Wednesday, August 31, 2011

சனி பகவான் கொடுப்பாரா கெடுப்பாரா?

ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாகக் கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். பொதுவாக நாம் அன்றாடம் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்கும் பலன்கள் அனைத்தும் கோட்சார ரீதியாக கூறப்படும் பொதுப் பலன்களே ஆகும்.

கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமாக சனி பகவானே இருக்கிறார். சனி என்ற பெயரைக் கேட்டாலே எல்லோர் மனதிலும் ஒரு பய உணர்வு இருக்கத்தான் செய்கிறது. சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். 

சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை, 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர். குறிப்பாக சனி பகவான் 3, 6, 11ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை, உடல் நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.

ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்ம ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி, என்றும் கூறுவார்கள். 

இக்காலங்களில் உடல் நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சனைகள், நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.

சனி 4ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம். இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.

சனி 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்கிறோம். இக்காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சனைகள், விரயங்கள் உண்டாகும்.

சனி 8ல் சஞ்சரிக்கும் போது, அஷ்டம சனி உண்டாகிறது. இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல் நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். 

குறிப்பாக சனி பகவான் சாதகமற்று சஞ்சரிக்கும் போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும். தொழில் ஸ்தானமான 10ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல.

பொதுவாக மேற்கூறிய ஸ்தானங்களில் சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாத்தில் அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது.

9.9.2009 அன்று திருக்கணிதப்படியும், 26.9.2009 அன்று வாக்கியப்படியும் ஏற்பட்ட சனி மாற்றத்தால் சனி பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் சிம்ம ராசியும், துலாத்திற்கு விரய சனியும், மிதுன ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும் கும்பத்திற்கு அஷ்டம சனியும் மீன ராசிக்கு கண்ட சனியும், தனுசுவிற்கு ஜீவன சனியும் உண்டாகும். இதனால் இந்த ராசி நேயர்கள் எதிலும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

கன்னியில் சனி சஞ்சரிப்பதால் மேஷம், கடகம், விருச்சிக ராசி நேயர்களுக்கு இரண்டரை வருட காலங்கள் பொற்காலங்களாக அமைந்து நற்பலனை உண்டாக்கும்.

சனியால் பாதிக்கப்படும் நேயர்கள் சனிக்கு உகந்த பரிகாரங்களை செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

சனிப்பெயர்ச்சி யாகங்களில் கலந்து கொண்டு சனிக்கு பரிகாரம் செய்யலாம். முடிந்தால் திருநள்ளாறு பரிகார ஸ்தலத்திற்கும் சென்று பரிகாரம் செய்யலாம்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Sunday, August 28, 2011

சுய முயற்சியால் யாரெல்லாம் சாதனை செய்ய முடியும்?

3ம் பாவத்தின் சிறப்பு
பொதுவாக ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையை தெளிவாக நிர்ணயம் செய்யலாம். ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்கள் உண்டு. தற்போது 3ம் பாவத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி இங்கு தெளிவாகப் பார்க்கலாம். 

ஜென்ம லக்னத்திற்கு 3ம் பாவத்தைக் கொண்டு ஒருவரது முயற்சி, தம்பி, தங்கை யோகம், காது, தோள்பட்டை, இசை ஞானம், வேலையாட்கள் போன்றவற்றைப் பற்றி தெளிவாக அறியலாம்.

3ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபர் பார்வை 3ம் வீட்டிற்கு இந்தாலும் உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், பொருளாதார மேன்மை உண்டாகும். 3ல் சூரியன், செவ்வாய், குரு போன்ற ஆண் கிரகங்கள் அமையப் பெற்றால் ஆண் உடன் பிறப்பும் சுக்கிரன் சந்திரன் அமையப் பெற்றால் தங்கை யோகமும் உண்டாகும். 3ல் குரு அமைந்திருந்தாலும் 3ம் வீட்டை குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்த்தாலும் உடன் பிறந்தவர்கள் வசதி வசய்ப்புடன் வாழக்கூடிய அமைப்பு உண்டாகும். 

3ல் சனி அமையப் பெற்று செவ்வாய் பார்த்தால் சகோதர வழியில் இழப்புகள் ஏற்படும். 3ம் வீட்டில் சனி, ராகு அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷமாகும். இளைய உடன் பிறப்புகள் ஏற்படாது. 

சகோதர காரகன் செவ்வாய் பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் பாவ கிரக சேர்க்கைப் பெற்றாலும் உடன் பிறந்தவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். 3ல் சுக்கிரன் அமையப் பெற்று அதனை சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்தால் உடன் பிறந்த சகோதரிகளுக்கு தோஷமாகும்.

3ம் வீட்டில் சுக்கிரன் சந்திரன் இணைந்து அமையப் பெற்றாலும், 3ம் வீடு சுக்கிரன் சந்திரன் வீடாக இருந்து, சுக்கிரன், சந்திரன் பரிவர்த்தனை பெற்றோ ஆட்சி, உச்சம் பெற்றோ இருந்தாலும் கலை, இசை போன்றவற்றிலும், சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டாகும்.

3ல் பாவ கிரகங்கள் பலமாக அமைய பெற்று சுபர் பார்வை ஏற்பட்டிருந்தால் எடுக்கின்ற முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும் அமைப்பு, சுய முயற்சியால் பல்வேறு சாதனைகளை செய்யும் அமைப்பு உண்டாகும்.

3ல் சனி ராகு இணைந்திருந்தால் நகத்தில் பாதிப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி 3, 11ல் சனி ராகு அமையப் பெற்று புதன் பலமிழந்தால் காதுகளில் பாதிப்பு உண்டாகும். சூரியன் செவ்வாய் 3ல் இருந்து பாவ கிரகங்கள் பார்வை பெற்றால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. 

அதுபோல 3ல் செவ்வாயை பாவகிரகங்கள் பலமாக பார்வை செய்தாலும், பாவ கிரக சேர்க்கை பெற்றாலும் கையில் ஏதாவது ஒரு ஆயுதத்தால் அடிபடக் கூடிய சூழ்நிலை உண்டாகும். 

அதுமட்டுமின்றி 3ல் பாவ கிரகங்கள், பலமாக அமையப் பெற்று சுபர்பார்வையின்றி இருந்தால் கை கால் வலி, வாத நோய் உண்டாகும். குறிப்பாக 3, 9ல் பாவ கிரகங்கள் இருப்பதன் மூலம் கை கால்களில் முட்டிகளில் வீக்கம் உண்டாகும். 3ல் கிரகங்கள் பலமிழந்திருந்தாலும், சனி பகவான் பலமிழந்து பாவகிரக சேர்க்கைப் பெற்றாலும் வேலையாட்களால் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Thursday, August 25, 2011

தட்டுப்பாடற்ற தன வரவு யாருக்கு?

இன்றைய சமுதாயத்தில் எல்லோரும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதையே விரும்புகிறார்கள். தாராளமான பண நடமாட்டம் இருந்தால் தான் அன்றாடம் எல்லாவிதமான செலவுகளையும் சமாளிக்க முடியும். பணம் என்பது சிலருக்கு  சொந்த உழைப்பால் உண்டாகிறது. சிலருக்கோ மற்றவர்களின் உதவியால் கிடைக்கிறது. சிலருக்கு நேர்மையான வழியிலும் சிலருக்கோ தவறான வழியிலும் தன வரவுகள் உண்டாகிறது. 

பொதுவாக பண நடமாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஜாதக ரீதியாக சிறப்பான தன யோகம் இருந்தால் மட்டுமே தாராள தன வரவு உண்டாகிறது. தாராளமான தன வரவு யாருக்கு உண்டாகிறது யாரால் உண்டாகிறது என்பதைப் பார்ப்போம்.

தன யோகம்
பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு தன ஸ்தானம் ஆகும். 11ம் வீடு லாபஸ்தானம் ஆகம். 9ம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 4ம் வீடு அசையும், அசையா சொத்து ஸ்தானமாகும். 10ம் வீடு தொழில் ஸ்தானமாகும். 

பொதுவாக தன ஸ்தானாதிபதி 1, 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், பாக்கிய ஸ்தானமான 9ம் அதிபதி 1, 2, 4, 5 10, 11க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் 10ம் அதிபதி 1, 2, 4, 5, 11க்கு அதிபதிகளுடன், சேர்க்கை பெற்றாலும் 11ம் அதிபதி 1, 2, 4 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் லக்னாதிபதி 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், தாராள தன வரவு உண்டாகும்.

பொதுவாக தனாதிபதி எந்த கிரக சேர்க்கை பெறுகிறதோ, எந்த பாவாதிபதியுடன் சேர்க்கை பெறுகிறதோ, அந்த பாவம், அக்கிரகம் யாரை குறிக்கிறதோ அவர்கள் மூலம் தாராளமான தன வரவுகள் உண்டாகும்.

தந்தை
ஜென்ம லக்னத்திற்கு 9ம் வீடு தந்தை ஸ்தானம்.  தந்தை காரகன் சூரியன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் 2, 9க்கு அதிபதி பலம் பெற்று இருந்தாலும் 2, 9க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று உடன் சூரியனும் பலம் பெற்றிருந்தாலும் 2, 9ல் பாவ கிரகங்கள் அமையாமல் சூரியன் பாவிகள் சேர்க்கை பெறாமலும் இருந்தால் தந்தை மூலமாக தாராள தன வரவு உண்டாகும். குறிப்பாக 9ம் அதிபதி வலுவாக அமையப் பெற்று 2, 4க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் தந்தை மூலமாக தாராள தன வரவுகள் உண்டாகும்.

தாய்
ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீடு தாய் ஸ்தானம் ஆகும். 2ம் அதிபதியும் 4ம் அதிபதியும் இணைந்திருந்தாலோ, பரிவர்த்தனைப் பெற்றாலும், சுபர் வீட்டில் அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றாலும், இருவரும் இணைந்து பலம் பெற்றாலும் தாய் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். 

அதுபோல தாய் காரகன் சந்திரன் 2, 4க்கு அதிபதிகளுடன் இணைந்து பலமாக அமையப் பெற்றால் தாய் வழியில் நல்ல அனுகூலம் மிகுந்த பலன்கள் உண்டாகும்.

சகோதரன்
ஜென்ம லக்னத்திற்கு 3ம் பாவம் இளைய சகோதர ஸ்தானம் ஆகும். 11ம் வீடு மூத்த சகோதர ஸ்தானம் ஆகும். சகோதர காரகன் செவ்வாய் ஆவார். பொதுவாக 1, 3க்கு அதிபதிகள் குரு போன்ற சுப கிரக சேர்க்கைப் பெற்று 2ல் அமையப் பெற்றாலும் 3ம் அதிபதி 2ல் அமையப் பெற்று குரு போன்ற சுப கிரக பார்வை பெற்றாலும் 2, 3க்கு அதிபதிகள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் பலம் பெற்றாலும் 3ம் அதிபதி செவ்வாய் சேர்க்கையோ, பார்வையோ பெற்று 2ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 3, 11க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் உடன் பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள் ஏற்றங்கள் உண்டாகும். 

3ம் அதிபதி உச்சம் பெற்று ஆண் கிரகப் பார்வை பெற்றாலும் 3, 4க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும் 3, 4க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றோ, சேர்க்கைப் பெற்றோ உடன் செவ்வாய் இருந்தாலும், 3, 10க்கு அதிபதிகள் சேர்க்கைப் பெற்றோ, பார்வை பெற்றோ இருந்தாலும் உடன்பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள், அசையா சொத்து யோகம், கூட்டுத் தொழில் யோகம், தாராள தன சேர்க்கை உண்டாகும்.

மனைவி
ஜென்ம லக்னத்திற்கு 7ம் பாவம் மனைவி ஸ்தானம் ஆகும. மனைவிக்கு காரகன் சுக்கிரன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனும் 7ம் வீட்டு அதிபதியும் பலமாக இருந்தால் மனைவி மூலமாக தாராளமான தன வரவுகள் உண்டாகும். 

குறிப்பாக 7ம் அதிபதி 2, 4, 5, 9, 11க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் கேந்திர திரிகோணாதிபதியுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் மனைவி மூலமாக அசையா சொத்து சேர்க்கை அனுகூலங்கள் உண்டாகும். சுக்கிரனும் பலம் பெற்று விட்டால் தாராளமான தன வரவுகள் மனைவி மூலம் யோகங்கள் ஏற்றங்கள் உண்டாகும். அதுமட்டுமின்றி 7, 10க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றால் மனைவியுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்து தாராளமான தன வரவினை அடையும் அமைப்பு உண்டாகும்.
பூர்வீகம்
ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். ஒருவர் ஜாதகத்தில் 5ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையாமல் 5ம் அதிபதி 2, 9, 11க்கு அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் பூர்வீக வழியில் சொத்துக்கள் தாராளமான தன வரவுகள் உண்டாகும்.

குறிப்பாக 5ம் அதிபதி 4ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும், 4, 5க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும்,  வலுவாக அமையப் பெற்றாலும் பூர்வீக வழியில் சொத்துக்களை அடையும் யோகமும் அதன் மூலம் தாராள தன வரவும் உண்டாகும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Sunday, August 21, 2011

உபத்திரம் உண்டாக்கும் களத்திர தோஷம்

இன்றைய சமுதாயத்தில் நிம்மதியான வாழ்க்கை அமைய வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பும், மண வாழ்வில் நிம்மதியும் இருக்க வேண்டும். ஜனன ஜாதக அமைப்பில் சிறப்பாக கிரக அமைப்பு இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், மங்களகரமாகவும் இருக்கும். அதுவே தோஷங்கள் அமைந்து விட்டால் மண வாழ்க்கை நிம்மதியற்றதாக ஆகிவிடும். 

பொதுவாக 7ம் வீடு களத்திர ஸ்தானம் என்றாலும் குடும்ப ஸ்தானமான 2ம் வீடும், சுக ஸ்தானமான 4ம் வீடும் காதல் மற்றும் புத்திர ஸ்தானமான 5ம் வீடும் மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீடும், கட்டில் சுக ஸ்தானமான 12ம் வீடும் மண வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயும், மண வாழ்விற்கு காரகனாக விளங்குகிறார்கள். ஒவ்வொருவரின் மண வாழ்க்கையும்அவரவர் ஜாதகத்திலுள்ள கிரக அமைப்பிற்கேற்ப உண்டாகிறது. 7ம் வீடும் அதனை பார்க்கும் கிரகங்களும் மணவழ்விற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 7ல் அமையும் கிரகங்களின் இயல்பிற்கேற்ப மண வாழ்க்கை அமைகிறது. அதனால் ஜென்ம லக்னாதிபதியும், 7ம் அதிபதியும் 7ல் அமையும் கிரகமும் நட்பு கிரகமாக இருப்பதும் மிகவும் உத்தமம். பகை கிரகங்களாக இருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உதாரணமாக சிம்ம லக்னம், கும்பலக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி 7ம் அதிபதி பகை கிரகம் என்பதால் அவ்வளவு எளிதில் மண வாழ்வில் ஒற்றுமை உண்டாவதில்லை.

மண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட 7ம் அதிபதியும் 7லிலும் களத்திர காரகனும் சுபர் சேர்க்கை மற்றும் பார்வையுடன் இருப்பது நல்லது. அதுவே 7ம் அதிபதியும் சுக்கிரனும் சனி செவ்வாய் ராகு கேது சூரியன் போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும். செவ்வாய் கேதுவால் தோஷம் உண்டானால் மற்றவர் மீது (வாழ்க்கை துணை) கோபப்படும் நிலை, முன்கோபம், சண்டை சச்சரவு, விபத்து, போன்றவற்றால் வாழ்வில் பிரிவு உண்டாகும். 

ராகு தோஷம் உண்டானால் கலப்பு திருமணம், வாழ்க்கைத் துணையிடம் நம்பிக்கையில்லாத நிலை, ஏமாற்றுதல், போன்றவை மூலமாக பிரிவு உண்டாகும். சனியால் ஒருவருக்கு களத்திர தோஷம் உண்டானால் வாழ்க்கை தாமதமாக அமைவது மட்டுமின்றி ஒரு பற்று பாசமற்ற நிலை இருக்கும். பொதுவாக 7ல் ஒன்றுக்கு மேற்பட்ட கிரக சேர்க்கை ஏறுபட்டாலோ, 7ம் வீட்டை பாவிகள் பார்த்தாலும் மண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகும்.

7ம் அதிபதி 6, 8, 12ல் அமைந்து அது ஆட்சி வீடு அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக மனைவிக்கு நோயினை உண்டாக்கும். சுக்கிரன் பாவிகளுக்கிடையே சேர்க்கை பெற்று இருந்தால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும். ஜென்ம லக்னத்தில் 2, 7ல் பாவிகள் அமையப் பெற்றால் மனைவியை இழக்க நேரிடும்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடு காதல் திருமணத்தைப் பற்றி குறிக்கும் ஸ்தானமாகும். 9ம் வீடு தந்தை ஸ்தானம் மட்டுமின்றி நமது முன்னோர்களையும், குடும்ப பாரம்பரியத்தையும் குறிக்கும் ஸ்தானமாகும். பொதுவாக செவ்வாய் சுக்கிரன் பாவிகள் சேர்க்கைப் பெற்று 5, 9ல் அமையப் பெற்றாலும் 5, 9ம் பாவங்களில் பலமான பாவ கிரகம் அமையப் பெற்றாலும் கடுமையான களத்திர தோஷம் உண்டாகி கலப்பு திருமணம், காதல் திருமணம் செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும். 

அதுபோல சந்திரன் பலமிழந்து 7ல் அமையப் பெற்று பாவகிரக சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் தேவையற்ற பிரச்சனை பாதிக்கப்பட்ட நபரை மணமுடிக்கக் கூடிய சூழ்நிலை, உண்டாகும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001

Saturday, August 20, 2011

பிரபல ஜோதிடர் கணித்த சனி பெயர்ச்சி பலன்கள்

பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் கணித்த சனி பெயர்ச்சி பலன்கள் இங்கே கிளிக் செய்யவும்.
-முருகு பாலமுருகன்
 Mobile:0091-7200163001