Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 கும்பம்

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 கும்பம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று கடமையே கன்னியமாய் செயலாற்றும் பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டுமில்லாமல் ராகு முயற்சி ஸ்தானமான 3-ல், கேது 9-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் விலகி பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் சேர்க்கையும், வீடு, வாகனம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

உங்கள் ராசியாதிபதி சனி வரும் 17-01-2023 முடிய 12-லும், அதன் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால்  உங்கள் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ளவது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் குருபார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் எதிர் கொண்டு தெம்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் யாவும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய ஆடர்கள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் கடந்த கால நெருக்கடிகள் விலகும். தொழிலாளர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து எதிலும் சிறப்பாக செயல்பட முடியும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டவர்களுக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.   குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் சற்று குறையும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து எதிலும் முனைப்புடன் செயல்படுவீர்கள் என்றாலும் தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது சற்று பொறுமையுடன் செல்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் மறைந்து கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் அமையும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி ஒன்று இல்லம் தேடி வந்து சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் வண்டி வாகனங்களை புதுப்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள். 

கொடுக்கல்- வாங்கல்   

கமிஷன், காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இருந்த கடுமையான நெருக்கடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமாக செயல்பட்டால் நல்ல லாபத்தை சம்பாதிக்க முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நீண்ட நாட்களாக நடைபெறும் வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு முன்னேற்றத்திற்கு உதவும்.

தொழில் வியாபாரம்

புதிய முயற்சிகள் மூலம் லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறுவீர்கள். புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். கூட்டாளிகள் உங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பினை தருவார்கள். வேலையாட்கள் தகுந்த நேரத்திற்கு கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு பணிசுமையும் அதனால் அலைச்சல் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்து வந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகுவதால் துணிவுடனும் தைரியத்துடனும் செயல்பட முடியும். வெளியூர் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் சாதகமானப் பலனை பெறுவீர்கள்.

உத்தியோகம் 

தங்கள் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுக்கும் செயல்களை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுவதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மேலும் மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் அமையும். வேலைபளு அதிகமாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும்.

அரசியல்

கட்சியில் உங்களுக்கு பெயர் புகழ் உயரும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்களின் பேச்சிற்கும் நீங்கள் கூறும் ஆலோசனைக்கும் அரசியலில் மதிப்பு மரியாதையும் இருக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பினை பெறுவீர்கள். மக்களின் தேவையறிந்து செயல்படுவதால் மக்களின் சிறந்த ஆதரவினை அடைவீர்கள். பத்திரிக்கை உங்களின் நற்செயல்களை பாராட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசு மூலம் உதவிகள் கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றை வாங்கிப் போடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சேமிப்பும் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கூலி ஆட்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் மகிழ்ச்சிகளும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பத்திரிகையாளர்களும் உங்களை பற்றிய நற்செய்திகளை மட்டுமே வெளியிடுவார்கள். உடல் நலத்திற்கு முக்கியதுவம் தருவது நல்லது.

பெண்கள்

திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உற்றார், உறவினர்களால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணியில் இருந்த நெருக்கடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. 

மாணவ மாணவியர்

கல்வியில் இருந்த மந்த நிலைகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலனை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். உயர்படிப்பிற்கான வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

உங்கள் ராசிக்கு 2-ல் குரு தனது சொந்த நட்சத்திரத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வதும் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சனி 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த வாக்கு வாதங்கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகி அனுகூலங்களை அடைய முடியும். கூட்டாளிகள் ஆதரவாக நடப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு உதவியாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் உங்கள் முயற்சிகளுக்கு சாதகப்பலன் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை ஏற்படும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த முடியும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதும், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நிதானமாக செயல்பட்டால் உங்கள் கடன்களை குறைத்து கொண்டு சேமிக்க முடியும் புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். ஏழரைச்சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். வங்கி மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைத்து தொழிலை மேன்படுத்த முடியும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழ முடியும்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதும், ஏழரைச்சனி நடைபெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமத நிலை ஏற்படும். சர்ப்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பான நிலையில் இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வேலைபளு சற்று கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் பழிச் சொற்கள் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் உண்டாகும். சர்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். ஏழரைச்சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை, கை, கால் அசதி, சோர்வு போன்றவை ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடைய முடியும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் தொழிலை விரிவுபடுத்த முடியும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன நிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குருபகவான் ஜென்ம ராசிக்கு 2-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். ஏழரைச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழிலில் நீங்கள் நினைத்து நிறைவேறும். வேலையாட்கள் உதவியாக இருப்பதால் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய ஆடர்கள் கிடைத்து உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

 

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபடுவதாலும், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8             கிழமை - வெள்ளி, சனி                             திசை - மேற்கு

கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                    தெய்வம் - ஐயப்பன்

No comments: