Saturday, December 24, 2022

மீனம் - புத்தாண்டு பலன் - 2023

 



மீனம் - புத்தாண்டு
பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

கம்பீரமான தோற்றமும், சிறப்பான உடல் அமைப்பும், உதவி செய்யக்கூடிய பண்பும் கொண்ட மீன ராசி நேயர்களே, நவகிரகங்களில் முழு சுப கிரகமான குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசி அதிபதி குரு 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும், 22-04-2023 முதல் தன ஸ்தானமான 2-ல் சாதகமாக சஞ்சரிக்க இருப்பதால் முதல் மூன்று மாதங்கள் நீங்கள் சமாளித்து விட்டால் ஏப்ரலுக்கு பிறகு உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை ஏப்ரலுக்கு பிறகு மேற்கொண்டால் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு தற்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க கூடிய சனி வரும் 17-01-2023 முதல் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி தொடங்குகிறது. இதன் காரணமாக வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களிலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தூரப் பயணங்களை தள்ளி வைப்பது குறிப்பாக இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்ப்பது நல்லது.

ஏழரைச் சனியின் காரணமாக எதிர்பாராத வகையில் கடன் வாங்க நேரிடும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, சக்திக்கு மீறி செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கடன் வாங்கக்கூடிய நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தேவையான மருத்துவ பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்வது நல்லது.

உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள், ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

தேவையற்ற நெருக்கடிகளை பொருளாதார ரீதியாக சந்திக்க நேர்ந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் அரங்கேறும். கணவன்- மனைவி இடையே சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை நிலவும். அசையா சொத்துகளால் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் ஆதரவாக செயல்படுவார்கள்.

உத்தியோகம்

உங்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கான சன்மானம் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் பணியில் கவனம் செலுத்துவதில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியூர் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் இருக்காது. வேலையாட்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும் காலம் என்பதால் அனைத்து செயலிலும் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையொழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர் தொடர்புகளால் சிறு சிறு அனுகூலங்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.

கொடுக்கல்- வாங்கல்

உடனிருப்பவர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்கு நிம்மதி குறையும் என்றாலும் பணவரவுகள் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும், வலிமையும் கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல்படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்

பெயர், புகழ் சுமாராக இருக்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது சாதித்து விடுவீர்கள். வீண் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

கலைஞர்கள்

பணவரவுகள் திருப்தி அளிப்பதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன், நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும் என்றாலும் அதனால் சாதகபலனும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் உங்கள் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இடையூறுகள் ஏற்படும். பட்டபாட்டிற்கான முழு பலனை சிறு தடைக்கு பின்பு அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு, வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மாணவ- மாணவியர்

நீங்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுக்க முடியும். கல்வியில் ஞாபக மறதி ஏற்பட்டு படித்ததெல்லாம் தக்க சமயத்தில் ஞாபகத்திற்கு வராமல் போகும் நேரம் என்பதால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். உடல்நல குறைபாட்டால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க நேரிடும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளின் கவனமுடன் செயல்படுவது நல்லது.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய் 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்பட்டு உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழில் ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி மனநிம்மதி உண்டாகும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் ஏற்படும். துர்க்கை, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 15-01-2023 காலை 06.48 மணி முதல் 17-01-2023 பகல் 01.00 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் புதன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலையும் லாபங்களும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். சர்பேஸ்வரர் வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 11-02-2023 பகல் 01.02 மணி முதல் 13-02-2023 இரவு 08.37 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழில், வியாபார ரீதியாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். பெரிய முதலீடு கொண்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த கெடுபிடிகள் விலகி பதவி உயர்வுகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம் - 10-03-2023 மாலை 06.35 மணி முதல் 13-03-2023 அதிகாலை 02.18 மணி வரை.

ஏப்ரல்.

ஜென்ம ராசிக்கு 1, 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடி இருந்தாலும் வரும் 22-ஆம் தேதி முதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். எதிர்பார்த்து காத்திருந்த நல்லசெய்தி ஒன்று கிடைக்கப் பெற்று மனநிறைவு தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும், லாபங்களும் தேடி வரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 07-04-2023 அதிகாலை 01.10 மணி முதல் 09-04-2023 காலை 08.01 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் உண்டாகி மகிழ்ச்சியை அளிக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். விநாயகர், அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 04-05-2023 காலை 09.20 மணி முதல் 06-05-2023 மாலை 03.22 மணி வரை மற்றும் 31-05-2023 மாலை 06.30 மணி முதல் 02-06-2023 இரவு 12.28 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ராகு 2-ல் உள்ளதால் கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதி உண்டாகும். கடன்கள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்கையம்மனையும், பைரவரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 28-06-2023 அதிகாலை 03.27 மணி முதல் 30-06-2023 காலை 10.20 மணி வரை.

ஜுலை.

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாத முற்பாதியில் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆஞ்சநேயரையும், அம்மனையும் வழிபாடு செய்யும்.

சந்திராஷ்டமம் - 25-07-2023 பகல் 11.13 மணி முதல் 27-07-2023 இரவு 07.29 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் செவ்வாய், பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகி முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்களை பைசல் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அம்மன் வழிபாடு, பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 21-08-2023 மாலை 05.30 மணி முதல் 24-08-2023 அதிகாலை 02.54 மணி வரை.

செப்டம்பர்.

குரு 2-ல், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வம்பு, வழக்குகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத ஊதிய உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். முருகரையும், மகாலட்சுமியையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 17-09-2023 இரவு 11.08 மணி முதல் 20-09-2023 காலை 08.45 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொ-றுமையுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவன், முருகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 15-10-2023 அதிகாலை 05.20 மணி முதல் 17-10-2023 பகல் 02.20 மணி வரை.

நவம்பர்.

ஜென்ம ராசிக்கு 8, 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும், முடிந்தவரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குரு 2-ல் உள்ளதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழிலில் சாதகமான பலன்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். சிவனையும் முருகரையும் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 11-11-2023 பகல் 01.00 மணி முதல் 13-11-2023 இரவு 09.17 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமும், எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய தைரியமும் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகளும் குறையும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் - 08-12-2023 இரவு 09.53 மணி முதல் 11-12-2023 காலை 06.10 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9          கிழமை - வியாழன், ஞாயிறு               திசை - வடகிழக்கு

கல் - புஷ்ப ராகம்   நிறம் - மஞ்சள், சிவப்பு    தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

No comments: