Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 சிம்மம்

 


குரு
பெயர்ச்சி பலன் 2023 – 2024

சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5, 8-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளது அற்புதமான அமைப்பு ஆகும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்க கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மனைவி, பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். பண வரவுகள் மிகச் சிறப்பாக இருந்து பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு இருந்த கடன்கள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கும். வீடு, மனை போன்றவற்றினை வாங்க வேண்டும் என்று எண்ணிய உங்களுடைய எண்ணங்கள் வருகின்ற நாட்களில் நிறைவேறும்.

இந்த தருணத்தில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே சற்று விட்டு கொடுத்து செல்வது, நெருங்கிய உறவினர்கள் மற்றும் கூட்டாளியிடம் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. 9-ல் சஞ்சரிக்கும் குருபகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 5-ஆகிய பாவங்களை பார்வை செய்வதால் பெரியோர்கள் ஆசி கிடைக்கக்கூடிய அமைப்பு, எடுக்கும் முயற்சியில் வெற்றி, உங்கள் கனவுகள் நிறைவேற கூடிய ஒரு அற்புத நிலை, பூர்வீக சொத்து வகையில் ஒரு சில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என கவலைப்பட்டவர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் தகுதியையும் தனித் திறனையும் உயர்த்திக் கொள்வதற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளும், பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். தகுதி வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும்.

சர்ப்ப கிரகமான ராகு 9-லும், கேது 3-லும் வரும் 30.10.2023 முடிய சஞ்சாரம் செய்வது உங்களுக்கு மிகவும் சாதகமான அமைப்பாகும். இதன் காரணமாக வெளியூர், வெளிநாடுகள் மூலமாக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய நல்ல செய்தி கிடைக்கும். அக்டோபர் 2023க்கு பிறகு கேது 2-க்கும் ராகு 8-க்கும் மாறுதல் ஆவதால் அதன் பின் உடல் நலத்தில் சற்று அக்கறை செலுத்துவது, பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் படிப்படியாக குறைந்து மன நிம்மதி ஏற்படும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி பூரிப்பு உண்டாகும். சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய தைரியம் இருக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை 

குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். முன்கோபத்தை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

கமிஷன்- ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் லாபம் திருப்பதிகரமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். இதுவரை இருந்த வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். 

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறமுடியும். தொழிலாளர்களின் விடாமுயற்சி உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும். கூட்டாளிகளிடம் பேச்சில் மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடித்தால் மேலும் பல முன்னேற்றங்களைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகம்

பணிபுரிவோருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடந்த கால அவபெயர்கள் விலகி உங்களது பெயர், புகழ் மேலோங்கும் காலமாக வருகின்ற நாட்கள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் அனைவரிடமும் சுமூகமாக இருக்க முடியும். கட்சி பணிகளுக்காக வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நீர்வளமும், நிலவளமும், மிக சரியாக இருப்பதால் குறிப்பிட்ட பயிர்களை விவசாயம் செய்து லாபத்தை காண முடியும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் விளை நிலங்களை வாங்கும் நோக்கம் நிறைவேறும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி நிம்மதியுடன் இருப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொன்பொருள் சேருவதுடன் நவீன பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். பணிபுரிபவர்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வுகள் கிடைத்து வேலைபளுவும் குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் இருந்த மந்த நிலை விலகி ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். உடன் பழகுபவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மேலும் உற்சாகத்தை அளிக்கும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு கேது நட்சத்திரமான அஸ்வினியில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அடையும் வாய்ப்பு உண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் உபாதைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. கடந்த கால கடன்கள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடைய முடியும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட தற்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். கடந்த கால வம்பு வழக்குகள் முழுமையாக மறைந்து தொழிலில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான ஆதாயங்களை அடைவீர்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாத பணிகளை கூட தற்போது எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த கவலைகள் எல்லாம் குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது உத்தமம்.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் ஏற்படும், பணப்பரிமாற்ற விஷயங்களில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்யக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த பொருள் தேக்கங்கள் விலகி லாபகரமான நிலை ஏற்படும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்களுடைய எண்ணங்களை தற்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். வெளியூர் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தற்போது மிகவும் அனுகூலமான காலம் என்றால் அது மிகையாகாது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வேலைபளு எல்லாம் குறையும். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகளும் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு ஒரு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.  உகர தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய காலமாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் செயல்களுக்கு சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் கவனமாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். உடன் வேலை செய்பவர்கள் செயல்களை பொருட்படுத்தாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்க முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையும் யோகம் உண்டு. வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிக மிக நல்லது. பிரித்திங்கரா தேவி வழிபாடு நன்மை தரும்.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்க கூடிய நேரமாகும். பண வரவுகள் மிகவும் நன்றாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அனுகூலங்கள், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுப காரியங்கள் எளிதில் கை கூடும். தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை அடைவது மட்டுமில்லாமல் வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறைந்து தொழிலில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கான பலன் கிடைப்பது மட்டுமில்லாமல் பிறர் பார்த்து வியக்கும் அளவிற்கு நீங்கள் ஒரு நல்ல நிலையை அடைவீர்கள். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் குறைவதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூட ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் எளிதில் கை கூடும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமைக்கு குறை இருக்காது. நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரித்து சிறப்பான வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்து முடித்து வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் மீது இருந்த வீண் அவப்பெயர்கள் விலகி நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் அனுகூல செய்திகளும் கிடைக்கும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு புகழ் பெற்ற நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். விநாயகர் வழிபாடு, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நல்லது-.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

ராசியாதிபதி நட்சத்திரமான கிருத்திகையில் குரு 9-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த கால சட்ட சிக்கல்கள் எல்லாம் விலகி மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் யோகம், தற்போது இருக்கும் மறைமுக பிரச்சினைகள் விலகி அனுகூலமான நிலை ஏற்படும். வேலையாட்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளை உங்கள் தனித்திறமையால் எளிதில் கையாண்டு அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். தொழில் ரீதியாக புதிய திட்டங்களை போட்டு நல்ல வளர்ச்சியினை அடைவதற்கான யோகம் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு இதுவரை இருந்த வேலைபளு குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பிறரால் செய்ய முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தற்போது நீங்கள் செய்யும் பணியே உங்களுக்கு நல்லது என்பதால் பிறர் சொல்வதைக் கேட்டு மனதை குழப்பிக் கொள்ளாமல் உங்கள் பணியில் மட்டும் தற்போது கவனம் செலுத்துவதன் மூலம் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும். பாம்பு புற்றுக்கு பால் விடுவது, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது.

 

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம்.

வரும் 30.10.2023 முதல் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                      நிறம் - வெள்ளை, சிவப்பு               கிழமை - ஞாயிறு, திங்கள்

கல் -  மாணிக்கம்                   திசை - கிழக்கு                         தெய்வம் - சிவன்

No comments: