Sunday, January 15, 2023

மிதுனம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

 



மிதுனம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சனி பல இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்தார். தற்போது ஏற்படும் மாற்றத்தால் திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்ற காரணத்தால் வருகின்ற நாட்களில் வளமான பலன்கள் ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மன நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து செல்வம், செல்வாக்கு உயரும் யோகம், நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வீடு வாங்கக்கூடிய யோகமும், புதிதாக வீடு கட்டக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் கடந்த கால மருத்துவ செலவுகள் எல்லாம் படிப்படியாக குறையும். பண பரிவர்த்தனை விஷயங்களில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.

தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான லாபத்தை அடையும் யோகமும், தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகளும், சிலருக்கு புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த கால வேலை பளு எல்லாம் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமும், விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்களுக்கு தற்போது கிடைக்கும் இடமாற்றத்தின் காரணமாக குடும்பத்தோடு இணைந்து மன நிம்மதியுடன் இருக்க முடியும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலங்களும், நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.

சனி 9-ல் சஞ்சரிக்கும் இக்கால கட்டத்தில் ஆண்டுக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் 22-05-2023 முதல் 01-05-2024 வரை சஞ்சாரம் செய்ய எடுப்பது மிகவும் அற்புதமான ஒரு அமைப்பாகும். இக்காலங்களில் திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், குழந்தை பாக்கியம், உங்களின் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேற கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும். சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் 30-10-2023 முடிய சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது ஏற்பட இருக்கக்கூடிய சனிப்பெயர்ச்சியின் மூலமாக நீங்கள் எதிலும் தெம்போடும் சுறுசுறுப்போடும் செயல்படுவது மட்டுமில்லாமல் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு இருந்த உடல் ரீதியான பிரச்சினைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கியத்தோடு இருப்பதால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறுவது மட்டுமில்லாமல் கடந்த கால கடன்கள் குறையும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உற்றார்- உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ்ச்சி தரக்கூடிய சுப காரியங்கள் கைகூடும்.

கொடுக்கல்- வாங்கல்

உங்களுக்கு இருந்த தேக்க நிலை விலகி கொடுக்கல்- வாங்கல் ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். உங்களுக்கு வரவேண்டிய பண பாக்கிகள் அனைத்தும் தற்போது தக்க நேரத்தில் வந்தடைந்து அனைத்து விதமான நெருக்கடிகளும் குறையும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது நல்ல பலன் கிடைக்கப் போகிறது. தொழில் அபிவிருத்தி செய்யக்கூடிய யோகமும், தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் திறமை வாய்ந்த வேலை ஆட்கள் கிடைப்பார்கள்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் விலகக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள், நிலுவைத் தொகைகள் தற்போது கிடைத்து கடன்களை குறைத்துக் கொள்ள முடியும். சக ஊழியர்களுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் மன அமைதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும்.

அரசியல்

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடமான நிலை விலகி சமுதாயத்தில் உங்களது பெயர், புகழ் மேலோங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கக்கூடிய யோகமும், மக்கள் மத்தியில் உங்களது செல்வாக்கு அதிகரிக்க கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை அடைவீர்கள். கூலியாட்களுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும். அதிகப்படியான பணவரவால் விளைநிலங்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் கிடைக்கும். விவசாய நிலங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது உங்களுக்கு சாதகமாக மாறி நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள்

பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை, ஆடை, அணிகலன்களை வாங்கக் கூடிய யோகம், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். உடல் ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர் பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும்.

கலைஞர்கள்

உங்கள் தகுதிக்கான நல்ல வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த கவலைகள் எல்லாம் மறைந்து உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கக்கூடிய அளவிற்கு சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடிய யோகமும், அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.

மாணவ மாணவியர்

உங்களுக்கு இருந்த உடல் சோர்வுகள் விலகி படிப்பில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று நல்ல பெயர் எடுக்க முடியும். மேற்படிப்புக்காக ஒரு சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர் ஆசிரியரின் ஆதரவு மன மகிழ்ச்சியை உண்டாக்கும்.

 

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில்             17-01-2023 முதல் 14-03-2023 வரை

சனிபகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தனமான 9-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால கடன்கள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். பணப் பரிமாற்ற நிலை லாபகரமாக இருந்து உங்களுக்கு இருந்த கஷ்டங்கள் எல்லாம் குறையும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். பொருள் தேக்கங்கள் விலகி லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்து பணியில் நிம்மதியுடன் பணி புரிய முடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் கடினமான வேலைகளை கூட சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               15-03-2023 முதல் 17-06-2023 வரை

சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். 10-ல் சஞ்சரிக்கும் குரு 22-04-2023 முதல் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். தடைப்பட்ட மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். வீண் மருத்துவ செலவு குறைந்து சேமிக்கும் அளவிற்கு வளமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபங்களை அடைவீர்கள். திறமை வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளும், விரும்பிய இடம் மாற்றங்களும் கிடைத்து குடும்பத்துடன் இணையக் கூடிய ஒரு அற்புத நிலையும் உண்டாகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

சனிபகவான் வக்ர கதியில்                                18-06-2023 முதல் 04-11-2023 வரை

சனி உங்கள் ராசிக்கு 9-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. இந்த தருணத்தில் குரு, ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் பண வரவுக்கு எந்த விதத்திலும் குறைவு இருக்காது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது, தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடையலாம். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகள் சொல்படி நடந்து கொண்டால் ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். வெளியூர் பயணங்களை தற்காலிகமாக தள்ளி வைக்கவும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல் 23-11-2023 வரை

சனி பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவானது சிறப்பாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நவீன பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சர்ப்ப கிரகங்கள் 4, 10-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               24-11-2023 முதல் 06-04-2024 வரை

சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடும் நெருங்கியவர்களின் உதவியானது சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவமான சூழ்நிலை உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க முடியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் ஏற்படும். துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         07-04-2024 முதல் 29-06-2024 வரை

சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து சுபகாரியங்கள் கைகூடுவதற்கான யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் வாய்ப்பு, போட்ட முதலீட்டை விட அதிகப்படியான அனுகூலத்தை அடையும் யோகமும் உண்டாகும். கூட்டாளிகளுடைய ஆதரவானது சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை கிடைப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பிரித்தியங்கரா தேவி வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் வக்ர கதியில்                                30-06-2024 முதல் 15-11-2024 வரை

சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் தன காரகன் குரு 12-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டிய நேரம் ஆகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிலர் செய்யும் தவறுகளால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் ஆதரவாக இருந்தாலும் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனிக்கு எள் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               16-11-2024 முதல் 27-12-2024 வரை

சனி சதய நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடந்த கால கவலைகள் மறையும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு மன மகிழ்ச்சி அடையும் அளவிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         28-12-2024 முதல் 29-03-2025 வரை

சனி 9-ல் குரு நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். பணப்பரிமாற்ற விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்து நல்ல லாபத்தை அடைவீர்கள். கடன்கள் குறைவது மட்டும் இல்லாமல் சேமிக்கும் அளவிற்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். மறைமுக போட்டிகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். வம்பு, வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால் விடுவது நன்று.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,           நிறம் - பச்சை, வெள்ளை,       கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்            திசை - வடக்கு                தெய்வம் - விஷ்ணு

No comments: