Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 மிதுனம்

 


குரு
பெயர்ச்சி பலன் 2023 – 2024

மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு 7, 10-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இதுநாள் வரை இருந்த பல்வேறு விதமான நெருக்கடிகள் எல்லாம் குறைந்து பணவரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படும். தற்போது சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபங்கள் கிடைக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். நீங்கள் வாங்கிய கடன்களை வருகின்ற நாட்களில் எளிதில் பைசை செய்ய முடியும்.

லாப ஸ்தானத்தில் சந்திக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 3, 5, 7-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் ஒரு அனுகூலங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறையும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக அரசு மூலம் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை தற்போது பெற முடியும். தொழிலுக்காக நவீன இயந்திரங்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வேலை பளுவானது குறையும். சக ஊழியர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இந்த தருணத்தில் சர்ப்ப கிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் 30.10.2023 முடிய சஞ்சாரம் செய்ய இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். வருகின்ற நாட்களில் நீங்கள் நீண்ட நாட்களாக எண்ணிய காரியங்களை தற்போது நிறைவேற்ற முடியும். சிலருக்கு அழகிய வீடு வாங்கக்கூடிய யோகமும், புதிய வாகனங்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் ஏற்படும். கூட்டுத் தொழில் மூலமாக மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உறவினர்கள் ஆதரவும் மிகச் சிறப்பாக இருக்கும்.

 

உடல் ஆரோக்கியம் 

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த கால அலைச்சல், டென்ஷன்கள் குறைவதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும். லஷ்மிகடாட்சம் உண்டாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் உங்களுக்கிருந்த கடன் பிரச்சினைகளும் குறையும். தடைப்பட்டு வந்த திருமண சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நிறைவேறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பதால் அனுகூலப் பலனைப் பெற முடியும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன் பொருள் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர்.

கமிஷன்- ஏஜென்ஸி 

குரு- ராகு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையில் இருப்போருக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும்.

தொழில் வியாபாரம் 

தொழில் வியாபாரத்திலிருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் சப்ளை செய்வதால் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நவீன கருவிகளை வாங்குவீர்கள். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக செயல்படுவதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும்.

உத்தியோகம்

பணியில் இதுவரை இருந்த வந்த சோதனைகளும் வேதனைகளும் விலகி உற்சாகமான நிலை ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து வாழும் அமைப்பு ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பான பணி அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற்று அனைவரின் அபிமானத்தையும் பெறுவீர்கள். கட்சி பணிக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார நிலையும் உயர்வடையும்.

விவசாயிகள்

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைப்பதால் லாபமும் அதிகப்படியாகவே இருக்கும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறையும். புதிய விளை நிலங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கால்நடைகள் வளர்ப்பதால் அனுகூலங்கள் உண்டு. குடும்பத்தில் பொருளாதாரநிலை உயர்வடைவதால் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கடன்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனைப் பெறமுடியும். பணவரவுகள் பஞ்சமின்றி இருப்பதால் கடன்கள் குறைவதுடன் பொன் பொருளும் சேரும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியிலிருந்த மந்த நிலைகள் விலகி உற்சாகத்துடன் படிக்க முடியும். உடல் சோர்வு மனம் அலைப்பாயக் கூடிய நிலை போன்ற யாவும் மறையும். நல்ல மதிப்பெண்களை பெறுவதால் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் பெருமையை தேடி தருவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளும் பாராட்டுதல்களும் மேலும் மேலும் உற்சாகத்தை உண்டாக்கும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு பகவான் லாப ஸ்தானமான 11-ல் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு நல்ல லாபத்தை ஈட்ட முடியும். கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழில் அபிவிருத்தி செய்ய முடியும். கடந்த கால பொருட் தேக்கங்கள் எல்லாம் விலகி சந்தை சூழ்நிலையும் உங்களுக்கு ஆதரவாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் கிடைத்து மன நிம்மதி கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட்டு நல்ல பெயர் எடுக்க முடியும். உங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணியில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பரணியில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். உங்கள் கனவுகள் நனவாகும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நெருங்கியவரின் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும். நீங்கள் போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமில்லாமல் அதிகப்படியான லாபங்களை ஈட்ட முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் தொழில் ரீதியாக ஒரு நல்ல செய்தி கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியை கூட நீங்கள் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். பாம்பு புற்றுக்கு பால் விடுவது, வண்ண நிற ஆடைகளை தியானம் செய்வது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் கவனத்துடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவிற்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக இல்லாத நேரம் என்பதால் எந்த ஒரு வேலையிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைபளு காரணமாக ஓய்வு நேரம் குறையும். அதிகாரிகள் சற்று சாதகமாக செயல்படுவதால் நீங்கள் எடுத்த பணிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. உறவினர்களின் ஆதரவால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடப்பதில் சற்று தாமதமாகும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு பகவான் 11-ல் அஸ்வினி  நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பணப்பரிமாற்ற விஷயங்களில் அதிகப்படியான அனுகூலங்களை பெற்று உங்களுக்குள்ள அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் கைகூடுவது மட்டுமில்லாமல் அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகமானது உண்டு. பெரியோர்களுடைய ஆசி கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். இருந்த உடம்பு பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும் வேலையாட்கள் உதவி சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு நிலையும் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு நல்ல நிலை ஏற்படக்கூடிய அமைப்பும், அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு நிலையும் இருக்கிறது. சக ஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி சுமூகமான ஒரு சூழ்நிலை உண்டாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு 11-ல் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். சனி 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் மூலமாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நல்ல நட்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த நெருக்கடியான நிலை விலகி நற்பலன்களை பெறுவீர்கள். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நீங்கள் புது தெம்புடன் செயல்பட்டு சந்தை சூழ்நிலையை சிறப்பாக சமாளித்து நல்ல லாபத்தை அடைய முடியும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த நெருக்கடியான நிலை மாறி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பிறரால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு எளிதில் முடித்து விடுவீர்கள். பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினரிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு வீடு, மனை போன்றவற்றினை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். பெற்றோர் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் பல்வேறு அனுகூலமான பலன்களை பெறுவதுடன் நல்ல லாபங்களை அடைய முடியும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து மன நிம்மதி உண்டாகும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடந்த காலங்களில் நிலவிய மன குழப்பங்கள் எல்லாம் ஓரளவுக்கு விலகி எதிலும் தெளிவுடன் செயல்பட முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். நீங்கள் எடுத்த பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். பாம்பு புற்றுக்கு பால் விடுவது, உக்கிர தெய்வங்களை வழிபடுவதன் மூலம் ஆதாயங்களை அடைய முடியும்

 

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் கேது சஞ்சரிப்பதாலும், வரும் 30.10.2023 முதல் ராகு 10-ல், கேது 4-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,            நிறம் - பச்சை, வெள்ளை,       கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்              திசை - வடக்கு                 தெய்வம் - விஷ்ணு

No comments: