Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 விருச்சிகம்

 


குரு
பெயர்ச்சி பலன் 2023 – 2024

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியும், ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமுமான குருபகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் நீங்கள் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட்டால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் உங்களுக்கு அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய ஒரு சூழல் ஏற்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிப்பதில் இடையூறுகள் உண்டாகும். உங்களது தேக ஆரோக்கியத்திலும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது, தகுந்த இடைவேளையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 12--ல் கேது என 30.10.2023 முடியவும் அதன் பின் 5-ல் ராகு, 11-ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். குரு பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் நெருங்கியவர்கள் உதவியானது நெருக்கடியான நேரத்தில் கிடைத்து உங்களின் மனக்கவலைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அனுகூலங்களை அடைய முடியும்.

தொழில் விஷயங்களை வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் பணியில் சிறப்பாக செயல்பட தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். உங்கள் மீது வீண் பழிச் சொற்களை உடனிருப்பவர்கள் கூறுவார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நிலைமையை சமாளித்து அனுகூலங்களை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சினையும் சமாளிக்க கூடிய பலம் ஏற்படும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்  

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் மனநிம்மதியானது குறையக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மனைவி, பிள்ளைகள் வழியில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறு ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படாது.

கமிஷன் ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்போர் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. பண பரிமாற்ற விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரத்தில் சில போட்டி, பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்ளும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவுவதால் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைத்து நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் உயர் பதவிகள் தேடிவரும். சமுதாயத்தில் கௌரவமான நிலையிருக்கும். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் பொருளாதார நிலையில் இடையூறுகள் உண்டாகும் என்றாலும் மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்க சற்று தாமதமாகும். கால்நடைகளால் லாபங்கள் கிடைத்தாலும் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பங்காளிகள் மற்றும் அன்னிய இட உரிமையாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் குடும்பத்தில் சிக்கனத்தை மேற்கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தேவையற்ற இடையூறுகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் குடும்ப விஷயங்களில் மற்றவர் தலையீட்டை தவிர்ப்பது மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பணிபுரிபவர்களுக்கு சற்று வேலைபளு அதிகரிக்கும், சேமிப்பு குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோர் பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டு. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். உல்லாச பயணங்களால் அனுகூலங்கள் உண்டு.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு பகவான் கேது நட்சத்திரமான அஸ்வினியில் 6-ல் சஞ்சரிப்பதால் பண பரிமாற்ற விஷயங்களில் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட தாமதமாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தவிர்த்து விட்டு, இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. உறவினர்கள் வகையில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பரணி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பகைமைகள் ஏற்பட்டு, இருக்கும் இடத்தில் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு உண்டாகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தடைப்படும். சர்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் அதிகரிக்கும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. எந்த செயலிலும் நீங்கள் முன் நின்று செயல்பட்டால் தான் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் சரியாக பணிபுரிந்தாலும் மேலதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொதுவாக வெளியிடங்களில் பேச்சை குறைப்பது நல்லது. குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் குறையும். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறையும். சட்ட ரீதியாக உள்ள சிக்கல்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வேலைபளு காரணமாக அலைச்சல்கள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணி சுமை கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும். உறவினர்களுடைய ஒற்றுமையான செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நன்மை தரும்.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடு இருப்பது நல்லது. தேவையில்லாத பயணங்களை தள்ளி வைப்பது உத்தமம். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய எதிர்நீச்சல் போட வேண்டிய நேரமாகும். வேலையாட்கள் மூலமாக தேவையற்ற நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக உங்களுக்கு ஓய்வு நேரம் குறையும். மற்றவர்கள் பணியையும் நீங்கள் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பரணி நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது பெரிய பிரச்சினைகளை தவிர்க்க உதவும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலை எடுக்க முடியும், அரசு வழியில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் அதிகாரியிடம் பேச்சில் கவனத்தோடு இருப்பது நல்லது, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் எடுத்த வேலையை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும். ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு இருந்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். குருவுக்கு அர்ச்சனை செய்வது, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நல்லது.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு சூரியன் நட்சத்திரமான கிருத்திகையில் 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். சனி 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தால்தான் எடுக்கும் வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து போட்ட முதலை எடுக்க முடியும். தொழில் ரீதியான முக்கிய விஷயங்களை கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவது மூலம் ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் கவனத்தோடு இருந்தால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தினை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் கிடைக்கும். சனிக்கு எள் தீபம் ஏற்றுவது, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

 

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

சனி பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,        கிழமை - செவ்வாய், வியாழன்

கல் - பவளம்,                              திசை - தெற்கு                          தெய்வம் - முருகன்

No comments: