Friday, April 21, 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024 கடகம்

 


குரு
பெயர்ச்சி பலன் 2023 – 2024

கடகம்  ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு உறுதியாக பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த தருணத்தில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமச் சனி நடக்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு மிகவும் சிக்கனமாக இருப்பது தான் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது உத்தமம். மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீட்டுகள் எடுத்துக் கொள்வதும் நல்லது.

தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்றாலும் அதிக அலைச்சல், டென்ஷன், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய ஒரு சூழல் ஏற்படும். அனைத்து விஷயத்திற்கும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக பணிபுரிந்தால் தான் நிலைமையை சமாளிக்க முடியும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து சில விஷயங்களில் செயல்படுவதன் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தாலும் உங்களது ஆரோக்கியமே உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். சில நேரங்களில் சக ஊழியர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உண்டாகும். உங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பது, முக்கிய விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 2, 4, 6-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள். நெருங்கிய உறவினர்கள் நெருக்கடியான நிலையில் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் சில தோன்றினாலும் அதனை உங்கள் தனித் திறமையால் எளிதில் சமாளித்து விடுவீர்கள். சர்ப கிரகமான ராகு 10-லும் கேது 4-லும் வரும் 30.10.2023 முடிய சஞ்சாரம் செய்வது உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு சின்ன சின்ன இடையூறுகள் ஏற்படும். 30.10.2023---ல் ஏற்படக்கூடிய ராகு, கேது பெயர்ச்சி மூலமாக கேது 3-லும் ராகு 9-லும் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகளும், பொருளாதார மேன்மைகளும் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. வீண் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள மருத்து காப்பீடுகள் எடுத்து கொள்ளவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் வேலைபளு அதிகரிப்பதால் ஒய்வு நேரம் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை   

பணவரவுகளில் நெருக்கடிகள் இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பொருளாதார பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களால் சுபசெலவு உண்டாகும்.

கமிஷன் ஏஜென்ஸி 

பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்பு தான் திரும்ப பெற முடியும். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுத்தால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் அரசு வழி உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதமாகும். தொழிலில் ஏற்படக்கூடிய போட்டிகளால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். குறித்த நேரத்தில் ஆர்டர்களை சப்ளை செய்ய இடையூறு ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சாதகமான பலன் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. நவீன கருவிகள் பழுதடைவதால் வீண் விரயங்களும் உண்டாகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகள் ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் வேலைபளு அதிகரிப்பதுடன் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மன உளைச்சலை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பணவிஷயங்களில் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகள் எதிர்பார்க்கும் மகசூலைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த கடனுதவிகளும் கிடைக்க தாமதம் ஆகும். குறித்த நேரத்திற்கு மழை பெய்யாததால் விளைச்சல் குறையும். கால்நடைகளுக்கு நோய்கள் தாக்குவதால் மருத்துவ செலவினை எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களின்றி சமாளிக்க முடியும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புதிய வேலை வாய்ப்பானது சற்று தாமதமாகத் தான் அமையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டு வெற்றிகளை காண்பீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்ப்பதும் நல்லது. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

அஸ்வினி நட்சத்திரத்தில்                       22-04-2023 முதல் 21-06-2023 வரை

உங்கள் ராசிக்கு 10-ல் குரு கேது நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படும். தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. பண பரிமாற்ற விஷயங்களில் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அதனை தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள் என்றாலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்க முடியும். வேலையாட்களுடைய உதவியை பெரிதும் எதிர்பார்க்காமல் சில செயல்களில் நீங்கள் நேரடியாக தலையிட்டால் தான் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உழைப்புக்கான பலனை அடையக்கூடிய யோகங்கள் ஒருபுறம் இருந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் சில இடர்பாடுகளை ஏற்படுத்துவார்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.

குரு பகவான் பரணி நட்சத்திரத்தில்                           22-06-2023 முதல் 04-09-2023 வரை.

குரு பரணி நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் சோர்வு, தேவையற்ற மருத்துவ செலவுகள் உண்டாகும். சிறு பிரச்சினை என்றாலும் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் தேவைக்கேற்ப பண வரவுகள் இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தற்காலிகமாக தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் நீங்கள் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள். சட்டரீதியாக சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் அரசு அதிகாரியிடம் பேசுகின்ற போது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக மன நிம்மதி குறையும். எடுத்த பணியை முடிப்பதற்கு உங்களது ஆரோக்கியமே ஒரு இடர்பாடாக இருக்கும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றுவது, சனிக்கு பரிகாரமாக சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நன்று.

குரு பகவான் வக்ரகதியில்                                     05-09-2023 முதல் 30-12-2023 வரை.

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுடைய தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேவையற்ற தடைகள் விலகி சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை விலகி அனுகூலமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று நல்ல லாபங்களை அடைவதுடன் உங்களுக்கு உள்ள நெருக்கடிகளையும் குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இருந்த பிரச்சினைகள் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஒரு பெரிய மனிதருடைய ஆதரவானது கிடைத்து உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, பிரித்தியங்கரா தேவியை தரிசிப்பது நல்லது.

குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில்                 31-12-2023 முதல் 03-02-2024 வரை.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் 10--ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு உங்கள் கையிருப்பு குறையும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருக்கக்கூடிய பாதிப்புகளால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கேது 3-ல் சஞ்சரிப்பதால் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவதுடன் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்க முடியும். சிலர் செய்யும் செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். சக ஊழியரிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடிய நிலையும் அதன் மூலம் சில ஆதாயங்களும் கிடைக்கும். சனிக்கு சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுவது, குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரத்தை வியாழக்கிழமையன்று சாற்றுவது நல்லது.

குரு பகவான் பரணி       நட்சத்திரத்தில்                    04-02-2024 முதல் 16-04-2024 வரை.

குரு பரணி நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உடல் நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது. மனைவி, பிள்ளைகள் வழியிலும் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்பட்டு மனக்கவலைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் எதிர் கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். பொருளாதார பிரச்சினைகள் இருந்தாலும் தக்க நேரத்தில் உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு உடல் சோர்வு இருந்தாலும் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வெளியூர் மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்து வகையில் பங்காளியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது உத்தமம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.

குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில்            17-04-2024 முதல் 01-05-2024 வரை.

குரு பகவான் சூரியன் நட்சத்திரமான கிருத்திகையில் 10-ல் சஞ்சரிப்பதால் ஒரு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் பொருளாதார ரீதியாக ஏற்படும் நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூட அமைப்பு, உடல் சோர்வு ஏற்படும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கவனத்தோடு செயல்பட்டால் தான் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வேலையாட்களை அனுசரித்து செல்வது, கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவது உத்தமம். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையை சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் நீங்கள் எதையும் சமாளிக்க கூடிய பலம் இருக்கும். அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். உங்கள் பணிகளில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, வியாழக் கிழமைகளில் குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

 

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீவெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

வரும் 30.10.2023 முடிய ராகு 10-ல், கேது 4-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - வெள்ளை, சிவப்பு              கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து       திசை - வடகிழக்கு               தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: