Saturday, December 24, 2022

மேஷம் - புத்தாண்டு பலன் - 2023

 

மேஷம் - புத்தாண்டு பலன் - 2023

 




ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )

எந்த செயலிலும் தைரியத்தோடு செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் வரும் 2023-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட இருக்கிறது. ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் வரும் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் சகல விதத்திலும் குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து முன்னேற்றமான நிலை உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலைகள் எல்லாம் முழுமையாக விலகி நல்ல வளர்ச்சியினை அடையும் யோகம், சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் லாபம், தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு எல்லாம் குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. நல்ல பதவிகள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும்.

தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சர்ப்ப கிரகமான ராகு, கேது 30-10-2023 முடிய 1, 7-ல் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் நெருங்கியவர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ஆண்டுக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும், 22-04-2023 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க உள்ளது அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூற முடியாது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஏப்ரலுக்கு பிறகு குரு பார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் நிலவக்கூடிய சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் கூட சற்று விலகி ஒற்றுமை அதிகரிக்க கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்து வகையில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பங்காளி வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடுவதில் சிறிது தடைகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடி இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம் 

உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த அலைச்சல்கள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். மனைவி, பிள்ளைகளின் அரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். பண வரவுகள் மிக சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும். சுபகாரிய முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும்.

உத்தியோகம்

எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பணி சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உங்கள் தகுதிக்கு ஏற்ற பதவிகள் தேடி வரும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனைந்து வாழ முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை முற்றிலும் விலகி நல்ல லாபத்தை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இனைவார்கள். போட்டி பொறாமைகள் விலகி நல்ல முன்னேற்றத்தை தொழிலில் அடைய முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி ஆதாயம் அடைவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும்.

அரசியல்

எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பெற்று நல்ல பதவியை அடைவீர்கள். நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருந்தால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்கள் தனி திறமைகளை வெளிபடுத்த சிறப்பான சந்தர்ப்பங்கள் அமையும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைப்பதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

விவசாயிகள்

புழு பூச்சிகளால் இருந்த தொல்லைகள் குறைந்து பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையினை சந்தையில் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். நவீன கருவிகள் வாங்கி விவசாயத்தில் புதிய முறைகளை கையாள்வீர்கள்.

பெண்கள்

கடந்த கால உடல் உபாதைகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும்.

மாணவ மாணவியர்

மாணவ மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். மேற்படிப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. பயணங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நன்மை அளிக்கும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளைப் பெற முடியும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, பேச்சில் பொறுமையுடன் இருப்பது, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் முடிப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கையில் இருப்பதை கொண்டு செலவுகள் செய்வது நல்லது. நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது உத்தமம். துர்க்கையம்மன், முருகர் வழிபாடு நற்பலனை உண்டாகும்.

சந்திராஷ்டமம் - 17-01-2023 பகல் 01.00 மணி முதல் 19-01-2023 பகல் 03.17 மணி வரை.

பிப்ரவரி.

மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய காலமாகும். சனி, சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகி அனுகூலப் பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவப் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பைரவர், தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 13-02-2023 இரவு 08.37 மணி முதல் 15-02-2023 இரவு 12.45 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 11-ல் சனி, மாத முற்பாதியில் சூரியன், புதன் 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணம் வரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிட்டும். சொந்த வீடு, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உங்கள் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். அஷ்டலட்சுமி, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 13-03-2023 அதிகாலை 02.18 மணி முதல் 15-03-2023 காலை 07.33 மணி வரை.

ஏப்ரல்.

ராசியாதிபதி செவ்வாய் 3-ல், சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்தால் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் உண்டாகும். சூரியன் 12-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் சாதகப் பலன்களை அடைய முடியும். சிவனையும், அம்மனையும் வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் - 09-04-2023 காலை 08.01 மணி முதல் 11-04-2023 பகல் 12.58 மணி வரை.

மே.

ஜென்ம ராசியில் ராகு, 1,2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் குழப்பங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். சனி 11-லும், மாத தொடக்கத்தில் செவ்வாய் 3-லும் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 06-05-2023 மாலை 03.22 மணி முதல் 08-05-2023 இரவு 07.10 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். இதனால் கடந்த காலங்களில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். முருகரையும், அஷ்டலட்சுமியையும் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 02-06-2023 இரவு 12.28 மணி முதல் 05-06-2023 அதிகாலை 03.23 மணி வரை மற்றும் 30-06-2023 காலை 10.20 மணி முதல் 02-07-2023 பகல் 01.18 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லது நடக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சர்பேஸ்வரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 27-07-2023 இரவு 07.29 மணி முதல் 29-07-2023 இரவு 11.35 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசியில் ராகு, மாத முற்பாதியில் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன், உடல் சோர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும், ராசியதிபதி செவ்வாய் மாத பிற்பாதியில் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடைவீர்கள். அசையும், அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். சிவனையும், விநாயகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 24-08-2023 அதிகாலை 02.54 மணி முதல் 26-08-2023 காலை 08.37 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சகல விதத்திலும் மேன்மையை தரக்கூடிய இனிய அமைப்பாகும். தாராள தனவரவுகள், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலப் பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். மகாலட்சுமி, குரு பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 20-09-2023 காலை 08.45 மணி முதல் 22-09-2023 மாலை 03.35 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருந்து உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். செவ்வாய், கேது 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் கடன்கள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்த வரை சிக்கனமாகவும், ஆடம்பர செலவுகளைக் குறைத்து கொள்வதும் நல்லது. முருக வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 17-10-2023 பகல் 02.20 மணி முதல் 19-10-2023 இரவு 09.03 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் விலகி அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் பேச்சை குறைப்பது நல்லது. சிவன், முருக வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம் - 13-11-2023 இரவு 09.17 மணி முதல் 16-11-2023 அதிகாலை 03.00 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதையும் சமாளித்து ஏற்றமானப் பலனை பெறுவீர்கள். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். முருக வழிபாடு, துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 11-12-2023 காலை 06.10 மணி முதல் 13-12-2023 பகல் 11.05 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - ஆழ்சிவப்பு                               கிழமை - செவ்வாய்

கல் - பவளம்               திசை - தெற்கு                          தெய்வம் - முருகன்

No comments: