Friday, March 18, 2022

ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 ரிஷபம்

 ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியில், கேது 7-ல் இது நாள் வரை சஞ்சரித்ததால் பல நிம்மதி குறைவுகளை குடும்பத்தில் சந்தித்து வந்த உங்களுக்கு தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருகணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். இதனால் உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றங்கள் உறுதியாக ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் இணையும் நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த மன கசப்புகள் விலகி சுமுக நிலை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உங்கள் பலம் அதிகரித்து இது வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறையும்.

ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியான வளர்ச்சியை அடைய முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வினை அடையலாம்.

குரு வரும் 22-04-2023 முதல் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலத்தில் பொருளாதார ரீதியாக சற்று தேக்கங்கள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.  

                உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல பலனை அடையும் யோகம் உண்டு. திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் ஜீவன ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிக்க உள்ள காலத்தில் தொழில் வியாபாரத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். கடந்த கால அலைச்சல் டென்ஷன்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும் திறம்பட செயல்பட முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருப்பதால் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் புதிய ஆடர்கள் கிடைத்து லாபத்தை அடைய முடியும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள் என்றாலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும்.

அரசியல்

பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகுவதால் அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும் என்றாலும் கவனத்துடன் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். வர வேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருந்தாலும் வர வேண்டிய நேரத்தில் கைக்கு கிடைக்கும். படப்பிடிப்பிற்காக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். தாய் வழி சொத்துக்களால் அனுகூலப்பலன்களை பெற முடியும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர் செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளைப் பெறுவார்கள். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். 

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு 6-ல் கேது குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். கடந்த கால சோதனைகள் மறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சனி, 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிமையான காலமாக இக்காலம் அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ராகு 12-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை நீங்கள் அடைவீர்கள். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் குறையும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர் ஓரளவுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்யும் அளவிற்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் உதவியாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபங்கள் கிடைக்கும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

கேது 6-ல் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராகு 12-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை விலகி அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் ஆதரவாக நடப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து கடன் சுமைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

கேது சுவாதி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். குரு 11-ல் வரும் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு சாதகமான பலனைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் 22-04-2023 முதல் குரு 12-ல் இருப்பதால் எதிர்பாராத சுப விரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். ------ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்கின்ற போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் வெளி ஆட்களால் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. அதிக தொகை கொண்ட செயல்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் ஒய்வு நேரம் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் உங்களுக்கு கிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,     நிறம் - வெண்மை, நீலம்,                கிழமை - வெள்ளி, சனி

கல் -  வைரம்              திசை - தென்கிழக்கு,         தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

 

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

No comments: