Saturday, December 24, 2022

மகரம் - புத்தாண்டு பலன் - 2023



 மகரம் - புத்தாண்டு பலன் - 2023

 

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர்- பாலஜோதிடம் ( வார இதழ் )

 

மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் உங்களுடைய லட்சியங்களை நிறைவேற்றுவதில் மன உறுதியோடு செயல்படும் மகர ராசி நேயர்களே, சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு இது நாள் வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி வரும் 17-01-2023 முதல் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி முடிந்தாலும் பாத சனி தொடரும். உங்கள் உடல் ஆரோக்கியமானது சற்று சிறப்பாக இருக்கும். குடும்ப ஸ்தானமான 2-ல் சனி சஞ்சரிக்க இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு செயல்படுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். பொருளாதார நிலையானது முன்பை விட தற்போது உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 22-04-2023 வரை 3-ஆம் வீட்டிலும் அதன் பிறகு 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளார். 2023-ஆம் ஆண்டில் பண விஷயத்தில் நீங்கள் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது குறிப்பாக கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருக்கும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்பு உண்டு.

தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களை தற்காலிகமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக உங்கள் பெயரில் முதலீடு செய்வதை விட குடும்ப உறுப்பினர்கள் பெயரில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தொழிலில் ஒரு சில அனுகூலமான பலன்களை அடைய முடியும். உத்தியோக ரீதியாக உங்கள் பணியில் கவனத்தோடு செயல்படுவது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், ஓய்வு நேரம் குறைய கூடிய ஒரு சூழல் உண்டாகும்.

சர்ப்ப கிரகமான ராகு, கேது 30-10-2023 வரை 4-ல் ராகு, 10-ல் கேது என சஞ்சரிக்க இருக்கின்றனர். குறிப்பாக வண்டி, வாகனங்கள் மூலம் வீண் செலவுகள், அசையா சொத்துக்கள் மூலமாக எதிர்பாராத செலவுகளை வரும் நாட்களில் எதிர்கொள்ள நேரிடும். 2023-ஆம் ஆண்டில் நீங்கள் எதிலும் சற்று சிக்கனத்தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கலாம்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களால் உடல் நிலையில் சோர்வு ஏற்படும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக பணவரவுகளில் முன்னேற்றம் இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நல்லது நடக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்

பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் சிறு தடைகளுக்குப் பின் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக கிடைக்கும். பணியில் வீண் அலைச்சல், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என்றாலும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகி ஏற்றம் அடைவீர்கள்.

அரசியல்

பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். பெரியோர்களின் ஆசியால் ஒரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு.

கலைஞர்கள்

பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்களால் மன அமைதி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உடன் இருப்பவர்களிடம் பேச்சில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் உதவியால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நெருங்கியவர்களின் உதவியால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக அமையும்.

மாணவியர்

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை ஏற்படும் நேரம் என்பதால் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் வீண் வாக்கு வாதங்களை குறைத்து கொண்டு படிப்பில் கவனமாக செயல்பட்டால் நற்பெயரை பெறுவீர்கள்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 12, 1-ல் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் மன நிம்மதி குறைவுகள், வீண் செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு கெடுதியை குறைக்கும்.

சந்திராஷ்டமம் -10-01-2023 காலை 09.00 மணி முதல் 12-01-2023 இரவு 09.00 மணி வரை.

பிப்ரவரி.

ஜென்ம ராசியில் சூரியன், 3-ல் குரு, 4-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சுக்கிரன் ஜென்ம ராசியில் உள்ளதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் புத்திர வழியில் சில நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேக்க நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது-. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், நிம்மதி குறைவு ஏற்படும். துர்க்கை, சிவனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 06-02-2023 மாலை 03.03 மணி முதல் 09-02-2023 அதிகாலை 02.50 மணி வரை.

மார்ச்.

இம்மாத பிற்பாதியில் 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலமும் வலிமையும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் சற்று குறையும். கடந்த கால பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

சந்திராஷ்டமம் - 05-03-2023 இரவு 09.30 மணி முதல் 08-03-2023 காலை 08.53 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன், 6-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலக கூடிய அமைப்பு, உடல் ஆரோக்கியத்தில் பலமும், வலிமையும் கூடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பேச்சில் பொறுமையுடன் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். துர்க்கை, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 02-04-2023 அதிகாலை 04.48 மணி முதல் 04-04-2023 மாலை 04.05 மணி வரை மற்றும் 29-04-2023 பகல் 12.48 மணி முதல் 01-05-2023 இரவு 12.20 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை-குறையும். வரும் 10-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் அலைச்சலும் அதன் மூலம் பண விரயங்களும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். சிவனையும், விநாயகரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 26-05-2023 இரவு 08.50 மணி முதல் 29-05-2023 காலை 08.55 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உடனிருப்பவர்களின் உதவியால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். தேவையற்ற அலைச்சலால் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முருகரையும், மகாவிஷ்ணுவையும் வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 23-06-2023 அதிகாலை 04.18 மணி முதல் 25-06-2023 மாலை 04.50 மணி வரை.

ஜுலை.

மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் 4-ல் குரு, ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, வண்டி, வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்துக் கொண்டு கவனமாக செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் ஒரளவுக்கு குறைந்து லாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சற்று சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் குறையும். முருகர், துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 20-07-2023 காலை 10.55 மணி முதல் 22-07-2023 இரவு 11.40 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, 4-ல் குரு, ராகு, 7, 8-ல் சூரியன், மாத முற்பாதியில் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். உடனிருப்பவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள், பொருளாதார ரீதியாக தேக்க நிலை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்ப ஒற்றுமை குறையும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரையும் அம்மனையும் வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 16-08-2023 மாலை 04.58 மணி முதல் 19-08-2023 அதிகாலை 05.40 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் ராகு, மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. அசையா சொத்துகளாலும், வண்டி வாகனங்களாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். அஷ்டலட்சுமி வழிபாடு, சனி ப்ரீதி செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 12-09-2023 இரவு 11.00 மணி முதல் 15-09-2023 பகல் 11.35 மணி வரை.

அக்டோபர்.

குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக உள்ள நெருக்கடிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். அரசு வகையில் ஒருசில அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். சிலருக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். துர்க்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 10-10-2023 அதிகாலை 05.45 மணி முதல் 12-10-2023 மாலை 06.15 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 10, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். நவீன பொருட்கள் வாங்கக் கூடிய யோகம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எடுக்கும் பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் தொடர்புகளால் லாபமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். அஞ்சநேயர் வழிபாடு சுபிட்சத்தை அளிக்கும்.

சந்திராஷ்டமம் - 06-11-2023 பகல் 01.22 மணி முதல் 09-11-2023 அதிகாலை 02.00 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான நிலை என்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுகளால் உங்களது பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். பொன், பொருள் சேரும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகி அபிவிருத்தி பெருகும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 03-12-2023 இரவு 09.35 மணி முதல் 06-12-2023 காலை 10.20 மணி வரை மற்றும் 31-12-2023 அதிகாலை 05.42 மணி முதல் 02-01-2024 மாலை 06.28 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8     நிறம் - நீலம், பச்சை           கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்            திசை - மேற்கு                           தெய்வம் - விநாயகர்

No comments: