Saturday, December 24, 2022

விருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2023 விருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

செவ்வாயின் ராசியின் பிறந்த நீங்கள் பார்ப்பதற்கு வெகுலியாக இருந்தாலும் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 30-10-2023 முடிய 6-ல் சஞ்சரிரிப்பதும், அதன் பிறகு கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் நினைத்ததை ஆண்டின் தொடக்கத்தில் முயற்சித்தால் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடக் கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்கள் எண்ணங்கள் நிறைவேற கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

வரும் 22-04-2023 முதல் குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குரு 6-ல் சஞ்சரிக்கும் பொழுது தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசிக்கு 2, 10, 12 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் எதிர்கொண்டு அணுகூலங்களை அடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனத்தோடு செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உங்கள் மீது வீண் பழிச் சொற்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது வெளி நபர்களிடம் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கக்கூடிய கிரகமான சனி வரும் 2023-ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ல் 17-01-2023 முதல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்க உள்ளது. இதன் காரணமாக அலைச்சல், டென்ஷன், வசதி வாய்ப்பு இருந்தாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அதிக வேலைப்பளு காரணமாக உங்களின் ஓய்வு நேரம் குறைய கூடிய ஒரு சூழல் உண்டாகும். அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பதால் மன அமைதி ஏற்படும். பயணங்களால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் உங்கள் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரலுக்குள் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.

உத்தியோகம்

பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தொழில், வியாபாரம்

உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் தடைபடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகள், தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எடுத்த ஆடர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்காது என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும்.

அரசியல்

மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது இருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டி இருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள்

எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலையும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் வளமான பலனை பெற முடியும். தூர பயணங்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் படபிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறை பாடுபட வேண்டி இருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாது இருப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது மிகவும் நல்லது.

மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றி பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். தாராள தனவரவுகள், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் நிலை உண்டாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். செல்வம், செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 05-01-2023 காலை 08.05 மணி முதல் 07-01-2023 இரவு 08.23 மணி வரை.

பிப்ரவரி.

ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு, 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத முற்பாதியில் சூரியன் 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சரளமாக அமைந்து நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பால் நற்பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடையலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். பைரவரையும், விஷ்ணுவையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 01-02-2023 பகல் 02.00 மணி முதல் 04-02-2023 அதிகாலை 02.30 மணி வரை மற்றும் 28-02-2023 இரவு 08.32 மணி முதல் 03-03-2023 காலை 08.58 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசிக்கு 4, 5-ல் புதன், 5-ல் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்தொழில், வியாபார ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு உண்டாகும். 4, 5-ல் சூரியன், 7, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 28-03-2023 அதிகாலை 04.25 மணி முதல் 30-03-2023 மாலை 04.15 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பாராத வகையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குறிப்பாக இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்களும், பொருளாதார உயர்வுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற பாராட்டுதல்களும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். முருகரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 24-04-2023 பகல் 01.13 மணி முதல் 26-04-2023 இரவு 12.18 மணி வரை.

மே.

ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிறைந்திருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். குரு 6-ல் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருக்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் சிறுசிறு அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறமுடியும். சனி ப்ரீதி செய்வது மகாலட்சுமியை தரிசிப்பது நல்லது.

சந்திராஷ்டமம் - 21-05-2023 இரவு 09.46 மணி முதல் 24-05-2023 காலை 08.26 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் கடன் வாங்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் குறையும். சிவ வழிபாடு, தட்சிணாமூரத்திக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 18-06-2023 அதிகாலை 05.12 மணி முதல் 20-06-2023 மாலை 03.58 மணி வரை.

ஜுலை.

மாத முற்பாதியில் 8-ல் சூரியன், 6-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ராகு 6-ல், சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடு கொண்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி, விஷ்ணு  வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 15-07-2023 பகல் 11.23 மணி முதல் 17-07-2023 இரவு 10.30 மணி வரை.

ஆகஸ்ட்.

ராசியதிபதி செவ்வாய் 10, 11-ல், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 11-08-2023 மாலை 04.58 மணி முதல் 14-08-2023 அதிகாலை 04.25 மணி வரை.

செப்டம்பர்.

செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். அர-சு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக ரீதியாக பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். விஷ்ணு வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 07-09-2023 இரவு 11.13 மணி முதல் 10-09-2023 காலை 10.25 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து ஏற்றங்களை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார ரீதியாக உயர்வுகள் ஏற்பட்டு உங்களுக்கிருந்த கடன் பிரச்சினைகள் அனைத்தும் விலகி மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 05-10-2023 காலை 06.58 மணி முதல் 07-10-2023 மாலை 05.18 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 12 மற்றும் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மனநிம்மதி குறையும். நீங்கள் நல்லது சொன்னால் கூட மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளும் நேரம் என்பதால் பேச்சை குறைத்துக் கொள்வது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிவன், அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 01-11-2023 மாலை 04.10 மணி முதல் 04-11-2023 அதிகாலை 01.23 மணி வரை மற்றும் 29-11-2023 அதிகாலை 01.40 மணி முதல் 01-12-2023 காலை 10.12 மணி வரை.

டிசம்பர்.

மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. பணவரவுகள் ஒரளவு சிறப்பாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். சிவபெருமானையும் முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 26-12-2023 காலை 09.57 மணி முதல் 28-12-2023 மாலை 06.37 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,        கிழமை - செவ்வாய், வியாழன்

கல் - பவளம்,                              திசை - தெற்கு                          தெய்வம் - முருகன்

No comments: