Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 மகரம்

 


குரு
பெயர்ச்சி பலன் 2023 – 2024

மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரித்த குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை சுகஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தடங்கல்கள் எல்லாம் விலகி எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப்புழக்கம் சற்று சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு 2-ல் சனி சஞ்சரித்து ஏழரைச் சனியில் பாத சனி நடப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. குருபகவான் தனது சிறப்பு பார்வையாக 8, 10, 12-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து தேக ஆரோக்கிய நிலையில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும். மனைவி, பிள்ளைகள் வகையில் இருந்து வந்த கவலைகள் எல்லாம் கூட ஓரளவுக்கு குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்கள் உழைப்புக்கான பலனை வருகின்ற நாட்களில் அடைய முடியும். பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் சிக்கல்களை தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த வீண் செலவுகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். அரசு வழியில் சில சட்ட சிக்கல்கள் இருக்கும் என்றாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய ஒரு பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணி புரிய முடியும். சக ஊழியரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. தேவையற்ற நெருக்கடிகள் சில ஏற்பட்டாலும் உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதால் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது அக்டோபர் 2023 முடிய சஞ்சரிப்பதால் அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள், ஒவ்வொரு செயலிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். 30.10.2023-க்கு பிறகு ராகு 3-லும் கேது 9-லும் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறைந்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். தற்போதைக்கு சற்று பொறுமையோடு செயல்பட்டால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்குத்தான் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை, சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படும். சுகவாழ்வில் இடையூறுகள் உண்டாகும். மனைவி, பிள்ளைகளால், ஒரளவுக்கு மன நிம்மதி ஏற்படும். பயணங்களால் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளை கட்டுக்குள் வைத்து கடன்களின்றி சமாளித்து விடுவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். வண்டி, வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கமிஷன் ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண் அலைச்சலை எதிர்கொள்வீர்கள். போட்டி பொறாமைகளால் சில வாய்ப்புகள் தட்டி செல்ல நேர்ந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது மிகவும் உத்தமம்.

உத்தியோகம்

பணியில் ஓரளவுக்கு நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். சிலருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் உடல்நிலை சோர்வடையும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் வேலைபளுவை குறைக்க உதவும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அரசியல்

எதிர்பார்க்கும் பெரிய பதவிகள் கிடைக்கப் பெற்று பெயர், புகழ் உயரும் என்றாலும் பணவரவுகளில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தோடு சேர்ந்திருக்க முடியாத நிலை, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு எதிர்பார்க்கும் மகசூல் கிடைத்தாலும் அதற்காக அதிகம் பாடுபட வேண்டி இருக்கும். லாபமும் சுமாராகவே இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே விரயங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் உடல் நிலையானது மந்தமாக இருக்கும். மருத்துவ செலவுகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பதால் அவர்கள் மூலம் சற்று ஆதாயப் பலனை பெற முடியும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் மந்தநிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்படுவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் குறையும். உடல்நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்க முடியும். மறைமுக எதிர்ப்புகள் பல இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பணியும் இணைத்து செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை இருக்கும். அதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பரணி நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய காலமாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். ஒரு சில உதவிகள் கிடைத்தாலும் நீங்கள் கவனமாக செயல்பட்டால் தான் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் லாபத்தை அடைய இடையூறுகள் ஏற்படும். போட்டியாளர்களால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில் தடங்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைபளு காரணமாக மனஉளைச்சல் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் ஈடுபாடு குறையும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. நேரத்திற்கு சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கிய பிர்ச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். உங்களுக்குள்ள பிரச்சினைகள் சற்று குறைந்து மன அமைதி ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான செய்தியானது கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். அரசு வழியில் இந்த கெடுபிடிகள் சற்று குறையும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் தனித்திறமையால் எதையும் சிறப்பாக கையாளக்கூடிய பலம் உண்டாகும். உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விநாயகர் வழிபாடு செய்வது, ஆலயங்களுக்கு தீபம் ஏற்ற நல்லெண்ணய் தானம் செய்வது நல்லது.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு கேது நட்சத்திரமான அஸ்வினியில் 4-ல் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கலாம். பணவரவில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ராகு 3-ல் இருப்பதால் அசட்டு தைரியத்துடன் செயல்பட்டு கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்க முடியும். நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்றாலும் வீண் பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும். மற்றவர்கள் சொல்வதை கேட்டு மனதை குழப்பிக் கொள்ளாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் விரைவில் நல்லது நடக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது, குருவுக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பரணி நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. சனி 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து செயல்படுவது, வெளி நபர்களிடம் தொழிலைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பு இருக்காத காரணத்தினால் சில விஷயங்களில் நீங்களே நேரடியாக செயல்படுவதன் மூலம் போட்ட முதலை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். சனிக்கு எள் தீபம் ஏற்றுவது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பாராத உதவிகளை பெரும் வாய்ப்பு உண்டு. உங்களது பொருளாதார கஷ்டங்கள் சற்று குறையும். நல்ல நட்புகள் கிடைத்து மன அமைதி ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் கஷ்டங்கள் விலகும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய முதலீடு கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, வெளியூர் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும் நிம்மதியுடன் செயல்பட முடியும். பிறரால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.

 

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.

ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

உங்களுக்கு ஜென்ம ராசியில் 4-ல் ராகு, 10-ல் கேது வரும் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8     நிறம் - நீலம், பச்சை           கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்            திசை - மேற்கு           தெய்வம் - விநாயகர்

No comments: