Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 மேஷம்

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 மேஷம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

மேஷம்           அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிலும் துணிவுடன் செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 முடிய விரய ஸ்தானமான 12-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் பண வரவில் சற்று ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்களது ஆடம்பர செலவை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத உதவிகளால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

                குரு தனது விஷேச பார்வையாக ஜென்ம ராசிக்கு 4, 6, 8-ஆம் வீடுகளை பார்ப்பதால் கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும். உங்களுக்கு இருந்த கடன்கள் சற்று குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலங்களை அடைய முடியும்.                குரு 12-ல் சஞ்சரிப்பது மட்டுமின்றி சனியும் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஒரு சில முன்னேற்றங்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் உங்களின் திறமையால் எதையும் சமாளிக்க முடியும். வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.

                ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.

உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரையும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் உத்தியோக ரீதியாக இருக்கும் நெருக்கடிகள் குறைந்து நற்பலனை அடைய முடியும். தற்போது சற்று நிதானத்துடன் இருந்து விட்டால் 2023 முதல் உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வயிறு கோளாறு, இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்கள், தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மன¬விக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். இயற்கை உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குல தெய்வ வழிபாடுகளை செய்வது குடும்பத்திற்கு நற்பலனை உண்டாக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் செயல்களால் சுபகாரிய முயற்சிகளுக்கு இடையூறு உண்டாகும். பெரியவர்களிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய காலம் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். உங்களுக்கு இருந்து வரும் வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டி செல்வார்கள். சில நேரங்களில் உடனிருப்பவர்களே சதி செய்வார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்கு பின்பே கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. தற்போது நிதானமாக இருந்தால் 2023 முதல் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

உத்தியோகம்

உத்தியோஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள் என்றாலும் பணியில் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும். உடல் சோர்வு மந்தமான நிலை போன்றவற்றால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். செய்த வேலையையே திருப்பி திருப்பி செய்ய வேண்டியிருக்கும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய காலமாகும். மறைமுக எதிர்ப்புகளை உங்களது தேவையற்ற பேச்சுக்களால் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். கட்சி பணிகளுக்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருக்கவும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் 2023 தொடக்கத்தில் கிடைக்கும். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

விவசாயிகள்

போதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விளைச்சலை நல்லவிதமாக எதிர்பார்க்க முடியாது. பயிர்களை இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் அரசு வழியில் சில மானியத் தொகைகளைப் பெற முடியும். விளை பொருளுக்கேற்ற விலையை பெற முடியாமல் போவதால் லாபம் குறையும். புதிய பூமி மனை போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் 2023 தொடக்கத்தில் நல்லது நடக்கும்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்றாலும் எதிலும் ஒழுங்காக செயல்பட முடியாத நிலை உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். உடல் நிலையில் சோர்வு உண்டாவதால் படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். உங்களது வாய்ப்புகளை பிறர் தட்டி செல்வார்கள். வரவேண்டிய சம்பள பாக்கிகள் சற்று தாமதம் ஆனாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் 

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்ளவும். வயிறு கோளாறு, கர்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சிக்கனமாக செயல்பட்டு எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வீடு மனை வாங்கும் எண்ணங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சில அலைச்சல்களை சந்திப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி இலக்கை தொடுவீர்கள். படிப்பில் திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். உடன் பழகும் நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

குரு தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருக்க வேண்டும். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கு இடையூறு உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. எடுத்த ஆடர்களை முடிக்க நீங்கள் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று அதிகப்படியாக இருக்கும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் கடினமான பணியை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது, சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சனி அதிசாரமாக லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலன்களை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஆதாயப்பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது ஒரு நல்ல வாய்ப்பு தேடி வரும்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு பகவான் 12-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். சர்ப கிரகங்கள் 1, 7-ல் சாதகமற்று இருப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெற முடியும். கூட்டாளிகளை தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். நீங்கள் எதிர்பார்த்த புதிய ஆடர்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு விரும்பிய இட மாற்றங்களும் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குரு சனி நட்சத்திரமான உத்திரட்டாதியில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு எதிலும் முனைப்புடன் செயல்பட்டால் விரைவில் நல்ல வளர்ச்சி அடையலாம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்தாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். வரும் 17-01-2023-ல் ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தின் மூலம் சனி 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குருபகவான் ரேவதி நட்சத்திரத்தில் 12-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வேலைபளு குறையும்.

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் 17-01-2023 முடிய சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம்.

ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கேது 7-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                                 நிறம் - ஆழ்சிவப்பு                               கிழமை - செவ்வாய்

கல் - பவளம்               திசை - தெற்கு                                          தெய்வம் - முருகன்

No comments: