Friday, March 18, 2022

ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 மிதுனம்

 ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

நல்ல தீர்க்கமான சிந்தனையும், அறிவாற்றலும், நினைவாற்றலும் கொண்ட மிதுனராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த ராகு கேது தற்போது ஏற்பட உள்ள இடபெயர்ச்சியால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 11-ஆம் வீட்டிலும், கேது பகவான் 5-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். ராகு 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். கேது 5-ல் இருப்பதால் வயிறு பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடு, பூர்வீக சொத்து ரீதியாக பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் நிம்மதி குறைவு ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே இருப்பதை தக்க வைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். உழைப்பிற்கான பலனை அடைய இடையூறு ஏற்படும். சுப காரியங்கள் தாமதம் ஆகும். அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

10-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 22-04-2023 முதல் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு பண வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் கிடைக்கும். எதிலும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும்

சனி 8-ல் சஞ்சரித்து உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெறுவதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருக்கணிதபடி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் சனி 9-ல் சஞ்சரிக்க இருக்கும் இக்காலத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நிலை, உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விலகும் அமைப்பு உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் தீவிர முயற்சிக்கு பின்பு நல்லது நடக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படவும். பூர்வீக சொத்துக்கள் ரீதியாக சிறிது மன நிம்மதி குறைவு ஏற்படும்,

உத்தியோகம்

பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் உங்களது உடல் நிலை ஒத்துழைக்காது. எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிட்டும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொண்டால் 2023-ல் மிகவும் உயர்வான நிலையை அடைய முடியும்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் உங்களது உழைப்பு சற்று அதிகமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். போட்டி பொறாமைகளால் மனநிம்மதி குறையும். நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். அதிக முதலீடு விஷயத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தற்போது சற்று பொறுமையுடன் இருந்தால் 2023-ல் தொழிலில் நல்ல முன்னேற்றங்களை அடையலாம்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனத்துடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் அவர்களது ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் தக்க நேரத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் பங்காளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப காரியங்களில் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன் கிடைக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு ராகு சூரியன் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத சில அனுகூலங்களை அடைவீர்கள். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். சனி வரும் 29-04-2022 முதல் அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள ஆரோக்கிய குறைப்பாடுகள் விலகி நல்லது நடக்கும். 5-ல் சஞ்சரிக்கும் கேது குரு நட்சத்திரத்தில் இருப்பதால் ஆன்மீக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமாக செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 5-ல் கேது குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்ற படி இருந்தாலும், குரு 10-ல் சஞ்சரிப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும் என்றாலும் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமாக இருக்கவும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க தேவையற்ற இடையூறு ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. தடைபட்ட வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 11-ல் சஞ்சரிப்பதால் எந்த வித நெருக்கடிகளையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும்சனி 8-ல், குரு 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்பட்டால் ஒரு சில முன்னேற்றங்களை அடைய முடியும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால்  தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை உண்டாகும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. இயற்கை உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்லவும். கூட்டாளிகள் ஆதரவால் ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

சர்ப கிரகமான ராகு அசுவனி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்து எல்லாம் நடக்கும். சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் 22-4-2023 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகவும் சிறப்படையும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும்குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் சிறுசிறு மன கவலை ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு 11-ல் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். சனி 9-ல், குரு 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட முடியும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கேது 5-ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகளால் சிறுசிறு மன கவலை தோன்றும். திருமண சுப காரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்களின் வேலைபளு குறைந்து மன நிம்மதியுடன் பணியாற்ற முடியும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,     நிறம் - பச்சை, வெள்ளை,              கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்              திசை - வடக்கு                          தெய்வம் - விஷ்ணு

 

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வது நல்லது.

சனி 8-ல் சஞ்சரித்து 17-01-2023 முடிய அஷ்டமச்சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் ஊற்றி எள் தீபமேற்றி வழிபடவும்.

குரு 10-ல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.

No comments: