Sunday, January 15, 2023

கடகம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

 




கடகம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

கடகம்  ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெற இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. உடல் சோர்வு அதிக அலைச்சல் ஏற்படும். உற்றார்- உறவினரிடம் பேச்சை குறைப்பது நல்லது. நேரத்திற்கு சாப்பிடுவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பண பரிமாற்ற விஷயங்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம் கூட தக்க நேரத்தில் திரும்பி வராத காரணத்தினால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்றாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. சில நேரங்களில் நீங்கள் நேரடியாக பணி புரிந்தால் மட்டுமே எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். அதிக முதலீடுகளை தவிர்ப்பது, அப்படி அவசியம் என்றால் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் உங்கள் உடல் உபாதைகள் காரணமாக பணியில் கவனம் செலுத்த முடியாத ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவரிடம் வீண் பேச்சை தவிர்த்து விட்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள்.

சனி அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு 22-04-2023 வரை பாக்கிய ஸ்தானத்திலும், 01-05-2024 முதல் 14-05-2025 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு சிறப்பான அமைப்பு என்பதால் இக்காலங்களில் தாராள பண வரவுகள் ஏற்பட்டு உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். குருவின் சாதக நிலையால் பல்வேறு வளமான பலன்களை இக்காலங்களில் அடைய முடியும். வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிக்க இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. முடிந்தவரை குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, தேவையில்லாத மன அமைதி குறைவு ஏற்படும். சிலருக்கு பயணங்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்-- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் வீண் செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பண பரிமாற்ற விஷயங்களில் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் மன நிம்மதி குறைவு ஏற்படும். பங்காளியிடம் பேச்சை குறைப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நியாயப்படி நடந்து கொண்டாலும் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தாமதப்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, பிறரை நம்பி ஒரு காரியத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தேவையில்லாத வம்பு, வழக்குகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. அனைத்து செயலிலும் நீங்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உங்களுக்கு தொழில் நிமித்தமாக வேலை பளு அதிகரிப்பதால் ஓய்வு நேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாது. சில விஷயங்களை தியாகம் செய்தால்தான் தொழிலில் உங்கள் பெயரை நிலை நாட்ட முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரம் என்றாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் சில இடையூறுகள் ஏற்படும். சக ஊழியர்கள் சரியாக பணிபுரியாததால் அவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய இருக்கும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது ஒரு புத்திசாலித்தனமான செயலாகும்.

அரசியல்

மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அரசு அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் வீண் செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக இருந்தாலும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் குறையும். பங்காளிகள் மூலமாக வீண் பிரச்சினை வம்பு வழக்குகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் கவனத்தோடு இருப்பது நல்லது. விவசாய பணிகளுக்கு குறித்த நேரத்தில் வேலையாட்கள் கிடைக்காத காரணத்தினால் மன நிம்மதி குறையும்.

பெண்கள்

உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்வார்கள். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, பண உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதை தவிர்ப்பது நல்லது.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைத்து நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கான ஊதியத்தை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். சில வாய்ப்புகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையும் அதன் மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். தொழில் போட்டி காரணமாக சில நேரங்களில் தேவையற்ற இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவ மாணவியர்

நீங்கள் சரியாக படித்தாலும் ஞாபக மறதி காரணமாக அடைய வேண்டிய மதிப்பெண்களை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தேவையற்ற பொழுதுபோக்குகளையும், வீண் சகவாசத்தையும் குறைத்துக் கொண்டு தற்போது படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

 

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில்             17-01-2023 முதல் 14-03-2023 வரை

சனி பகவான் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது, வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது நிதானத்தோடு செல்வது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருப்பதும், பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் அலைச்சல்கள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். மற்றவர்கள் பணியை நீங்கள் செய்ய வேண்டிய இருக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               15-03-2023 முதல் 17-06-2023 வரை

சனி 8-ல் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிய ஒரு நிலை இருக்கும். 22-04-2023 க்கு பிறகு குரு 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நன்று. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு அலைச்சல் காரணமாக ஓய்வு நேரம் குறையும். உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. சனி பகவான் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சனிபகவான் வக்ர கதியில்                                18-06-2023 முதல் 04-11-2023 வரை

உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் இருப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களின் உதவியால் ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி லாபகரமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களது நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில்             05-11-2023 முதல் 23-11-2023 வரை

சனி 8-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், அலைச்சல்களை குறைத்துக் கொள்வதும் நல்லது. மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீட்டுகளை எடுத்துக் கொள்வது உத்தமம். நெருங்கிய உறவினர்களால் மன நிம்மதி குறையும். குரு 10-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிக மிக கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பது சற்று ஆறுதல் தரும். வேலைக்கு செல்பவர்கள் உங்களுடைய பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் நல்ல நிலையினை அடைய முடியும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமையோடு இருப்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               24-11-2023 முதல் 06-04-2024 வரை

சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் ராகு நட்சத்திரமான சதயத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயலிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பொருளாதார ரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் உண்டாகும். வண்டி, வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய குறைபாடுகளால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் எதையும் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நன்மை தரும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்                     07-04-2024 முதல் 29-06-2024 வரை

சனி உங்கள் ராசிக்கு 8-ல் குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய நிலை, உடல் சோர்வு ஏற்படும் என்றாலும் உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை அடைவீர்கள். 01-05-2024 முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நெருக்கடிகள் விலகி பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் இருக்கும் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைந்து நல்ல லாபத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணிச்சுமை குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

சனிபகவான் வக்ர கதியில்                                30-06-2024 முதல் 15-11-2024 வரை

சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் விலகி நல்ல லாபங்கள் கிடைக்கும். நவீன யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் மீது இருந்த அவப்பெயர்கள் எல்லாம் விலகி நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால் விடுவது நல்லது.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               16-11-2024 முதல் 27-12-2024 வரை

சனி சதய நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது உத்தமம். பொதுவாக பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. பேச்சால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் விலகி அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைய முடியும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெற முடியும். சனிக்கு எள் விளக்கு போடுவதன் மூலமாக உங்கள் கஷ்டங்கள் குறையும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         28-12-2024 முதல் 29-03-2025 வரை

சனி 8-ல் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் எவ்வளவு மனோ தைரியத்தோடு செயல்பட்டாலும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். பயணங்களில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளித்து பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கடன்கள் ஓரளவு குறைந்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும். தொழில் ரீதியான பிரச்சினைகள் விலகி நல்ல முன்னேற்றங்களை பெறுவீர்கள். வேலையாட்களால் சிறு சிறு நெருக்கடி இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பதவி உயர்வை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்பு தேடியவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்புகள் வரும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9              நிறம் - வெள்ளை, சிவப்பு கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து       திசை - வடகிழக்கு              தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: