Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 மீனம்


 குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, ராசியாதிபதி குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களின் பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். அனைத்து குடும்ப தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபம் உண்டாகும். 2-ல் சஞ்சரிக்கக் கூடிய குருபகவான் 6, 8, 10-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் நீங்கள் வாங்கிய கடன்களைப் பைசல் செய்ய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவானது சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடப்பதால் சில விஷயங்களில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். குறிப்பாக ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான நெருக்கடிகளை கூட எளிதில் சமாளித்து அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். சில நேரங்களில் வேலையாட்கள் சிறு சிறு நெருக்கடிகளை கொடுத்தாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் அனைத்தையும் சமாளித்து வளமான பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு பெரிய வாய்ப்பினை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது என 30.10.2023 முடியவும், அதன் பின்பு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் நலத்திற்கும் சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய ஒரு காலம் என்பதால் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். அவ்வப்போது கை, கால்களில் வலி, உடல்சோர்வு, மந்தநிலை ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளால் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். நெருங்கியவர்களுக்கு இருந்த உடல் நிலை  பாதிப்புகள் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை 

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் தனகாரகன் குருபகவான் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத திடீர் தன வரவுகள் உண்டாகி குடும்பத்தில் மேன்மை ஏற்படும். திருமண சுபகாரியங்களும் தடையின்றி கைகூடும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். சர்ப்ப கிரக சஞ்சாரத்தால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். சிலருக்கு அசையும், அசையா சொத்து சேர்க்கைகளும், ஆடை, ஆபரணம் சேர்க்கைகளும் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி மற்றும் காண்டிராக்ட் துறையிலிருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி பல பெரிய மனிதர்களின் தொடர்பையும், நட்பையும் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வருவதால் லாபங்கள்  பெருகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட பதவி உயர்வுகள் எளிதில் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைவார்கள். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு ஏற்றத்தை அளிக்கும் காலமாக இருக்கும். பல பெரிய பதவிகள் தேடி வரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து பல பெரிய மனிதர்களின் தொடர்பையும், மக்களின் ஆதரவையும் அமோகமாகப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமைவதால் லாபம் தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கால்நடைகளால் லாபத்தை பெற முடியும். கூலியாட்களால் சிறு சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் எதையும் சமாளித்து அனைத்து வேலையையும் எளிதில் முடித்துவிடுவீர்கள். விளை நிலங்களை வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

பெண்கள்

குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உற்றார் உறவினர்களால் அனுகூலமானப் பலன்கள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் சிறு சிறு பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள். சிலருக்கு பூமி, மனை யோகமும். ஆடை, ஆபரண சேர்க்கைகளும் தாராளமாக இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகள் செய்யும் விஷயங்களில் சற்று எச்சரிக்கையோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் தனித் திறமையால் நல்ல லாபங்களை அடையும் வாய்ப்பு உண்டு. சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்தோடு இணையும் வாய்ப்பு உண்டாகும். மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால் விடுவது உத்தமம்.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பகவான் சுப கிரகமான சுக்கிரனின் நட்சத்திரமான பரணியில் 2-ல் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருந்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால கடன்களை பைசல் செய்ய முடியும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்து அனுகூலங்களை பெறுவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்களும், உங்கள் உழைப்புக்கான பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கடன் பிரச்சினைகள் குறையும். ராகு 2-ல் இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து பேசினால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அசையும், அசையா சொத்துக்கள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும். உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வதன் மூலம் வளமான பலன்களை பெறலாம்.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். பண வரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறைவு ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, பிறருக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் தான் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கூற முடியாது. தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது ஏதாவது ஒரு குறையை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு பகவான் 2-ல் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பண பரிமாற்ற விஷயங்களில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-லும் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குறிப்பாக வயது மூத்தவரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். 12-ல் சனி இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் யோசித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைவதுடன் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். குடும்பத்தில் நிலவிய வீண் மருத்துவ செலவுகள் குறைந்து மன மகிழ்ச்சி உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவுகளை பெற முடியும். ஒரு சிலருக்கு தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் வாங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் படிப்படியாக குறையும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, துர்க்கைக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு பகவான் சூரியன் நட்சத்திரமான கிருத்திகையில் 2-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஏழரைச் சனி நடப்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-லும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே சற்று விட்டு செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் யோகம் உண்டு. உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து லாபங்களை ஈட்ட முடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பமும், அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு நிலையும் வரும் நாட்களில் உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அனுகூலமான செய்தி கிடைக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

 

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபடுவதாலும், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.

சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   கிழமை - வியாழன், ஞாயிறு      திசை - வடகிழக்கு

கல் - புஷ்ப ராகம்   நிறம் - மஞ்சள், சிவப்பு    தெய்வம்தட்சிணாமூர்த்தி

No comments: