Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 கடகம்

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 கடகம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அழகான உடலமைப்பும், மற்றவர்களை கவரக்கூடிய பேச்சு திறனும் கொண்ட கடக ராசி நேயர்களே, ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பாகும். இதனால் கடந்த கால பிரச்சினைகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு மிகவும் சாதகமான பலனை பெறுவீர்கள். தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களை பெறுவர். உங்களை வெறுத்து ஓடி ஒளிந்தவர்களும் உங்கள் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு நட்பு பாராட்ட வருவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் படிப்படியாக குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் போன்றவை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும்.

சனி 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றால் கருத்து வேறுப்பாடுகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ முடியும். உடல் ஆரோக்கிய ரீதியாக சற்று அக்கறை எடுத்து கொண்டால் அன்றாட பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியும். மனைவி, பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

சர்ப கிரகமான ராகு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் சிறுசிறு பிரச்சினைகள், தேவையற்ற அலைச்சல்கள் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் என்றாலும் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் பாதிப்புகள் இருக்காது.

தொழில் வியாபாரத்தில் கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அமைப்பும் லாபங்கள் அதிகரிக்கும் யோகமும் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் இருந்த கெடுபிடிகள் விலகி நிம்மதி ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி ஆதாயம் அடைவீர்கள். கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்பட்டால் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். நீண்ட நாட்களாக நெருக்கடிகளை சந்தித்தவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஊதிய உயர்வை பெற்று வரும் நாட்களில் உங்கள் கடன்களை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைய முடியும்.

சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரையும் அதன் பிறகு முழுமையாக 17-01-2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரிக்க இருப்பது உங்களுக்கு அஷ்டமச்சனி என்பதால் இக்காலங்களில் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களை தொல்லை படுத்திக் கொண்டிருந்த உடம்பு பாதிப்புகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. இவ்வளவு நாட்களாக மனதில் நிலவி கொண்டிருந்த சில பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

கடந்த காலங்களால் நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் யாவும் மறையும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி கடன்களும் படிப்படியாக விலகும். நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். பிரிந்தவர்களும் தேடி வந்து ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம், சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த நீண்ட நாள் சிக்கல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றமடைய கூடிய காலணிது. பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சூழ்நிலைக்கு தகுந்த வாரு சிறப்பாக செயல்பட்டு உங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு நற்பலனை உண்டாக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். கை நழுவிய வாய்ப்புகளும் தேடி வருவதால் பொருளாதார நிலையானது உயர்வடையும். தொழிலாளி முதலாளி என்ற பேதமில்லாமல் அனைவரிடமும் சுமூகமான நிலை நிலவும். கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டிய காலணிது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய கிளை நிறுவனங்களை நிறுவ கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகம்

பணியில் இதுவரை நிலவிய நெருக்கடிகள் குறையும். வீண் பழிச்சொற்கள் விலகி எதிர்பாராத பதவி உயர்வுகள் தேடி வரும். பெயர், புகழ் உயரும் அளவிற்கு உங்களின் திறமைகளை வெளிப்படுத்த கூடிய வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளி இடங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்

அரசியல்வாதிகள் அபிரிதமான வளர்ச்சியினை அடையக்கூடிய காலணிது. இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். மக்களிடையே செல்வாக்கு உயரும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மாண்புமிகு பதவிகள் கிட்டும். கட்சி பணிகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பு அமையும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்று விடுவீர்கள். பயிர்களை இன்சூரஸ் செய்வதன் மூலமும் அரசு வழியில் ஆதாயங்களைப் பெற முடியும். காய், கனி, பூ, போன்றவற்றால் லாபம் கிட்டும். கால் நடைகளை வாங்க முடியும். நிலங்கள் மீது இருந்த வம்பு வழக்குகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.

கலைஞர்கள் 

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் அமையும். எதை தேர்ந்தெடுப்பது என முடிவெடுக்க முடியாத அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகளும் குறைந்து சுகவாழ்வு சொகுசு வாழ்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அனுகூலமான பயணங்களும் அதன் மூலம் நற்பலன்களும் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பாரங்களும் குறைந்து உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். புது வீடு கட்டி குடிபுக கூடிய வாய்ப்பு உண்டாகும்.

மாணவ மாணவியர் 

கல்வியில் இருந்து வந்த மந்த நிலைகள் விலகி ஞாபக சக்தி அதிகரிக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளான நீங்கள் தற்போது அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். பேச்சு போட்டி ஓவியப் போட்டி, பாட்டு போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் நட்பு தேடி வரும். தேவையற்ற பொழுது போக்குகளில் உள்ள நாட்டம் குறைந்து கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். 4-ல் கேது சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் தேடி வரும். உங்கள் மீது இருந்த பழிச் சொற்கள் விலகி நல்ல நிலையை எட்ட முடியும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த கடந்த கால பிரச்சினைகள் விலகி லாபத்தை அடைய முடியும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குரு சனியின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் தாராள தன வரவுகள் ஏற்படும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். கூட்டாளிகளால் சிறிது நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். ராகு 10-ல் உள்ளதால் உத்தியோகத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிப்பதால் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கான ஊதியத்தை பெற்று கடந்த கால கடன்களை பைசல் செய்வீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. அன்றாட பணிகளில் ஈடுபடுவதில் சற்று மந்த நிலை ஏற்படும். கேது 4-ல், சனி 7-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்து விடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கேது 4-ல், சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் தகுதியை உயர்த்தி கொண்டு உயர் பதவியை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை வரும் நாட்களில் அடைய முடியும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் பொருளாதார உதவிகளும் கிடைக்கும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். தேவையற்ற தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குரு புதனின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்து லாபங்களை காண முடியும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக நடந்து கொள்வார்கள். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளுவும் குறையும். அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறைந்து சுமுகமான நிலை ஏற்படும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.

 

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - வெள்ளை, சிவப்பு              கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து                 திசை - வடகிழக்கு                               தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: