Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 ரிஷபம்

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 ரிஷபம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதிலும், அழகாக தன்னை அலங்கரித்து கொள்வதிலும், அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பாகும். உங்களுக்கு தற்போது உள்ள பொருளாதார நெருக்கடிகள் விலகி பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். குரு தனது சிறப்பு பார்வையாக 3, 5, 7-ஆகிய வீடுகளை பார்ப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாக கூடிய பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் நல்ல நிலை அடைவீர்கள்.

இது நாள் வரை 1, 7-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகமான ராகு, கேது தற்போது கேது 6-ல், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் மேலும் பல அனுகூலங்களை அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, கடந்த கால அலைச்சல்களும் டென்ஷன்களும் குறையும் வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை விலகி நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய திட்டங்களை தீட்டி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மன நிம்மதி ஏற்படும். வேலையாட்கள் திறமையாக செயல்பட்டு உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறையும். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடந்த கால கவலைகள் மறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்களுக்கு சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரள நிலை ஏற்படும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.

உங்கள் ராசிக்கு சனி 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தன லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். சனி திருக்கணிதப்படி 17-01-2023 முதல் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் தொழில் உத்தியோகத்தில் சற்று கவனமாக செயல்படுவது சிறப்பு. குரு, கேது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம் 

உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் சிறப்பான உடல் நலத்துடன் இருப்பதால் கடந்த கால வீண் செலவுகள் குறையும். உங்களுக்கு உள்ள அலைச்சல் டென்ஷன் எல்லாம் குறைந்து மன நிம்மதியான சூழ்நிலைகள் உண்டாகும். கடினமாக பணியை கூட எளிதில் செய்து முடிக்கும் பலம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டு அதனால் ஆதாயம் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகி ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகிய உறவினர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலையானது உயர்ந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். வீடு மனை வண்டி, வாகனங்கள் வாங்க விரும்புபவர்களின் எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி கைகூடும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் லாபம் காணக் கூடிய காலணிது. தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கல் நல்ல முறையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி திரும்ப கிடைக்கும். அசையா சொத்து வகையில் இருந்த பிரச்சினைகள், தேவையற்ற வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். பெரிய மனிதர்கள் மூலம் எதிர்பாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி லாபத்தையும் அபிவிருத்தியையும் பெற முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். தொழிலாளர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் புதிதாக இணைவார்கள். தொழில் வியாபாரத்தை பல இடங்களில் விரிவுபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் வெற்றி கிட்டும்.

உத்தியோகம்

நீங்கள் சந்தித்து வந்த சோதனைகள், வீண் பழிச்சொற்கள் யாவும் விலகி எதிர்பாராத உயர்வினை அடைவீர்கள். மற்றவரை அதிகாரம் செய்ய கூடிய அமைப்பு, பலரை வழி நடத்தி செல்லக்கூடிய பதவிகள் உங்களை தேடிவரும். பதவி உயர்வுகள் உண்டாவதால் அதனுடன் ஊதிய உயர்வும் உண்டாகி பொருளாதார நிலையினை உயர்த்தி கொள்ள முடியும். உங்கள் திறமைகளை அதிகரித்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் செல்ல விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்

அரசியல்

மக்களுடைய ஆதரவுகளை பெற்று உயர்வடையக்கூடிய பொற்காலமாகும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். மக்களின் தேவையறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதியாக செயல்படுவீர்கள். கட்சி பணிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைத்து மன நிம்மதி ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைந்து லாபத்தினைப் பெறுவீர்கள். கடந்த கால சோதனைகளை தற்போது சாதனைகளாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் அதிகரிப்பதால் புதிய பூமி, நிலம், நவீன கருவிகளை வாங்குவீர்கள். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்கும். பங்காளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி சுமுகமான நிலை ஏற்படும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும்.

கலைஞர்கள்

நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்க கூடிய மகிழ்ச்சியான வாய்ப்பு அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது. அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பு உண்டாகும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவீர்கள்.

பெண்கள்

நீண்ட நாட்களாக இருந்த உடல் பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர பாக்கியம் அமைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொன் பொருள் ஆடை ஆபரணமும் சேரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ மாணவியர் 

கல்வியில் நல்ல முன்னேற்றமடைய கூடிய காலணிது. முயற்சி செய்வதால் முடியாதது ஒன்றுமில்லை என்ற அளவிற்கு தேர்ச்சிகளை பெறுவீர்கள். பள்ளி கல்லூரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஊக்க மருந்தாக அமையும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி தேர்வுகளில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் நல்லது நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் பயணங்கள் மூலம் பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். கடந்த கால நெருக்கடிகளும் வேலைபளுவும் குறையும். உங்கள் மீது இருந்த அவபெயர் விலகும். சக ஊழியர்கள் உதவி சிறப்பாக இருக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குரு லாப ஸ்தானமான 11-ல் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வழியில் இருந்த வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நவீன பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் சாதகப்பலன் கிட்டும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சனி 10-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு வக்ரகதியில் சஞ்சரித்தாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபங்களை ஓரளவுக்கு அடைவீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநபர்களிடம் பேசும் போது குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குரு ஜென்ம ராசிக்கு 11-ல் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை தக்க நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் குறைந்து அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக தொழிலை விருத்தி செய்ய வேண்டும் என்று நினைத்த உங்களுக்கு ஒரு புதிய வழி கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த சம்பள பாக்கி கிடைத்து கடன்களை பைசல் செய்வீர்கள்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குரு ஜென்ம ராசிக்கு 11-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் நற்பலனை அடையலாம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெற முடியும். கொடுக்கல்-- வாங்கலில் இருந்த தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும்உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சக ஊழியர்கள் மூலம் ஆதாயம் அடைய முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும்.

 

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 12-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8                      நிறம் - வெண்மை, நீலம்,                கிழமை - வெள்ளி, சனி

கல்வைரம்              திசை - தென்கிழக்கு,                         தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

No comments: