Sunday, January 15, 2023

துலாம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

 



துலாம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோண ஸ்தானமான 4, 5-க்கு அதிபதியான சனி இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தினார். திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் மறைந்து சுபிட்சமான நிலை உண்டாகும். வேலைபளு குறைந்து எதிலும் மனநிம்மதியுடன் செயல்பட முடியும். கடந்த கால மருத்துவ பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நல்ல முடிவு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் பொருள் தேக்கங்கள் விலகி போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்ய முடியும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைவது மட்டுமில்லாமல் நீங்கள் எடுக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து நல்ல பெயர் எடுக்க முடியும். சக ஊழியருடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் பங்காளியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் பிள்ளைகள் விஷயத்தில் பக்குவமாக நடப்பது உத்தமம்.

சனி 5-ல் சஞ்சரிக்கும் இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குரு 22-04-2023 முதல் 01-05-2024 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலத்தில் பொருளாதார அனுகூலங்கள், மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி, அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய யோகம் ஏற்படும்.

தற்போது ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகுவும் வரும் 30-10-2023 வரை சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள், வெளியூர் மூலமாக அனுகூலங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு இருந்த அலைச்சல்கள் எல்லாம் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீண் மருத்துவ செலவுகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலமாக பொருளாதார ஆதாயங்களை பெறுவீர்கள். உணவு விஷயத்தில் கவனத்தோடு இருந்தால் ஏற்படும் சிறுசிறு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை சமாளிக்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். பங்காளி வகையில் தேவையற்ற கவலைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பணப்பரிமாற்ற விஷயங்களில் சிறப்பான அனுகூலங்களை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பெரிய முதலீடு ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தற்போது வந்தடைந்து கடன்கள் குறையும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் விலகி நல்ல முன்னேற்றத்தையும் போட்ட முதலீட்டை எடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். அதிநவீன கருவிகளை வாங்கி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களால் இருந்த தொந்தரவுகள் எல்லாம் முழுமையாக மறைந்து உங்களுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கூட்டாளிகள் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் விலகி உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை பெறுவது மட்டுமில்லாமல் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைத்து உங்களின் பொருளாதார நெருக்கடிகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் புதிய ஆட்கள் அமைந்து சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வதால் உங்களின் பணிச்சுமை குறையும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமைந்து மன மகிழ்ச்சி உண்டாகும்.

அரசியல்

உங்களது பெயர், புகழ் மேலோங்கும் நேரமாகும். வெளியூர் நபர்கள் மூலமாக மன மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உங்களுடைய செயல்களால் மக்களிடம் உங்கள் மீதிருந்த அவப்பெயர்கள் எல்லாம் விலகி உங்களது செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மன நிம்மதி உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக இருந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பண வரவுகள் மிகச் சிறப்பாக இருந்து உங்களது கஷ்டங்கள் எல்லாம் குறையும். நவீன கருவிகளையும், கால்நடைகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பங்காளியிடம் மட்டும் குறிப்பாக பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு பொறுமையோடு நடப்பது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க கூடிய அமைப்பு, உறவினர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய யோகம் உண்டாகும். ஆடை, அணிகலன்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டு. மங்களகரமான சுப காரியங்கள் கைக்கூடும். இயற்கை உணவுகளை உட்கொள்வதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் உங்களை நாடி வரும். உங்களது பணிக்காக வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு அதன் மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். சின்னத்திரை கலைஞர்கள், இசைத்துறையில் இருப்பவர்களுக்கு உங்கள் கனவுகள் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு சொகுசு வாகனங்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல நிலை, நல்ல மதிப்பெண் எடுக்கக் கூடிய வாய்ப்பு, போட்டி தேர்வுகளில் சாதிக்கக்கூடிய ஒரு யோகம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் மேற்படிப்பு விஷயங்களில் அனுகூலங்களை பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க முடியும்.

 

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 17-01-2023 முதல் 14-03-2023 வரை

சனி பகவான் 5-ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் குரு 6-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சிந்தித்து செயல்பட்டால் வளமான பலன்களை பெறலாம். வேலைக்கு செல்பவர்களுக்கு உடன் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணி புரிய முடியும். கடந்த கால கடன்கள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               15-03-2023 முதல் 17-06-2023 வரை

சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 5-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 22-04-2023 முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கிருந்த சிக்கல்கள் எல்லாம் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் உங்கள் எண்ணங்களை செயல்படுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள் எல்லாம் மாறி மன நிம்மதி ஏற்படும். துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தும்.

சனிபகவான் வக்ர கதியில்                                18-06-2023 முதல் 04-11-2023 வரை

சனி பகவான் 5-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். சர்ப கிரகமான ராகு 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் சிறு சிறு நெருக்கடி இருந்தாலும் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உயர்வான நிலையை அடைவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல் 23-11-2023 வரை

சனி பகவான் 5-ல் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு உயர்வான நிலையை அடைவீர்கள். பணப்பரிமாற்ற விஷயங்களில் நல்ல லாபங்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சட்ட ரீதியான இந்த சிக்கல்கள் எல்லாம் மறைந்து தொழிலில் மகிழ்ச்சியுடன் செயல்பட முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் உண்டாகும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               24-11-2023 முதல் 06-04-2024 வரை

சனி பகவான் ராகு நட்சத்திரத்தில் 5-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார நிலை மிக மிக சாதகமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூட கூடிய ஒரு நிலை ஏற்படும். இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி அதிகப்படியான லாபங்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வழிகாட்ட நல்ல சந்தர்ப்பங்களும் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகமும் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை மகிழ்ச்சி தரும். விநாயகர் வழிபாடு நன்று.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         07-04-2024 முதல் 29-06-2024 வரை

சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 5-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ராகு பகவான் 6-ல் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும், பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு நிலையும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருந்து மன மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் அதிகப்படியான லாபங்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வேலையில் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். சக ஊழியர்கள் உங்களுடைய பணி சுமையை பகிர்ந்து கொள்வார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பெரிய பதவி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் வக்ர கதியில்                    30-06-2024 முதல் 15-11-2024 வரை

உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் இருப்பதாலும் தனக்காரகன் குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்று. ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறு சிறு நெருக்கடிகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியினுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் நீங்கள் உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்வது நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்               16-11-2024 முதல் 27-12-2024 வரை

சனி பகவான் ராகு நட்சத்திரத்தில் 5-ல் சஞ்சரிப்பதாலும், ராகு 6-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார நிலை சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் சுப காரிய முயற்சிகள் வெற்றி தரும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். மறைமுகப் போட்டிகள் குறைந்து நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய பதவிகளை அடைய முடியும். ஒரு சிலருக்கு பணி மாற்றம் ஏற்பட்டு நல்ல நிலை அடைவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்                     28-12-2024 முதல் 29-03-2025 வரை

சனி பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், ராகு 6-ல் சஞ்சரிப்பதாலும் வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய தேவைக்கேற்ப பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். நல்ல நட்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சிறப்பான பண வரவு உண்டாகி கடந்த கால கடன்கள் குறையும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் இதுவரை இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். பங்காளிகள் வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 4,5,6,7,8                        நிறம் - வெள்ளை, பச்சை  கிழமை - வெள்ளி, புதன்

கல் - வைரம்                         திசை - தென் கிழக்கு         தெய்வம் - லக்ஷ்மி

No comments: