Saturday, December 24, 2022

கன்னி - புத்தாண்டு பலன் - 2023

 கன்னி - புத்தாண்டு
பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

புதனின் ஆதிக்கத்தில் பிறந்து சூழலுக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2023 ஆம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றல், பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், இருக்கும் இடத்தில் உங்களுடைய பெயர், புகழ், செல்வாக்கு மேலோங்க கூடிய யோகம் உண்டாகும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறையும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு தற்போது நல்லபடியாக நடந்து கொள்வார்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்கும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை எட்ட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவியை அடையும் யோகம், வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக அனுகூலமான பலனை அடையும் வாய்ப்பு உண்டாகும்.

ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 வரை சம சப்தமஸ்தானமான 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூட கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 22-04-2023-க்கு பிறகு குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். குரு 8-ல் சஞ்சரிக்க கூடிய காலத்தில் சனி 6-ல் சஞ்சரிக்கும் என்பதால் எதையும் சமாளித்து அனுகூலங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.

சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு, கேது இவ்வாண்டில் 30-10-2023 வரை கேது 2-லும், ராகு 8-லும் அதன் பிறகு கேது ஜென்மத்திலும் ராகு 7-லும் சஞ்சரிக்க இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது, இரவு பயணங்களை தவிர்ப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

குறிப்பாக 2023-ஆம் ஆண்டில் சனி பகவான் 6-ல் வலுவாக சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்க்கை தரமானது சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, உங்களின் நீண்ட நாளைய கனவுகளை வரும் நாட்களில் நிறைவேற்றக்கூடிய ஒரு யோகம் உண்டாகும். வீடு, மனை வாங்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற முடியும். நீண்ட நாட்களாக சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை சிறப்பாகி மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் ஏப்ரலுக்குள் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.

உத்தியோகம்

கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முற்றிலும் மறைந்து செய்யும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுபடுத்தும் யோகம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகி உங்களுக்குள்ள சிக்கல்கள் எல்லாம் முழுமையாக குறையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

கலைஞர்கள்

வரவேண்டிய பணவரவுகளில் இருந்த இழுபறி நிலை விலகி தக்க நேரத்தில் வந்து சேரும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து பெயர், புகழ் உயரும். வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல நிலை ஏற்பட்டு மன நிம்மதி ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி, மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பண விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் மன நிம்மதி உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். மண வயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். அழகிய குழந்தையை பெற்று எடுக்கும் யோகம் இவ்வாண்டில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள்.

மாணவ- மாணவியர்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்க கூடிய வாய்ப்பு உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்களால் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைய முடியும். சிவபெருமானையும் துர்க்கையம்மனையும் வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 31-12-2022 பகல் 11.45 மணி முதல் 02-01-2023 இரவு 08.50 மணி வரை மற்றும் 27-01-2023 மாலை 06.35 மணி முதல் 30-01-2023 அதிகாலை 02.45 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்புடன் முன்னேற்றமான பலன்களை அடையும் யோகம் உண்டு. துர்கையம்மன், முருகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 24-02-2023 அதிகாலை 03.43 மணி முதல் 26-02-2023 காலை 10.15 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசிக்கு மாத முற்பாதியில் 6-ல் சூரியன், பிற்பாதியில் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயர்வது மட்டுமின்றி எதிலும் முன்னேற்றங்களும் உயர்வுகளும் உண்டாகும். கடன்கள் பைசலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். சர்பேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 23-03-2023 பகல் 02.08 மணி முதல் 25-03-2023 இரவு 07.25 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - 19-04-2023 இரவு 11.53 மணி முதல் 22-04-2023 அதிகாலை 05.00 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு. தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஓற்றுமையுடன் செயல்படுவார்கள். சூரியன், குரு, ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஓற்றுமை நிலவும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. சிவன், விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 17-05-2023 காலை 07.38 மணி முதல் 19-05-2023 பகல் 01.35 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த காலப் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 13-06-2023 பகல் 01.32 மணி முதல் 15-06-2023 இரவு 08.23 மணி வரை.

ஜுலை.

மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், சனி 6-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் விருத்திக்காக எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு, ராகு 8-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அசையும், அசையா சொத்துக்களால் ஒரு சில விரயங்கள் உண்டாகும்உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் சில நேரங்களில் உங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 10-07-2023 மாலை 06.59 மணி முதல் 13-07-2023 அதிகாலை 01.58 மணி வரை.

ஆகஸ்ட்.

சனி 6-ல், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதன் மூலம் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும் 8-ல் குரு, 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து உங்கள் வாழ்க்கை தரம் உயரும். கடந்த கால நெருக்கடிகள் குறையும். கேது 2-ல், ராகு 8-ல் இருப்பதால் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல்களில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்தும் போது கவனமாக கையாள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். துர்க்கையம்மனையும், முருகரையும் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 07-08-2023 அதிகாலை 01.43 மணி முதல் 09-08-2023 காலை 07.42 மணி வரை.

செப்டம்பர்.

ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். பணவரவுகள் ஒரளவுக்குச் சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க இடையூறு ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது சிறப்பு, சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 03-09-2023 காலை 10.38 மணி முதல் 05-09-2023 மாலை 03.00 மணி வரை மற்றும் 30-09-2023 இரவு 09.10 மணி முதல் 02-10-2023 இரவு 12.15 மணி வரை.

அக்டோபர்.

ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது சிறப்பு. வேலையாட்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதுடன் சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். சிவ வழிபாடும், குருவுக்கு தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 28-10-2023 காலை 07.30 மணி முதல் 30-10-2023 காலை 10.28 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் சூரியன், செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார நிலையில் உயர்வான நிலைகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். கடன்கள் அனைத்தும் குறையும். துர்க்கை, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 24-11-2023 மாலை 04.00 மணி முதல் 26-11-2023 இரவு 07.55 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், உத்தியோக ரீதியாகவும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தட்சிணாமூர்த்தி வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 21-12-2023 இரவு 10.08 மணி முதல் 24-12-2023 அதிகாலை 03.17 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8                   நிறம் - பச்சை, நீலம்           கிழமை - புதன், சனி

கல்மரகத பச்சை              திசை - வடக்கு          தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: