Showing posts with label Yoga. Show all posts
Showing posts with label Yoga. Show all posts

Friday, February 17, 2012

சொந்த வீடு யோகம்


சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை  தரக்கூடியதுதானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது. நீர்நிலைகளில்  வீட்டை கட்டிக் கொண்டு, மழைக்காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டது என புலம்புவது என்ன நியாயம்.

நம் முன்னோர்கள் நமக்காக எவ்வளவுதான் சேர்த்து வைத்திருந்தாலும் நம்முடைய சொந்த சம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு கட்டி தரையில் கை, கால் நீட்டி படுக்கும் சுகம் இருக்கிறதே அப்பப்பா வாழ்க்கையில் பெரிய அளவில் சாதித்து விட்ட பெருமையும், மன நிறைவும் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படி வீடு கட்டி வாழ்வதற்கும் ஒரு யோகம் வேண்டுமல்லவா. அந்த யோகத்தை அடைய நாம் பிறக்கும் போதுள்ள கிரக நிலைகளானது சாதகமாக இருந்து விட்டால் போதும். சொந்த வீடு, மனை, பூமி யோகங்களானது சிறப்பாக அமையும்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டைக் கொண்டு அவருக்கு உண்டாகக்கூடிய வீடு, மனை யோகத்தைப் பற்றி தெளிவாக  அறியலாம். 4ம் வீட்டதிபதி ஆட்சியோ, உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பூமி, மனை, வீடு, மனை காராகனாகவும், சுக காரகனாகவும் விளங்கும் சுக்கிரனும், பூமிகாரகனான செவ்வாயும் பலம் பெற்று அமைந்து 4ம் அதிபதியின் சம்மந்தமுடன் இருந்தால் வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும், அதிர்ஷ்டமும் உண்டாகும்.

அது போல பூர்வ புண்ணிய ஸ்தானங்களான 5,9 க்கு அதிபதிகளுடன் 4ம் அதிபதி சம்மந்தப்பட்டிருந்தாலும், சுப ஸ்தானங்களான 2,11 க்கு அதிபதிகளுடன் 4ம் அதிபதியின் சேர்க்கை இருந்தாலும் சொந்த வீடு, மனை, பூமி யோகங்களானது மிகவும் சிறப்பாக அமையும். 4ம் வீட்டில் எத்தனை சுபகிரகங்கள் அமைந்தாலும், 4ம் வீட்டை எத்தனை சுப கிரகங்கள் பார்வை செய்தாலும், 4ம் அதிபதியுடன் எத்தனை சுபகிரகங்களின் சேர்க்கை இருந்தாலும் அத்தனை வீடு, மனை வாங்கும் யோகங்களானது அமைந்து அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். 4ம் அதிபதியையும், 4ம் வீட்டையும் குரு பார்வை செய்தாலும் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Monday, February 13, 2012

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற்கும், சுக வாழ்க்கையை வாழ்வதற்கும அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார்கள். தற்போதைய மக்கள் தொகை பிரச்சினைகளால் எல்லாப் பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதால், அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குக்கூட அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. சேமிப்பு என்பது இயலாத காரியமாகவே உள்ளது.  இந்த நிலையில்  செல்வச் செழிப்போடு வாழக்கூடிய யோகம் என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். பிறக்கும்போதே  வசதியுள்ளவராய் பிறந்து விட்டால் பூர்வீக வழி புண்ணியங்களால்  சொகுசான வாழ்க்கை அமைகிறது. அதுவே சுயமாக சம்பாதித்து வாழ்வதற்கும் சேமிப்புகளை வைத்திருப்பதற்கும் அவரவரின் ஜனன ஜாதக கிரக நிலைகள் பலமாக இருந்தால் மட்டுமே முடிகிறது.
ஜனன ஜாதகத்தில் உள்ள  ஸ்தானங்களில் சில ஸ்தானங்கள் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமாக விளங்குகிறது. ஒருவரது ராசிக்கட்டத்தில் 1,4,7,10 ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகவும் 1,5,9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்களாகவும் விளங்குகிறது. கேந்திர ஸ்தானங்களான  1,4,7,10 ல் 1 ஐ விட 4ம், 4 வை விட 7ம் 7ஐ விட 10ம் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதுபோல திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ல் 1ஐ விட 5ம், 5 ஐ விட  9ம் பலம் வாய்ந்த ஸ்தானங்களாக உள்ளது.
மேற்கூறிய ஸ்தானங்களில் கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் பலம் பெறுவது சிறப்பு. சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும்போது அந்த வீடானது, அந்த கிரகத்தின் சொந்த வீடாக இல்லாமல் இருப்பது சிறப்பு. ஏனென்றால் அங்கே கேந்திராதிபதி தோஷம் உண்டாகி நற்பலன்களை அடைவதற்கு இடையூறு உண்டாகிறது. ஸ்தானங்களிலேயே திரிகோண ஸ்தானங்கள் பலம் மிக்கதாகும். திரிகோண ஸ்தானங்களில் கிரகங்கள் அமையப் பெறுவதே சிறப்பான அமைப்பாகும்.
ஒருவரது வாழ்வில் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடைவதற்கு கேந்திராதிபதியும், திரிகோணாதிபதியும் இணைவது சிறப்பு. கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகள் இணைந்து கேந்திர ஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோ அமைவது மிகவும் சிறப்பு.
கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10 க்கு அதிபதிகளும், திரிகோண ஸ்தானங்களான 1,5,9 க்கு அதிபதிகளும் ஒருவருக்கொருவர் இடம் மாறி பரிவர்த்தனை பெற்று கொள்வதும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் சிறப்பான அமைப்பாகும். மேற்கூறியவாறு கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை உண்டாகி. அக்கிரகங்களின் திசை அல்லது புக்தி நடைபெற்றால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைந்த செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் போன்றவற்றுடன் சிறப்பாக வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகச் சேர்க்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது 9,10 க்கு அதிபதிகளின் சேர்க்கையாகும். ஒருவர் ஜாதகத்தில் 9,10 க்கு அதிபதிகள் அத்துடன் 4 அல்லது 5 க்கு அதிபதி இணைவது மிகவும் சிறப்பாகும். அதுபோல 4,5 க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெறுகின்றபோது சகலவிதமான அதிர்ஷ்டங்களையும்அடையும் யோகம் உண்டாகும்.
கேந்திர திரிகோணதிபதிகள் இணைகின்ற போது அந்த கிரகங்களாக  நட்பு கிரகங்களாக அமைந்து விட்டால் அந்த கிரக சேர்க்கையால் உண்டாகக்கூடிய யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் வர்ணிக்கவே முடியாது.

Sunday, February 12, 2012

தாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்

என்னதான் முழு முயற்சியுடன் பாடுபட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் முன்னேற்றமான நிலையினை அடையவே முடியாது. அப்படி கஷ்டப்படும் ஒருவர் 30 வயதுக்கு மேல் திடீரென உயர்வுகளை அடைவார். இளமைக் காலத்தில் கஷ்டங்களையே அனுபவித்து அனுபவித்து மனம் வெறுக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஆளான ஒருவர் வாழ்க்கையில் திடீரென்று உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார். எப்படி இருந்தவன் இப்படி உயர்ந்து விட்டானே என பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு உயர்வுகள் உண்டாகும்.

இளம் வயதில் ஏன் கஷ்டப்பட்டார், 30 வயதுக்கு மேல் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தார்? என தெரிந்து கொள்ள, அப்படி முன்னேற்றமடைந்த ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்தோமானால், அவளுக்கு கால சர்ப்ப தோஷம் உண்டாகி இருக்கும். கால சர்ப தோஷமானது 30 வயதுக்கு மேல் யோகமாக மாறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் அமைந்திருப்பது கால சர்ப யோகமாகும். ராகு, கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இல்லாமல் ஓரிரு கிரகங்கள் தனித்து வெளியே அமைந்தாலும் 80% அது  காலசர்ப தோஷமாகவே கருதப்படுகிறது. ராகு, கேது பிடிக்குள் இல்லாமல் தனியே வெளியில் அமைந்திருக்கும் கிரகங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயத்திலோ, கேதுவின் நட்சத்திரங்களான  அஸ்வினி, மகம், மூலத்திலோ இருந்தாலும் இதுவும் காலசர்ப தோஷமே ஆகும்.

கால சர்ப தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு திருமண நடைபெற தடை, புத்திர பாக்கியம் அமைய தாமதம், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, உத்தியோக உயர்வுகளுக்குத் தடை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமற்ற நிலை, எதைத் தொட்டாலும் சிக்கல்கள் பிரச்சினைகள் போன்றவை 30 வயது வரை ஏற்பட்டு வாழ்வில் முன்னேற்றமடைய தடைகளைக் கொடுக்கும்.

முப்பது வயதுக்கு மேல் தோஷமானது யோகமாக மாறி வாழ்வில் எல்லையில்லா வளர்ச்சியைக் கொடுக்கும். எதிர்பாராத வகையில் உயர்வுகளும் உண்டாகும். வாழ்க்கை நிலையே மாறி, எடுக்கும்  காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், செல்வம், செல்வாக்கு உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினையும் உண்டாக்கும். தொட்டதெல்லாம் துலங்கி வாழ்வில் யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகி பெயர், புகழ் யாவும் உயரும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001