Saturday, December 24, 2022

கும்பம் - புத்தாண்டு பலன் - 2023



 கும்பம் - புத்தாண்டு பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

கும்பம்  ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

பிறர் விஷயத்தில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களுக்கு இக்கட்டான நிலையில் உதவி செய்யக்கூடிய நல்ல பண்பு கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் ராசி அதிபதி சனி இது நாள் வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்தார், தற்போது வரும் 17-01-2023 முதல் சனி திருக்கணிதபடி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடங்குகிறது. ஜென்மச் சனி நடைபெற உள்ளதால் உங்களின் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையில்லாத அலைச்சல், செய்யும் செயல்களில் சுறுசுறுப்பு இல்லாத நிலை, சக்திக்கு மீறிய வீண் செலவுகளை சந்திக்க கூடிய ஒரு நிலை ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அன்றாட பணிகளில் ஈடுபாடற்ற நிலை இருக்கும் என்பதால் முடிந்தவரை உங்கள் பணியில் அக்கறை செலுத்துவது நல்லது.

உங்களின் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருப்பது மட்டுமில்லாமல் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. மனைவி, பிள்ளைகள் வழியில் கூட தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் அவர்களது ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டிய நேரமாகும். ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்.

ஆண்டுக்கு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 22-04-2023 வரை தனஸ்தானமான 2-ல் பலமாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முதல் நான்கு மாத காலங்கள் உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரு சில எதிர்பாராத லாபங்களை பெற்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது நல்ல வாய்ப்புகள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

வரும் 22-04-2023-க்கு பிறகு குரு முயற்சி ஸ்தனமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருக்கும் என்பதால் திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் வரும் ஆண்டில் எளிதில் கைகூடும். பிள்ளைகள் வழியாக ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து சென்றால் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். கடினமான நெருக்கடியில் நீங்கள் இருந்தாலும் உரிய நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு செயல்படுவது நல்லது.

உங்கள் பெயரில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது, பிறரை நம்பி பண உதவி செய்வது போன்றவற்றை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக தவிர்க்க முடியாத காரணத்தால் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை இருந்தால் உங்கள் பெயரில் முதலீடு செய்யாமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் முதலீடு செய்வது நல்லது. அசையா சொத்து வகையில் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

சர்ப்ப கிரகமான ராகு 30-10-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், உடல் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத அளவிற்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களின் முன் கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும், வீண் பிரச்சினைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகம்

உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும் நேரமாகும். உங்கள் உழைப்பிற்கான ஊதியம் கிடைக்க சிலர் இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு பணியில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். உடல் அசதி காரணமாக சில நேரங்களில் பணியில் கவன குறைவு ஏற்படும். பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் தேவையற்ற போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள நேரிடும். சிலர் செய்யும் செயல்களால் எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சிக்கல்களை சந்திப்பீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நிலைமையை சமாளிக்க முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை உங்கள் பெயரில் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரமாகும். பொறுப்புகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து அளிப்பது மூலம் நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படாவிட்டால் கடன் வாங்க நேரிடும். தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் அனைத்து செயலிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெற அரும்பாடுபட வேண்டி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஒரளவுக்கு செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கலைஞர்கள்

கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எதிர்பாராத பயணங்களால் சற்று அலைச்சல், உடல் சோர்வு உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சந்தையில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இடையூறுகள் ஏற்படும். பங்காளி மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத காரணத்தால் விவசாய பணிகள் செய்வதில் தோய்வு, மன அமைதி குறைவு ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் பொறுமை காப்பது, உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மாணவ மாணவியர்

ஆரோக்கிய ரீதியாக இருக்கும் சிறுசிறு பாதிப்புகளால் சில நேரங்களில் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும், தேவையற்ற நட்புகளை தவிர்க்க வேண்டிய காலமாகும். கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும், பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மன நிம்மதியை தரும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் புதன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்களை பெறுவீர்கள். பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றமான பலனைப் பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். ஆஞ்சநேயரையும், முருகரையும் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 12-01-2023 இரவு 09.00 மணி முதல் 15-01-2023 காலை 06.48 மணி வரை.

பிப்ரவரி.

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பொருளாதார மேன்மை, நினைத்தது நிறைவேறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விநாயக பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 09-02-2023 அதிகாலை 02.50 மணி முதல் 11-02-2023 பகல் 01.02 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது, பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 08-03-2023 காலை 08.53 மணி முதல் 10-03-2023 மாலை 06.35 மணி வரை.

ஏப்ரல்.

ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தடைபட்ட திருமண முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். தொழில் ரீதியாக போட்ட முதலீட்டை எடுக்க முடியும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 04-04-2023 மாலை 04.05 மணி முதல் 07-04-2023 அதிகாலை 01.10 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். 10-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகப்பலன் ஏற்படும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விநாயகர் வழிபாட்டையும், அஷ்டலட்சுமி வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 01-05-2023 இரவு 12.20 மணி முதல் 04-05-2023 காலை 09.20 மணி வரை மற்றும் 29-05-2023 காலை 08.55 மணி முதல் 31-05-2023 மாலை 06.30 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டியதை அடைவீர்கள். தொழில், உத்தியோக ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களால் லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. ஜென்ம ராசியில் சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, முடிந்த வரை இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் சிறப்பான பலன்களை தரும்.

சந்திராஷ்டமம் - 25-06-2023 மாலை 04.50 மணி முதல் 28-06-2023 அதிகாலை 03.27 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு குரு 3-ல், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிபோகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 3-ல் ராகு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆஞ்சநேயர், பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 22-07-2023 இரவு 11.40 மணி முதல் 25-07-2023 பகல் 11.13 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபார ரீதியாக உங்களுக்கு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அவற்றை சமாளிக்கும் பலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருப்பது சிறப்பு. முருகரை வழிபடுவது, சனி ப்ரீதி செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 19-08-2023 அதிகாலை 05.40 மணி முதல் 21-08-2023 மாலை 05.30 மணி வரை.

செப்டம்பர்.

ஜென்ம ராசியில் சனி, 8-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது, பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. ஆஞ்சநேயரை, முருகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 15-09-2023 பகல் 11.35 மணி முதல் 17-09-2023 இரவு 11.08 மணி வரை.

அக்டோபர்.

ஜென்ம ராசியில் சனி, மாத முற்பாதியில் 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் செலுத்த முடியாது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 12-10-2023 மாலை 06.15 மணி முதல் 15-10-2023 அதிகாலை 05.20 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியில் முடியும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன் இல்லாத கன்னிய வாழ்க்கை அமையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகள் பாராட்டப்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். துர்க்கை, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 09-11-2023 அதிகாலை 02.00 மணி முதல் 11-11-2023 பகல் 01.00 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கூட்டாளிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். அஷ்டலட்சுமி வழிபாடு, சனி பகவானுக்கு விரதம் இருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 06-12-2023 காலை 10.20 மணி முதல் 08-12-2023 இரவு 09.53 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8             கிழமை - வெள்ளி, சனி                             திசை - மேற்கு

கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                    தெய்வம் - ஐயப்பன்

No comments: