடியாக இருக்கும். உங்கள் பணிகளில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது.    

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை

குரு பகவான் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து நிம்மதியான நிலையினை அடைவார்கள்.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை

குரு பகவான் சர்ப கிரகமான ராகுவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு பொதுக்காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, பலருக்கு நன்மைகள் செய்யும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அனைவரின் பாராட்டுதல்களையும் தடையின்றி பெறுவீர்கள். நினைத்ததெல்லாம் நிறைவேறும். சனி 10-ல் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் அபிவிருத்திகள் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். உயர் பதவிகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை

குரு பகவான் தனது நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பலவகையில் ஏற்றங்களை அடைவீர்கள். உணவு விஷயத்தில் நீங்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களும் தடபுடலாக கைகூடும். சிலர் நினைத்தவரையே கரம் பிடிப்பர். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை அதிகப்படியாக இருந்தாலும் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும் என்றாலும் வேலையாட்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 11-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் உங்கள் ராசிக்கு ராகு 2-ல் கேது 8-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - ஆழ்சிவப்பு                                 கிழமை - செவ்வாய்

கல் - பவளம்               திசை - தெற்கு                           தெய்வம் - முருகன்

No comments: