Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 தனுசு

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 தனுசு

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

நல்ல அறிவாற்றலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும், பலரை வழி நடத்தும் திறனும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஆண்டு கோளான குரு பகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது நாள் வரை இருந்த முயற்சி தடைகள் விலகி ஒரு சில முன்னேற்றங்களை அடைவீர்கள். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும்.

                உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரையும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் ஏழரைச்சனியால் பல இன்னல்களை எதிர் கொண்ட உங்களுக்கு இனி ஏழரைச்சனியின் தாக்கங்கள் படிப்படியாக குறைந்து நல்லது நடக்கும். உங்களுக்கு உள்ள கடன்கள் வரும் நாட்களில் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வளமான பலனை அடைய முடியும்.

                சர்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் அதன் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து வழியில் சிறுசிறு நிம்மதி குறைவு, பிள்ளைகள் வழியில் தேவையற்ற கவலைகள் ஏற்படும் காலம் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்த்து நற்பலனை அடைய முடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சிறு தடைகளுக்கு பின்பு நற்பலனை பெற முடியும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் இருந்த நெருக்கடிகள் குறைந்து படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் அதனை உங்களின் தனி திறமையால் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்தி உழைத்தால் விரைவில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். உங்கள் உழைப்பிற்கான பலனை அடைய சில இடையூறுகள் இருந்தாலும் வரும் 2023 முதல் உங்கள் வாழ்வில் மிகபெரிய முன்னேற்றம் ஏற்படும்.

 எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த முடியும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் படிப்படியாக உயரும். வேலை தேடுபவர்களுக்கு தற்போது சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் முழு திருப்தி இருக்காது. அதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்து சென்றால் விரைவில் மிக பெரிய உயர்வை நீங்கள் அடைய முடியும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் பெரிய தொகைகளை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு தற்போது பாதிப்புகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்களுக்கு இருந்த அலைச்சல் டென்ஷன்கள் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் நல்லது நடக்கும். புத்திரர்களால் சிறுசிறு மனக்கவலைகள் ஏற்படும். அசையா சொத்துக்களால் சுப செலவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்கலாம்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறைகளில் இருப்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் குறைந்து ஒரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சுமாரான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து விடும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் வரும் நாட்களில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் ஓரளவுக்கு உயர்வினை உண்டாக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை விரிவு செய்யும் நோக்கம் சிறு தடைக்கு பின்பு நிறைவேறும். தொழில் போட்டி காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளில் இடையூறுகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சிந்தித்து செயல்பட்டால் 2023 முதல் உங்கள் வாழ்வில் மிக பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகம்

பணியில் இதுவரை இருந்த கெடுபிடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாடகளாக எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும் நாட்களில் கிடைக்கும். சில நேரங்களில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் உயரதிகாரிகளின் ஏச்சிக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்புடன் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பினை சரியாகி பயன்படுத்தி கொண்டால் 2023 தொடக்கத்தில் உயர்வான நிலையை அடைய முடியும்.

அரசியல்

உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நல்ல நிலையை அடைவீர்கள். மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறக்கூடிய வாய்ப்புக்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் பழகுவது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருந்து நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மறைமுக வருவாய் விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

விவசாயிகள்

விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிட முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பங்காளிகளிடையே ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும் உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் விரைவில் உங்களுக்கு சாதகமான நல்ல தீர்ப்பு கிடைத்து நிம்மதி ஏற்படும். எதிலும் முனைப்புடன் செயல்பட்டால் வரும் நாட்களில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். கால்நடைகளால் ஓரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொண்டால் விரைவில் சிறப்பான நிலையை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தாமதப்படும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பத்திரிக்கை நண்பர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவதும், தேவையற்ற கிசு கிசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் நல்லது.

பெண்கள் 

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடந்த கால கடன்கள் வரும் நாட்களில் குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையா சொத்துகளால் சுபசெலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் வேலையில் நிம்மதியான நிலை இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட கூடும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவார்கள். மேற்படிப்புகாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபட்டு ஓரளவுக்கு வெற்றியினை பெறுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற எதிர்நீச்சல் போட வேண்டும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஒரளவுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் நெருக்கடிகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும், சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு இடையூறுகளுக்கு பிறகு நல்லது நடக்கும். பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உங்கள் பணியில் மட்டும் சிந்தித்து செயல்பட்டால் நல்ல நிலையை அடைய முடியும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குரு சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சனி அதிசாரமாக 3-ல் சஞ்சரிப்பதாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சுமாராக இருந்தாலும் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி  இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கவலைகள் மறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து எதிலும் முன்னேற்றத்தை அடைய முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல நிலையை எட்டலாம். கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஊதிய உயர்வுகள் கிடைத்து கடந்த கால கடன்கள் குறையும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். கேது 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது வயது மூத்தவர்களிடம் பேச்சை குறைப்பது நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் செயல்படுவது உடல் நலத்திற்கு நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த உயர்வுகளை பெறலாம். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். தற்போது சற்று முனைப்புடன் பணியாற்றினால் விரைவில் சிறப்பான நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் தொடர்ந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் சம்பளம் சற்று குறைவாக இருக்கும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குருபகவான் சனி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஓரளவுக்கு நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது சிறப்பு. பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் கேது 11-ல் இருப்பதால் எதையும் சமாளித்து விட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று தேக்க நிலை இருந்தாலும் உங்களின் சுய முயற்சியால் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள். வேலையாட்களால் சிறுது நெருக்கடிகள் இருக்கும் என்பதால் நீங்கள் நேரம் காலம் பார்க்காமல் சற்று உழைத்தால் உயர்வை அடைய முடியும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும் வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். சக ஊழியர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சுலபமாக சமாளிக்க முடியும்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் சற்று அலைச்சல் ஏற்பட்டாலும் படிப்படியான வளர்ச்சியை அடைய முடியும். உங்களுக்கு ஏழரைச்சனி முடிந்து சனி 3-ல் சஞ்சரிப்பதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் நிலை சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எளிதில் முன்னேற முடியும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். புதிய ஆடர்கள் கிடைத்து கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறைந்து எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு பெரிய நிறுவனத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

 

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.

ஏழரை சனியில் பாதச் சனி 17-01-2023 முடிய நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - மஞ்சள், பச்சை                     கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்   திசை - வடகிழக்கு                               தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: