மகரம் -
சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip
in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர்
- பால ஜோதிடம் (வார இதழ்)
No: 19/33 வடபழனி
ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600
026 இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
மகரம்
( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)
நவகிரகங்களில் சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கு ராசியாதிபதி சனி இதுநாள்
வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெற்றதால் சொல்ல முடியாத
துயரத்திற்கு ஆளானீர்கள். தற்போது ஏற்படக்கூடிய சனி மாற்றத்தின் மூலம் திருக்கணிதப்படி
வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026
வரை) சனி உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் ஏழரைச் சனியின் ஜென்மச் சனி முடிந்து
பாதச் சனி தொடங்குகிறது. சனி மாற்றத்தின் மூலமாக ஏழரைச்சனியில் முதல் ஐந்து வருடங்கள்
முடிகிறது. இயற்கையிலேயே சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் உங்களுக்கு அதிக கெடுதிகளை
தர மாட்டார். இதுநாள் வரை உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு
குறைந்து எதிலும் தைரியத்தோடு செயல்படக் கூடிய அமைப்பு, சுறுசுறுப்புடன் அனைத்து காரியங்களிலும்
செயல்படக்கூடிய பலம் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்து வந்த நெருக்கடிகள் மறைந்து
படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.
பொருளாதார ரீதியாக பண வரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களின் அனைத்து
தேவைகளும் பூர்த்தியாகும். பண பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது,
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சனி 2-ல் சஞ்சரித்து இருப்பதால் யோசித்துப்
பேசுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்து
செல்வது நல்லது. குறிப்பாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை
தவிர்க்கலாம்.
தொழில், வியாபார ரீதியாக படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். ஒவ்வொரு
செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். அதிக முதலீடுகள்
கொண்ட செயல்களில் யோசித்து செயல்படுவது, கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவது நன்மையை
தரும். சில நேரங்களில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் சற்று கவனத்தோடு
செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கக் கூடிய
பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் பணி சுமை சற்று கூடுதலாக இருக்கும். உடன் வேலை
செய்பவர்கள் சரியாக ஒத்தழைக்காத காரணத்தினால் அனைத்து வேலையும் உங்கள் தலையில் விழும்.
சில நேரங்களில் உங்களுக்கு ஓய்வு நேரம் குறையும். பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்கள்
பணியில் கவனத்தோடு செயல்பட்டால் ஒரு உயர்வான நிலையை அடைய முடியும். உங்கள் உழைப்புக்கான
சன்மானத்தை பெற சிறு சிறு இடையூறுகள் நிலவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள்
எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும தகுதிக்கு ஏற்ற வாய்ப்புகள்
கிடைக்கும். கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது.
சனி 2-ல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய
குருபகவான் 01-----05-2014 முதல் 14-05-2025 வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்கக்கூடிய
காலத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள்
கைக்கூடும். உங்களுக்குள்ள அனைத்து விதமான நெருக்கடிகளும் குறைந்து பல்வேறு வளமான பலன்களை
பெறக்கூடிய யோகம் உண்டு. தற்போது 4, 10-ல் சஞ்சரிக்க கூடிய சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு
அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகளை ஏற்படுத்தினாலும் வரும் 30-10-2023
முதல் 18-05-2025 வரை ராகு 3-ல், கேது 9-ல் சஞ்சரிக்க உள்ளதால் எதிர்பாராத அனுகூலங்கள்
ஏற்பட்டு இருக்கும் பிரச்சினைகள் குறையும் அமைப்பு, எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல்
உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்
என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து
செல்வது நல்லது. மனைவி மற்றும் பிள்ளைகள் வழியில் வீண் மருத்துவ செலவுகள், தேவையற்ற
மனக்கவலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது
நல்ல முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் காரணமாக உடல் அசதி இருக்கும் என்றாலும்
எதையும் சமாளிப்பீர்கள்.
குடும்பம்
பொருளாதார நிலை
நீங்கள் பேச்சில் நிதானத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற
கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முடியும். பண வரவுகள் சாதகமாக இருப்பதால் உங்களின் அனைத்து
தேவைகளும் பூர்த்தியாக கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக்
கொள்வது நல்லது. சுப காரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு நல்லது நடக்கும்.
கொடுக்கல்-
வாங்கல்
பண பரிமாற்ற விஷயங்களில் முன்பிருந்த நெருக்கடிகள் சற்று குறைந்து படிப்படியான
வளர்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.
கொடுக்கல்- வாங்கலில் நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்த
வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய
லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துகின்ற பொழுது கவனமாக செயல்படுவது
நல்லது.
தொழில்
வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றத்தை
அடையும் வாய்ப்பு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் அனைத்து
செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக கடன்
வாங்க நேரிடும். வெளி நபர்கள் மூலம் தொழிலில் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால்
பேச்சில் பொறுமையோடு இருப்பது நன்மையை தரும். கால நேரம் பார்க்காமல் கடினமாக உழைத்தால்
உயர்வான நிலையை எட்ட முடியும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற நல்ல வாய்ப்புகள்
கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் பழிச்சொற்கள் விலகி நல்ல பெயர் எடுக்க முடியும்.
எதிர்பார்க்கின்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு கூடுதலாகும் என்ற காரணத்தினால்
உங்களது ஓய்வு நேரம் குறையும். ஒரு சிலருக்கு ஏற்படக்கூடிய இடம் மாற்றத்தால் குடும்பத்தை
விட்டு பிரிந்து சென்று வெளியூர், வெளி மாநிலங்களில் பணிபுரிய நேரிடும்.
அரசியல்
உங்களுக்குள்ள கடந்த கால சோதனைகள் சற்று குறையும் என்றாலும் பேச்சால்
வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதையும் யோசித்துப் பேசுவது, முடிந்தவரை
விவாதங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை
குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதில் ஒரு சில இடையூறுகள் ஏற்படும். தலைவர்கள் ஆதரவு சிறப்பாக
இருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சாதகமாக இருந்தாலும் சந்தையில் நல்ல விலை கிடைப்பதில்
இடையூறுகள் ஏற்படும். பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் போட்ட முதலீட்டை எடுக்க அரும்பாடு
பட வேண்டி இருக்கும். கூலி ஆட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொருளாதார
ரீதியாக ஒரு சில அனுகூலங்கள் ஏற்பட்டு கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையும். பங்காளியிடம்
அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.
பெண்கள்
குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் பேச்சில் பொறுமையோடு
இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் மனக்கவலையை தரும்.
சுப காரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பிறகு நல்லது நடக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். மற்றவர்களுக்கு
வாக்குறுதி கொடுப்பதை தற்போதைக்கு தவிர்க்கவும்.
கலைஞர்கள்
உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் தொழில் போட்டி
காரணமாக ஒரு சில தேவையற்ற இடையூறுகளை சந்திப்பீர்கள். பணவரவுகள் சாதகமாக இருக்கும்.
பட வாய்ப்பு காரணமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். அலைச்சல்
காரணமாக உடல் அசதி ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாக கூடிய நேரமாகும்.
மாணவ மாணவியர்
படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். தேவையற்ற
நட்புகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் மற்றவரிடம் பழகுகின்ற பொழுது கவனத்தோடு
இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்கள் சொல்படி
கேட்டு நடந்து கொள்வதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் உங்கள் எதிர்காலத்திற்கு
நல்லது.
சனிபகவான்
அவிட்ட நட்சத்திரத்தில் 17-01-2023 முதல்
14-03-2023 வரை
ராசியாதிபதி சனி பகவான் 2--ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்
பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசிக்கு 3-ல் குரு, 4-ல் ராகு சஞ்சரிப்பதால்
அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். நெருங்கியவர்களை
அனுசரித்து செல்வது நல்லது. பண பரிமாற்ற விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே
போட்ட முதலீட்டை எடுக்க முடியும். சுப காரிய முயற்சிகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி
ஏற்படும். கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் சில போட்டிகள் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கௌரவமான நிலை இருக்கும் என்றாலும் வேலைபளு கூடுதலாக
இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு,
தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 15-03-2023 முதல்
17-06-2023 வரை
சனி பகவான் ராகு நட்சத்திரமான சதயத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களது
முன்கோபத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களிடம்
பொறுமையோடு செயல்படுவது நல்லது. 22-04-2023 முதல் குரு 4-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பது
பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். உங்கள் முயற்சிகளுக்கு இருந்த
இடையூறுகள் விலகி வெளிமனிதர்கள் ஆதரவு கிடைத்து அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில்
எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக
இருப்பதால் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
கூடுதல் பணி சுமை காரணமாக உடல் அசதி இருந்தாலும், பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது
நல்லது.
சனிபகவான்
வக்ர கதியில் 18-06-2023 முதல் 04-11-2023 வரை
உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் இருப்பதால் நெருக்கடிகள்
எல்லாம் குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து
எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்களுடைய
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதால்
வெற்றிகளை அடைவீர்கள். குரு, ராகு 4-ல் இருப்பதால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான
ஆதாயங்கள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில்
நல்ல வாய்ப்புகள் கிடைத்து தொழிலை மேம்படுத்த முடியும். கூட்டாளிகளில் ஆதரவு சிறப்பாக
இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும்,
திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்களும் கிடைக்கும். துர்க்கை வழிபாடு மேற்கொள்வது,
பாம்பு புற்றுக்கு பால் விடுவது நல்லது.
சனிபகவான்
அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல்
23-11-2023 வரை
சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்
உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பல்வேறு
நெருக்கடி இருந்தாலும் உங்களின் கடின உழைப்பால் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை எட்டுவீர்கள்.
எது எப்படி இருந்தாலும் எடுக்கும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குரு
பகவான் வக்ர கதியில் இருப்பதாலும், ராகு 3-ல் இருப்பதாலும் பண வரவுகள் மிக நன்றாக இருந்து
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இல்லத்தில் மங்களகரமான சுப காரியங்கள்
கைகூடும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள்.
வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய
இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த
உதவிகள் செய்வது, ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 24-11-2023 முதல்
06-04-2024 வரை
சனி உங்கள் ராசிக்கு 2-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல்
நிதானத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உங்கள் ராசிக்கு 3-ல்
ராகு சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் சற்று குறைந்து படிப்படியான முன்னேற்றங்களை
பெறுவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருந்து அனைத்து தேவைகளும் தடையின்றி பூர்த்தியாகும்.
பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இனிய நிகழ்வுகள் நடக்கும். பெரிய மனிதர்களுடைய
நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம்
தற்போது உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது
மட்டுமில்லாமல் போட்டிகள் குறையும். உத்தியோக ரீதியாக அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக
இருப்பதால் எதிலும் மன நிம்மதியுடன் பணியாற்ற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது
நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நற்பலனை தரும்.
சனிபகவான்
பூரட்டாதி நட்சத்திரத்தில் 07-04-2024
முதல் 29-06-2024 வரை
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள
பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து நல்ல நிலையினை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே
விட்டுக்கொடுத்து செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு
3-ல் ராகு சஞ்சரிப்பதாலும், 01-05-2024 முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் பண
வரவுகள் சிறப்பாக இருந்து உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலகி நல்ல நிலையினை எட்ட
முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை அடைவீர்கள். தொழில் ரீதியாக
நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி
உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கான சன்மானத்தை தற்போது
பெறுவீர்கள். உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் விலகி மனநிம்மதி உண்டாகும்.
சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது கெடுதியை குறைக்கும்.
சனிபகவான்
வக்ர கதியில் 30-06-2024 முதல் 15-11-2024
வரை
சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு 5-ல் குரு சஞ்சரிப்பதாலும்
உங்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். பண வரவுகள் மிகச் சிறப்பாக இருந்து அனைத்து
விதமான தேவைகளும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்களை
பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சந்தை
சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த
வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள்
எல்லாம் குறைந்து மன அமைதி உண்டாகும். உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பது
மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வேலைபளு சற்று குறையும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை
தரும்.
சனிபகவான்
சதயம் நட்சத்திரத்தில் 16-11-2024 முதல்
27-12-2024 வரை
சனி ராகு நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும்
அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது
நல்லது. ராகு 3-ல், குரு 5-ல் சஞ்சரிப்பதால் அனைத்து விதமான பொருளாதார தேவைகளும் பூர்த்தியாகும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த
நேரத்தில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல்
திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நீங்கள்
மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும். உடன் வேலை செய்பவர்கள்
உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு
செய்வது நல்லது.
சனிபகவான்
பூரட்டாதி நட்சத்திரத்தில் 28-12-2024
முதல் 29-03-2025 வரை
சனி பகவான் குரு நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு
உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். ராகு 3-ல் குரு 5-ல் சஞ்சரிப்பதால்
உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாக சிறப்பான பணவரவுகள்
ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம்
ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். உங்கள் கஷ்டத்துக்கு
விடிவு காலம் பிறக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல்
அதிகாரிகள் தொந்தரவுகள் எல்லாம் முழுமையாக மறைந்து மன நிம்மதி அடைவீர்கள். பைரவர் வழிபாடு
மேற்கொள்வது, விநாயகரை வழிபடுவது கெடுதியை குறைக்கும்.
அதிர்ஷ்டம்
அளிப்பவை
எண் - 5,6,8 நிறம் -
நீலம், பச்சை கிழமை - சனி, புதன்
கல் - நீலக்கல் திசை
- மேற்கு தெய்வம் - விநாயகர்
No comments:
Post a Comment