Saturday, December 24, 2022

தனுசு - புத்தாண்டு பலன் - 2023



தனுசு - புத்தாண்டு
பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

பிறருக்கு உதவி செய்வதில் முன் நின்று செயல்படக்கூடிய தனுசு ராசி நேயர்களே, நவகிரகங்களில் முழு சுப கிரகமான குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எதை செய்வதென்றாலும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து செய்யும் திறன் கொண்டவராக செயல்படுவீர்கள். வரும் 2023-ஆம் ஆண்டில் உங்களுக்கு இது நாள் வரை நடைபெற்று வந்த ஏழரைச் சனி 17-01-2023-ல் முழுமையாக முடிவதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கடந்த கால மருத்துவ செலவுகள் குறைய கூடிய நிலை நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடலில் ஒரு நல்ல முன்னேற்றம் வருகின்ற நாட்களில் ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார சங்கடங்கள் எல்லாம் முழுமையாக குறைந்து மன நிம்மதி அடைவீர்கள்.

பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். தொழில் ரீதியாக கடுமையான தேக்க நிலையை எதிர்கொண்ட உங்களுக்கு வரும் நாட்கள் சந்தை சூழ்நிலை முற்றிலும் உங்களுக்கு சாதகமாக மாறி உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல லாபங்களும் சமுதாயத்தில் ஒரு நல்ல உயர்வும் கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக விலகும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு நட்புடன் பழகக் கூடிய ஒரு சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த கால வேலைபளு எல்லாம் குறைந்து சுபிட்சமான நிலை ஏற்படும்.

ஆண்டின் தொடக்கத்தில் சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குருபகவான் வரும் 22-04-2023 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். ஏப்ரலுக்கு பிறகு உங்களது பலமும், வலிமையும் மேலும் அதிகரிக்கும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலை ஏற்படும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் அரங்கேறும். பூர்வீக சொத்து ரீதியாக நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைக்கு எல்லாம் வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமாக நல்ல தீர்வு கிடைக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு வரும் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. நீங்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை அடைய முடியும்.

வரும் 2023-ஆம் ஆண்டில் சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 5-லும், கேது 11-லும் 30-10-2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளனர். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பல்வேறு அணுகூலமான பலன்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு சிறப்பான அமைப்பாகும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. உறவுகளை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் மேலும் வளமான பலன்களை வரும் 2023-ஆம் ஆண்டில் அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். எதிலும் புதுத் தெம்புடனும் பொலிவுடனும் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவ செலவுகள் யாவும் குறையும். உணவு விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பதும், நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அஜீரண கோளாறுகள் உண்டாக்குவதை தவிர்க்க உதவும்.

குடும்பம் பொருளாதார நிலை

மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கை கூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர வழியில் மன கவலை உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வாழ்வில் நல்லது நடக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி, மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும்.

உத்தியோகம்

கடந்த கால நெருக்கடிகள் விலகி பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். செய்யும் வேலைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் கிட்டும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிக லாபம் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். திறமை உள்ள வேலையாட்கள் கிடைப்பார்கள்.

கொடுக்கல் வாங்கல்

பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிடைக்கும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வெற்றிக் கிட்டும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றியும் சிறப்பான லாபங்களும் உண்டாகும்.

அரசியல்

உங்களது பெயர், புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் எல்லாம் எளிதில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்கள் நற்பலனை தரும்.

கலைஞர்கள்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்ல நேரிடும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மறைந்து மன நிம்மதி உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலை அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

மாணவ மாணவியர்

மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். போட்டி தேர்வுகளில் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உங்களுக்கு இருந்த மந்த நிலை மாறி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஜென்ம ராசி மற்றும் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் குரு 4-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருக்கவும். தொழில், வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 07-01-2023 இரவு 08.23 மணி முதல் 10-01-2023 காலை 09.00 மணி வரை.

பிப்ரவரி.

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிக்கும். தட்சிணாமூர்த்தி, துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 04-02-2023 அதிகாலை 02.30 மணி முதல் 06-02-2023 மாலை 03.03 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 3-ல் சூரியன், சனி, 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். கடந்த கால நெருக்கடிகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது, மற்றவர்களை நம்பி வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது நல்லது. சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்குதல், புது வீடு குடிபுகும் யோகம் போன்றவை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக ஏற்றமிகுப் பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சர்பேஸ்வரரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 03-03-2023 காலை 08.58 மணி முதல் 05-03-2023 இரவு 09.30 மணி வரை மற்றும் 30-03-2023 மாலை 04.15 மணி முதல் 02-04-2023 அதிகாலை 04.48 மணி வரை.

ஏப்ரல்.

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 5-ல் புதன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். வரும் 22-ஆம் தேதி முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படவும். தேவையற்ற பயணங்களினால் அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப்பெற்று பெயர், புகழ் உயரும். கடன்கள் படிப்படியாக குறையும். சிவனையும், முருகரையும் வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 26-04-2023 இரவு 12.18 மணி முதல் 29-04-2023 பகல் 12.48 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் மாதமாக இம்மாதம் இருக்கும். உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தாராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்து விட முடியும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகரையும், துர்க்கையம்மனையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 24-05-2023 காலை 08.26 மணி முதல் 26-05-2023 இரவு 08.50 மணி வரை.

ஜுன்.

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்பு, அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து ரீதியாக உள்ள சிக்கல் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். முருகர் வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 20-06-2023 மாலை 03.58 மணி முதல் 23-06-2023 அதிகாலை 04.18 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 5-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். 5-ல் குரு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவிற்கு எந்தவிதத்திலும் குறை இருக்காது. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன் பிரச்சினைகளும் குறையும். 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். சிவன், துர்கையம்மன் வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம் - 17-07-2023 இரவு 10.30 மணி முதல் 20-07-2023 காலை 10.55 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு செவ்வாய் 9, 10-ல் சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உறவினர்களிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அசையா சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். பாம்பு புற்றுக்கு பால் விடுவது, உக்கர தெய்வங்களை தரிசிப்பது நன்மையை தரும்.

சந்திராஷ்டமம் - 14-08-2023 அதிகாலை 04.25 மணி முதல் 16-08-2023 மாலை 04.58 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், மறைமுக எதிர்ப்புகள் குறையும் சூழல் உண்டாகும். சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், நவீன கருவிகளை வாங்கும் யோகமும் உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அம்மன் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 10-09-2023 காலை 10.25 மணி முதல் 12-09-2023 இரவு 11.00 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி முன்னேற்றத்தை அடைய முடியும். தொழில், வியாபார அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த பண உதவிகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருப்பதுடன் எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைக்கும். துர்க்கை, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 07-10-2023 மாலை 05.18 மணி முதல் 10-10-2023 அதிகாலை 05.45 மணி வரை.

நவம்பர்.

சனி 3-ல், மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் பலம் உண்டாகும். உங்களது மதிப்பு, மரியாதை மேலோங்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் எதிலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள், நெருக்கடிகள் யாவும் விலகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கவனத்துடன் கையாண்டால் லாபம் கிடைக்கும். உக்ர தெய்வங்களை வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 04-11-2023 அதிகாலை 01.23 மணி முதல் 06-11-2023 பகல் 01.22 மணி வரை.

டிசம்பர்.

சூரியன், செவ்வாய் 12-ல் மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். முன்கோபத்தையும், பேச்சையும் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஒரளவுக்கு நற்பலனை பெற முடியும். குடும்பத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். சனி 3-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்களது சிக்கல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் தனி திறமையால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் லாபங்களை அடைய முடியும். சிவ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 01-12-2023 காலை 10.12 மணி முதல் 03-12-2023 இரவு 09.35 மணி வரை மற்றும் 28-12-2023 மாலை 06.37 மணி முதல் 31-12-2023 அதிகாலை 05.42 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9          நிறம் - மஞ்சள், பச்சை              கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்   திசை - வடகிழக்கு                      தெய்வம் - தட்சிணா மூர்த்தி

No comments: