Saturday, December 24, 2022

 



ரிஷபம் - புத்தாண்டு பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

ரிஷபம்  ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )

நவகிரகங்களில் சுக காரகன் சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள் ஆடம்பர வாழ்வில் அதிகம் நாட்டம் கொண்டவராகவும் நவீனகரமான பொருட்களை அனுபவிப்பதில் அலாதி பிரியம் கொண்டவராகவும் விளங்கக்கூடிய உங்களுக்கு, வரும் 2023-ஆம் ஆண்டில் சிக்கனத்தோடு செயல்பட்டால் தான் அனைத்தையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடைய முடியும்.

2023---ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய யோகங்கள் உண்டு, கேது உங்கள் ராசிக்கு 6-ல் 30-10-2023 வரையும் அதன் பிறகு ராகு 11-லும் சஞ்சரிப்பதால் கிடைக்க வேண்டிய நேரத்தில் தகுந்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பதால் வளமான பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களில் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் எடுக்கின்ற பணிகளில் சிறு சிறு இடையூறு இருந்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.

உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் வரும் 17-01-2023 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால் தான் அனுகூலங்களை அடைய முடியும். பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்காது என்பதால் நீங்கள் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நன்று. கூட்டாளிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்களை சார்ந்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை சற்று கூடுதலாக இருக்கும் நிலை, மற்றவர்கள் பணியும் சேர்த்து நீங்கள் செய்யக்கூடிய ஒரு சூழல் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான சன்மானத்தை அடைவதில் ஒரு சில இடையூறுகள் இருக்கும் என்றாலும் உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

ஆண்டுகோள் என வர்ணிக்க படக்கூடிய குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான நிலை, திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய யோகங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

வரும் 22-04-2023-க்கு பிறகு குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது அதனை ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்துவது மிகவும் உத்தமம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் அளிப்பது போன்றவற்றை வரும் நாட்களில் தள்ளி வைப்பது நல்லது. எதிலும் பெரியோர்களின் ஆசியுடன் அவர்களின் ஆலோசனை கேட்டு செயல்பட்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். தொழில், வியாபார விஷயங்களில் எதிலும் சுயமாக செயல்படாமல் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படுகின்ற பொழுது வீண் செலவுகளையும், இழப்புகளையும் தவிர்த்து போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்பு உண்டாகும்.

 

 

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு ஏற்படும் வேலைபளு காரணமாக உடல் சோர்வு ஏற்படும் என்றாலும் உங்களது மனோ தைரியத்தால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எல்லாம் இருந்தும் அனுபவிக்கத் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் உங்களது அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். ஆண்டின் தொடக்கத்தில் திருமண சுப காரிய முயற்சிகளில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும்.

உத்தியோகம்

மேலதிகாரிகளின் கெடுபிடிகள், வேலைபளு போன்றவைகளால் பல சங்கடங்களை சந்தித்தாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்க இடையூறுகள் உண்டாகும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். ஊதிய உயர்வுகள் தக்க சமயத்தில் கிடைக்கும் என்றாலும் குடும்பத்தில் ஏற்படும் வீண் செலவுகளால் தேவையற்ற நெருக்கடி உண்டாகி மன நிம்மதி குறையும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டி பொறாமைகள், அலைச்சல், டென்ஷன் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றங்களை அடைவீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் சாதகமான பலன் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகளில் இழுபறி நிலை தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களின் உதவியால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து எதையும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்

கட்சிப் பணிக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பாராத உதவிகளால் பொருளாதார நிலையில் மேம்பாடுகள் உண்டாகி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் மன அமைதியை குறைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் அனுகூலங்கள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி இருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகம் ஏற்படும் என்றாலும் அதற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். அரசு வழியில் கிடைக்கும் உதவியால் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நல்ல வரன்கள் தேடி வரும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்கள் உண்டாகும் என்பதால் எச்சிரிக்கையுடன் செயல்படவும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

ஜென்ம ராசியில் செவ்வாய், மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குரு 11-ல் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உற்றார் உறவினர்களிடையே பேச்சில் பொறுமையுடன் இருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிவன், அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 19-01-2023 பகல் 03.17 மணி முதல் 21-01-2023 பகல் 02.53 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 9, 10-ல், சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறையும். குரு 11-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார மேன்மையால் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 15-02-2023 இரவு 12.45 மணி முதல் 18-02-2023 அதிகாலை 01.48 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு சூரியன், புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். குரு 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். தடைப்படட சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். முருகரையும் விநாயகரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 15-03-2023 காலை 07.33 மணி முதல் 17-03-2023 காலை 10.48 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன், குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலனைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகளை பெற்று விடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் வேலைபளு அதிகம் இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். மகாலட்சுமி, விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் -11-04-2023 பகல் 12.58 மணி முதல் 13-04-2023 மாலை 04.22 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, வரும் 10-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றலை அடைவீர்கள். தனவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம் - 08-05-2023 இரவு 07.10 மணி முதல் 10-05-2023 இரவு 09.50 மணி வரை.

ஜுன்.

மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செவ்வாய் 3-ல், கேது 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று தேக்க நிலை ஏற்பட்டாலும் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவன், துர்க்கையை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 05-06-2023 அதிகாலை 03.23 மணி முதல் 07-06-2023 அதிகாலை 04.40 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு செவ்வாய் 4-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி அமையும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். சுபகாரிய முயற்சிகளை தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. சூரியன் மாத பிற்பாதியில் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை சிறு தடைக்குப் பிறகு பெறுவீர்கள். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு, சனி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 02-07-2023 பகல் 01.18 மணி முதல் 04-07-2023 பகல் 01.43 மணி வரை மற்றும் 29-07-2023 இரவு 11.35 மணி முதல் 31-07-2023 இரவு 12.15 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனைவரின் ஆதரவையும் பெற முடியும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் எடுத்த பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். துர்க்கையம்மன், முருகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 26-08-2023 காலை 08.37 மணி முதல் 28-08-2023 காலை 10.40 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். செவ்வாய் 5-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு உங்கள் கையிருப்பு குறையும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சலும், ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிவ வழிபாடும், குரு பகவான் வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 22-09-2023 மாலை 03.35 மணி முதல் 24-09-2023 இரவு 07.18 மணி வரை.

அக்டோபர்.

ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 19-10-2023 இரவு 09.03 மணி முதல் 22-10-2023 அதிகாலை 01.38 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 6-ல் சூரியன், செவ்வாய், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட்டாலும் எடுக்கும் பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி நிலவினாலும் உங்களின் திறமையால் நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிப்பதுடன் அதற்கான ஆதாயங்களையும் அடையும் யோகம் உண்டு. சனிக்கு எள் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 16-11-2023 அதிகாலை 03.00 மணி முதல் 18-11-2023 காலை 07.00 மணி வரை.

டிசம்பர்.

ஜென்ம ராசிக்கு 7, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், குடும்பத்தில் ஒற்றுமை குறையும் என்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிப்பதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 13-12-2023 பகல் 11.05 மணி முதல் 15-12-2023 பகல் 01.45 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8            நிறம் - வெண்மை, நீலம்,          கிழமை - வெள்ளி, சனி

கல் -  வைரம்              திசை - தென்கிழக்கு,         தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

No comments: