Wednesday, October 10, 2012

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதிமூன்றாவது இடத்தை பெறுவது அஸ்த நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திர பகவானாவார். இது கன்னி ராசிக்குரிய நட்சத்திரமாகும். இது உடலில் சிறு நீர்ப்பை, குடல் சுரப்பிகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ,ஷ,ந,ட ஆகியவை. தொடர் எழுத்துக்கள் பூ கே ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சந்திர பகவான் என்பதால் அழகான முகமும் வசீகரமான உடலமைப்பும் கொண்டவர்களால் இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும், சிறந்த நகைச்சுவையாளர்களாகவும் இருப்பார்கள். அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பதால் சட்டென கடினமான வார்த்தைகளை உபயோகிப்பார்கள். என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய கூடிய பரோகார சிந்தனைப் பெற்றவர்கள். வெகுளியான குணமிருக்கும். மிகவும் சிக்கனமாக செயல்படுவார்கள். அதிக சுயநலமும் இருக்குமாதலால் பண விஷயத்தில்  மிகவும் கவனமுடன் இருப்பார்கள். இயற்கையை ரசிப்பார்கள்.

குடும்பம்;
     
சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் மத்திய வயதிலிருந்து வசதி வாய்ப்பபுகள் பெருகும். தாய் சொல்லை மதித்து நடப்பார்கள். காதல் வயப்படக்கூடியவர்கள். மனைவி சொல்லே மந்திரம் என நினைப்பார்கள். எந்த முடிவாக இருந்தாலும் மனைவியை கலந்தாலோசித்தே முடிவெடுப்பார்கள். அளவான குடும்பத்தை பெற்றவர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தேவையின்றி தலையிட மாட்டார்கள். இனிப்பாக பேசியே பெண்களை கவர்ந்திழுத்து விடுவார்கள். பிற மதத்தினரைக் கூட மதிக்கும்  பண்பும், உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்யும் ஆற்றலும் கொண்டவர்கள். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் இரக்க சுபாவம் உடையவர்களாதலால் பாவ புண்ணியம் பார்த்து உதவுவார்கள். உணவுப் பிரியர்கள்.

தொழில்;

     அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியங்களை முடித்தே தீர வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்களாகவும், சிறந்த நகைச்சுவையாளர்களாகவும் பல துறைகளில் அனுபவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். சித்தர் பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்று பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் போன்ற துறைகளில் சாதனை செய்வார்கள். வெளியூர் பயணங்கள் என்றால் தடையின்றி மேற்கொள்வார்கள். கமிஷன் கட்டிட காண்டிராக்ட், ஏஜென்ஸி, வண்டி வாகனம் மற்றும் உணவு வகை போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். இசை ஆர்வம் உடையவர்கள் என்பதால் பணியில் ஈடுபடும் போது பாடிக் கொண்டோ அல்லது பாடல்களை கேட்டுக் கொண்டோ இருப்பார்கள் எதிரிகளை தோல்வியுற செய்வதில் வல்லவர்கள். எந்த துன்பம் வந்தாலும் தடையின்றி உழைத்து கொண்டேயிருப்பார்கள். சில நெருக்கடி காலங்களில் பிறரின் மேலேறி சவாரி செய்து முன்னேறவும் தயங்க மாட்டார்கள். கொள்கைகளில் சற்று அழுத்தமானவர்கள் என்பதால் ஆறு மாதத்திற்கொரு முறை பணியாளர்களை மாற்றி கொண்டேயிருப்பார்கள். செய்வது தொழிலோ, உத்தியோகமோ அதில் சாதனைகள் பல படைப்பார்கள்.

நோய்கள்;

     அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தோல் வியாதி, கண்கள் மற்றும் மூக்கில் பிரச்சனைகள், உடலில் கெட்ட நீர் சேரக் கூடிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவ செலவுகள் உண்டாகும்.

திசை பலன்கள்;

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சந்திர திசையின் மொத்த காலங்கள் பத்து வருடம் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள சந்திர தசா காலங்களை அறிய முடியும். இத்திசை காலங்களில் உடல் நிலையில்  ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாய்க்கு சிறு சிறு சோதனைகள் தோன்றி மறையும்.
     
இரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். இத்திசை காலங்களில் செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் இல்லையெனில் கல்வியில் மந்த நிலையையும், உடல் ரீதியாக ஆரோக்கிய பாதிப்பினையும் உண்டாக்கும். 

மூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களில் கல்வியை தொடர முடியாத நிலை, குடும்பத்தில் பிரச்சனை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நட்புகளாலும் பிரச்சனைகள் உண்டாகும்.
     
நான்காவதாக குரு திசை சாதிக்க வைக்கும் நல்ல தொழில் யோகத்தையும் பொருளாதார மேன்மையையும் கொடுக்கும். ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் யோகத்தை அள்ளி தரும் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். பொருளாதாரம் உயர்வடையும் பூமி, மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரணம் யாவும் சேரும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
அஸ்த நட்சத்திரத்தில் உபநயனம், தாலிக்கு பெண் உருக்குதல், மஞ்சள் நீராட்டுதல், சீமந்தம், காதணி விழா, கல்வி கற்க தொடங்குதல், யாத்திரை செல்லுதல் ஆடை ஆபரணம், வண்டி வாகனம் வாங்குதல், புது மனை புகுதல் கடற் பயணம் மேற்கொள்ளுதல், விதைவிதைத்தல், களஞ்சியத்தில் தானியம் சேர்த்தல் மந்திரம் கற்றல், நோய்க்கு மருந்துண்ணுதல் புதிய வேலைக்கு விண்ணப்பித்தல் வியாபாரம் தொடங்குதல், கிணறு வெட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

வழி பாட்டு ஸ்தலங்கள்

புவனகரி;
     கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ தொலைவிலுள்ள வேதபுரீசுவரர்&மீனாட்சியம்மன் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருவாதவூர்;
     மதுரைக்கு வடகிழக்கில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் அவதாரத் தலத்திலுள்ள புருஷா மிருக தீர்த்தமும் வேதநாதர் ஆரணி வல்லியம்மையும் அருள் பாலிக்கும் தலமும் சிறப்பு வாய்ந்தது.

செய்யாறு;
    காஞ்சிபுரத்திற்கு தெற்கே 28 கி.மீ தொலைவிலுள்ள திருவத்திரத்திலுள்ள இறைவன் வேதபுரீசுவரர் இளமுலை நாயகி திருத்தலம்.

எழிலூர்;
     திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு மேற்கில் 4 கி.மீ தொலைவிலுள்ள வேதபுரீசுவரர் ஸ்தலம்.

தர்மபுரி;
     தர்மபுரி மாவட்ட தலை நகரத்தில் கோட்டை கோயில் என்றழைக்கப்படும் தருப் தலத்தில் அருள் பாலிக்கும் வேளாலீசுவரர் காமாட்சியம்மன் திருக்கோயில்

     இத்தலங்களை வழிபாடு செய்வதால் அஸ்த நட்சத்திர காரர்கள் நற்பலனை அடைய முடியும். 

அஸ்த நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் அத்திர மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலனை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஏப்ரல் மாதத்தில் இரவு சுமார் பன்னிரண்டரை மணிக்கு வானத்தில் காண முடியும்.

கூற வேண்டிய மந்திரம்
     ஓம் பூர்புவஸ்ஸீவ தத்ஸவிதுர் வரேண்யம்
     பர்கோ தேவஸ்ய தீமஹி
     தியோயோ ப்ரசோதயாத்!!

பொருந்தாத நட்சத்திரங்கள்
     ரோகிணி, திருவாதிரை, சுவாதி, திருவோணம், சதயம் போன்ற ஆண் பெண் நட்சத்திரங்களை அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்ய கூடாது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Monday, October 8, 2012

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்

    இருப்தேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது இடத்தை பெறுவது உத்திர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்கும்,  2,3,4,&ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முதுகெலும்பு பகுதியை முதல் பாதமும்,  2,3,4&ம் பாதங்கள் குடல், சிறு நீர்பை, கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டே, டோ, ப, பி ஆகியவை. தொடர் எழத்துக்கள் பா, டீ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     உத்திர நட்சத்திரல் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவாகளாகவும் இருப்பார்கள். கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். இவர்களை கண்டவர்கள் மேலும் மேலும் பேசவும் பழகவும் ஆசைப்படுமளவிற்கு வசீகர தோற்றமிருக்கும். அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருந்தாலும் குறைகளை கண்டால் முகத்தில் அடித்தாற் போல பேச கூடியவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய நிலைமையிலிருந்து தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களிலில் ஈடுபாடு அதிகமிருக்கும். எவரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணி காப்பார்கள். சிக்கனத்தை கையாள்பவராகவும் சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள்.

குடும்பம்;

     உத்திர நட்சத்திரகாரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி பசியெடுப்பதால் சிறுக சிறுகவே உணவுகளை உண்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும். மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள்.

தொழில்;

     உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவராகவோ இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனதுள்ளவர்கள் என்று பெயரெடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்தவொரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.

நோய்;
     
இவர்களுக்கு முதுகில் வலியும் கழுத்து வலியும், இரத்த கொதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பும் மூளை  நரம்புகளில் ரத்த அடையும் உண்டாகும். உடல் நிலையில் பல ஹீனமாக இருப்பார்கள்.

திசை பலன்கள்;
   
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சூரிய திசை காலங்களை அறியலாம். சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் தந்தைக்கு கெடுபலன்களையும் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் சந்திர திசை காலங்களிலும் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.
     
மூன்றாவதாக வரக் கூடிய  செவ்வாய் திசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்.
நான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு நின்ற விட்டதிபதி பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தையும்  உண்டாக்கும். 

குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை அளிக்கும். 6வதாக வரும் சனி திசை காலங்கள் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.
     
உத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரமும், இலந்தை மரமுமாகும். இம்மரத்தை தொடர்ந்து வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திர ஜோடியை மார்ச் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;

     உத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல்,  புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்தல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம். 

வழி பாட்டு ஸ்தலங்கள்;

கரவீரம்;
வடகண்டம் என தற்போது அழைக்கப்படும் கருவீர ஸ்தலத்தில் கர வீரநாதராகவும் அன்ன பிரத்யட்ச மின்னம்மையாகவும் அருள் பாலி ஸ்தலத்தின் ஸ்தல விருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர்&கும்பகோணம் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது.

காஞ்சிபுரத்து மேற்கேயிருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வரரையும் வணங்கலாம்.
ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகிலுள்ள திருக்குளத்தை என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லி தாயார்,ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் உடனுறை ஸ்ரீசோரநாத பெருமானையும் வழியலாம்.
சென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லிசரரையும் வழிபடுவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்
    ஓம் மஹாதேவ்யை சவித்மஹே
     விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
     தன்னோ லஷ்மி பிரசோதயாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்

     கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Saturday, October 6, 2012

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோறாவது இடத்தை பெறுவது பூர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூர நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியதாகும். இது உடலில் முதுகெலும்பு, இதயம் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் மோ,ட,டி,டு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மொ.மௌ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை ஆணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். காம உணர்வு அதிகமிருப்பதால் மனம் அலை பாயந்து கொண்டேயிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக் கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன் கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள்.

குடும்பம்;

     காதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் மனைவி பிள்ளைகளை மட்டுமில்லாது உற்றார் உறவினர்களையும் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள். பிறர் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். இளம் வயதில் நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் மனதில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடி கொண்டிருக்கும். இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்கள். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். 30 வயதிற்கு மேல் அதிரடி மாற்றங்கள்  ஏற்பட்டு வீடு, வண்டி வாகனங்களை வாங்கி சேர்ப்பார்கள். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதால் சேமிப்பு இல்லாமல் அடிக்கடி கடன் வாங்க கூடிய நிலையும் உண்டாகும்.

தொழில்;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது  உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நடிப்பு துறையில் அதிக ஆர்வம் உண்டு. அரசு உத்தியோகமோ, சொந்த தொழிலோ எதிலும் சம்பாதிக்கும் யோகம் அதிகமிருக்கும், சுற்றுலா துறை, பொது மக்கள் தொடர்பு துறை, வர்த்தக துறை போன்றவற்றில் பணி புரியும் ஆற்றல் உடையவர்கள். சிலர் புத்தக வியாபாரிகளாகவும், பெண்கள் உபயோக படுத்தக் கூடிய பொருட்களை விற்பனை செய்ய கூடியவர்களாகவும் வாகன திரவியங்களை விற்பவராகவோ இருப்பார்கள். சூதாடத்திலும் எதிர்பாராத வகையில் பண வரவுகள் உண்டாகும். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள்.

நோய்;

     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட நோய்களால் பின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள் சிற்றின்ப பிரியர்கள் என்பதால் பால்வினை நோய்களும் தாக்கும். சர்க்கரை வியாதியாலும் அவதிபடுவார்கள். மின்சாரம் தாக்கும், மனநிலையில் பாதிப்புகளும் உண்டாகும்.

திசை பலன்கள்;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சுக்கிர திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 20 என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சுக்கிர திசா காலங்களை பற்றி அறியலாம். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்களின் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் சூரிய திசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்திசை காலங்களில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
    மூன்றாவதாக வரக்கூடிய சந்திர திசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.
   
நான்காவதாக வரும் ராகு திசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களின் முற்பாதியானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையோ, மாரகத்தையோ ஏற்படுத்தும்.

விருட்சம்;

     பூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை மார்ச் மாதம் இரவு சுமார் பதினோரு மணியளவில் உச்சி வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய கூடிய நல்ல காரியங்கள்

     பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது,  வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

கஞ்சனூர்;
     கும்பகோணம்&மயிலாடுதுறை கல்லணை சாலையில் உள்ள அக்னீசுரர் கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் சுக்கிரனின் பரிகார ஸ்தலம்.

நாவலூர்;
     தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் திருவாரூர் சாலையில் திருச்சேறை மாடக் கோயில் எழுந்தருளியுள்ள பலாசவனநாதர்&பெரிய நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

தலைச்சங்காடு;
     நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் 1.கி.மீ தூரத்திலுள்ள கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலில் அருள் பாலிக்கும் சங்கருணா தேவசுவரர்&சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம் இவற்றை வழிபாடு செய்தால் நற்பலனை பெற முடியும்.

கூற வேண்டிய மந்திரம்;

ஸம் பூஜயாமி அர்ய மானம் பல்குனி தார தேவதாம் தூம் ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்

பூர நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்தரங்கள்

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி போன்ற ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Thursday, October 4, 2012

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்







     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மகம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மகம் சிம்ம ராசிக்குரிய நட்சத்தரமாகும். இது உடலில் இதயம், முதுகு, இருப்பின் மேல் பகுதி போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ம,மி,மு,மெ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மா, மீ,மு ஆகியவைகளாகும்.

குணஅமைப்பு;

     மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காக்கும் இவர்கள் எதிரிகளை ஒட ஒட விரட்டியடிக்காமல் ஒயமாட்டார்கள். மனதில் ஒன்று, வெளியில் ஒன்று வைத்து பேச தெரியாதவர்கள். அனுபவ அறிவு அதிகமிருக்-கும். நேரம் காலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.

குடும்பம்;

     எதையும் முன் கூட்டியே அறியும் திறமை கொண்டவர்கள் என்பதால் குடும்ப வாழ்வில் அனுசரித்து செல்வார்கள். காதலித்து திருமணம் செய்து  கொள்வதையே விரும்புவார்கள். இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கை விரைவில் அமையும். சிற்றின்ப வேட்கை அதிக முடையவர்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்ககையில் செல்வம் செல்வாக்கு அதிக மிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். தவறு என மனதிற்கு பட்டால் பிறரிடம் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். உற்றார் உறவினர்களிடம் கூட வலிய சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையையும் விட மாட்டார்கள். இவர்களிடம் உதவி பெற்று வாழ்பவர்கள் கூட முன்னால் முகஸ்துதி பாடி விட்டு பின்னால் தூற்றிக் கொண்டிருப்பார்கள். மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசமிருக்கும்.

தொழில்;
     
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்து முடித்து பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள். பரந்த மனப்பான்மையும், நல்ல நிர்வாகம் திறனும் உடையவர்கள். பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புரண, இதிகாசம் ஆகியவற்றில் புகழ் பெற்று விளங்குவார்கள். பழம் பெரும் கலை, கலைகளை ஆராய்ச்சி செய்வதை விரும்புவார்கள். உளவியல் நிபுணர்களாகவும் இருப்பார்கள் பலர் பேராசியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பு, விளம்பர மாடல் போன்ற துறைகளிலும் ஈடுபடுவார்கள். வண்டி வாகனங்கள் மீது அதிக விருப்பமும் உண்டு. 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் சொந்த வீடு  யோகமும் 46 வயதிலிருந்து 52 வயதுக்குள் பெயர் புகழம் உயரும்.

நோய்கள்;

     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலின் பின்புறம் வலி ஏற்படும். சிறு நீரக பிரச்சனையும் இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனையும் தண்டு வட ஜவ்வு காய்ச்சலும் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம்.

திசை பலன்கள்;

     மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 ஆகும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், கல்வியில் மந்தநிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும்.
     
இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை மொத்தம் இருபது வருடங்கள் நடை பெறும் இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம்வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்வாழ்க்கை போராட்டகரமானதாக இருக்கும்.
     
மூன்றாவதாக வரும் சூரிய திசை காலங்களில் சூரியன் பலமாக  இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும். 

நான்காவதாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும். 
     
ஐந்தாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் திசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
     
மக நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமரமாகும். இந்த மரத்தினை வழிபாடு செய்வதினால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதம் இரவு  பன்னிரண்டு மணியளவில் உச்சி வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
மக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்-கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயிதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருவாலங்காடு;
     கும்பகோணம் மயிலாடுதுறை பாதையிலுள்ள வடா ரணீயேஸ்வரர் ஆலயம்

திருக்கச்சூர்;
     காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டிலிருந்து வடக்கே 12.கி.மீ தொலைவிலுள்ள தாததில் திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சர் என பெயர் கொண்டது. கூர்ம தீர்த்தமானது புனிதமானது

கிமுப்பழுபூர்;
     அரியலூர் மாவட்டத்திற்கு தெற்கே 10.கி.மீ தொலையில் ஆலந்துறை நாதராக ஈஸ்வரனும், அருந்தவ நாயகியும் அருள் புரியும் ஸ்தலம் இக்கோயில்களில் வழிபாடு செய்யலாம்.

கூற வேண்டிய மந்திரம்

     ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
     பாஸஹஸ்தாய தீமஹி
     தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்

மக நட்சத்திரற்க பொருந்தாத நட்சத்திரங்கள்

     அஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Tuesday, October 2, 2012

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;




இருப்த்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்ய  நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டி, டு, டே, டோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மெ, மை ஆகியவை யாகும்.

குண அமைப்பு;

ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்றறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகிய கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மன வலிமை¬யும், உடல் வலிமையும் ஒருக்கே பெற்றவர்கள். எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய திறனிருக்கும். நாளை நடப்பதை கூட முன் கூட்டியே அறிவர். மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள் கண்களால் ஆயிரம் கதை பேசுவார்கள். சற்றே சஞ்சல குணமும் உண்டு. இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேரிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

குடும்பம்;

     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமை வயப்பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்தால் பல தகிடு தத்த வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள் நொறுக்கு தீனி விரும்பிகள் என்பதால் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.

தொழில்;

     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். அதிக மன தைரியம் கொண்டவர்கள் இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள். மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். பெயர் புகழ் அந்தஸ்து யாவும் பெருகும். அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள். பலரை நிர்வாகிக்கும் ஆற்றல் ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும் மெக்கானிக்கல், பொறியியல் துறைகளிலும் வல்லவர்கள்.

நோய்கள்;

     இவர்களுக்கு, நுரையீரல், வயிறு, உணவு குழாய் மற்றும் குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு கல்லீரல், கணையம், ஈரல் போன்ற பாகங்களில் பிரச்சனைகள் உண்டாவதுடன், மூச்சு விடுவதில் சிக்கல்களும், மூட்டுகளில் வலியும், கால்களில் வீக்கமும், நரம்பு சம்மந்த பிரச்சனைகளும் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும்.

திசை பலன்கள்;

     ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இதன் மொத்த வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன்  தசா காலங்களை அறியலாம். முதல் திசையாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று பண்டைய நூல்களில் எழுதியிருந்தாலும் அது உண்மையா என்ற பல கேள்விகள் இன்றும் உள்ளது.

     இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும்.

     மூன்றாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

     சூரியன் 6வருடம் சந்திரன் 10 வருடம் செவ்வாய் 7 வருடம் என நடைபெறும் இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.

     ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு ராகு திசை மாரக திசையாகும். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்
     நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

வழி பாட்டு  ஸ்தலங்கள்

சங்கரன் கோவில்;
     திருநெல்வேலிக்கு  வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.

புள்ள பூதங்குடி;
     கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.

திருப்புகலூர்;
     திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

நாகூர்;
     நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.

திருவாரூர்;
     அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.

கூற வேண்டிய மந்திரம்

     ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே
     சர்ப்ப ராஜாய தீமஹி
     தந்நோ அனந்த ப்ரசோதயாத்

ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

     அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.



ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001