Showing posts with label Partner Ship. Show all posts
Showing posts with label Partner Ship. Show all posts

Monday, April 16, 2012

யாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெறலாம்

படித்து முடித்தவுடன் இன்றைய இளைஞர்கள் சும்மா இருக்க விரும்புவதில்லை. ஏதாவது ஒரு தொழிலை செய்து சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். உடன் படித்த நண்பர்கள் அல்லது உற்றார், உறவினர்கள் ஆகியோருடன் தங்களால் இயன்ற அளவில் முதலீடுகளைப் போட்டு ஏதாவது ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, சிறப்பாகச் செயல்பட்டு, அதன்மூலம் படிப்படியாக முன்னேற்றமடைந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பினை பெறுகிறார்கள்.

 ஒருவர் தனி நபராகச் செயல்படாமல் யாரையாவது துணைக்கு சேர்த்துக் கொண்டு கூட்டாக சேர்ந்து தொழில் செய்வதே கூட்டுத் தொழிலாகும். எல்லோருக்குமே அரசாங்க பணி கிடைக்குமா என்றால், அது இயலாத காரியம்தான். மற்றவர்களிடம் கைகட்டு சேவகம் செய்ய எல்லோருமே விரும்புவார்களா? என்றால், அதுவும் இயலாதது தான். சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாக ஒரு தொழில் தொடங்கி அதில் நம்பிக்கைக்குரியவர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தொழில் செய்கிறார்கள்.

இப்படி கூட்டுத் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் ஜோதிட ரீதியாக யாருக்கு அமைகிறது என பார்த்தோமானால், ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடம் தொழில் ஸ்தானமாகும். 10க்கு, 10ம் இடமான 7ம் பாவம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று அமைகின்றபோது, கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலங்களை அடைய நேரிடுகிறது. 7ம் அதிபதி 10ம்  அதிபதி சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்தாலும், 10ம் அதிபதி 7ல் அமையப் பெற்றாலும் 7,10 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கூட்டுத் தொழில் செய்து  சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 10ம் வீட்டை விட 7ம் வீடு பலம் பெறுமேயானால் கூட்டுத்தொழில் யோகமானது சிறப்பாக அமையும்.

ஒருவருக்கு கூட்டுத் தொழில் யோகம் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும் யாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் லாபம் சிறப்பாக இருக்கும் என பார்க்கும் போது ஒரு ஆணின் ஜாதகத்தில் 7,10 க்கு அதிபதிகள் இணைந்து சுக்கிரனும் வலுவாக அமைந்தால் மனைவியுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஜாதகர் கற்ற கல்வியையே  மனைவியும் கற்றிருந்தால் அந்தத் துறையில் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கக்கூடிய யோகம் அதன் மூலம் லாபங்கள் ஏற்படும்.

ஏழாமிடம் கூட்டுத்தொழில் ஸ்தானம் என்பதால் 7ம் அதிபதி 3,6,8,12 ல் மறைந்து பகை பெற்றோ, நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் இருக்குமேயானால், அவர் எந்தவொரு தொழிலையும் கூட்டு சேர்ந்து செய்வதை தவிர்த்து தனித்து செயல்படுவதே மிகவும் நல்லது. 7ம் அதிபதி கேந்திர திரிகோண கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் பார்வை மற்றும் நட்பு கிரக சேர்க்கையுடனிருந்தால், கூட்டுத் தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டு. தொழில் ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10ம் அதிபதியுடன் இணையும் பலம் பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கேற்ற நபர்கள் அவருக்கு தொழில் ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள்.

அதுபோல 3,11 க்கு அதிபதிகள் 10ம் அதிபதியுடன் சேர்ந்து  செவ்வாய் பலம் பெற்றிருந்தால் உடன் பிறந்த சகோதரர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன், சந்திரன் பலம் பெற்றிருந்தால் சகோதரி அல்லது உறவுப் பெண்கள், தோழிகள் போன்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பு, சகோதரியை சார்ந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.

ஒருவர் என்னதான் கல்வி கற்றிருந்தாலும், அவர் ஜாதகத்தில் 5,9 ம் அதிபதிகள் பலம் பெற்று 10ம் அதிபதியுடன் இணைந்திருந்து 5,9  ம் பாவ கிரகங்கள் எதுவும் அமையாமல் இருந்து, தந்தை காரகன் சூரியனும் பலமாக அமைந்து, சூரியனின் வீடான சிம்மத்தின் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையாமல் இருந்தால் தந்தை செய்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்த செய்யக்கூடிய அமைப்பு, தந்தை வழி மூதாதையர்கள் செய்த தொழிலை செய்யும் அமைப்பு, தந்தை வழி உறவுகளுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் அமைப்பு உண்டாகும்.

10 ம் அதிபதியுடன் 4ம் அதிபதியும் சந்திரன், புதன் போன்ற கிரகங்களும் சேர்க்கை பெற்றிருந்தால் தாய் வழி உறவுகள்  மற்றும் தாய் மாமனுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

10 ம் அதிபதியுடன் 2ம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

10 ம் அதிபதியுடன் குரு, புதன் இணைந்து பலம் பெற்று வலுவாக அமைந்திருந்தால், நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி பலம் பெற்று அமைந்து சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு திறமையான வேலை ஆட்கள் கிடைக்கப் பெறுவதுடன், வேலையாட்களிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்து, அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 10ம் அதிபதி 5ம் அதிபதியின் சேர்க்கை பெற்று, புத்திரகாரகன் எனவர்ணிக்கப்படக் கூடிய  குரு பகவானும் பலம் பெற்றிருந்தால் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் உதவியுடன் தொழிலில் பல சாதனைகள் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

கூட்டுத்தொழில் செய்ய நினைப்பவர்கள் அவருடைய ஜனன ஜாதகத்தை நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக, ஒருவரது ஜாதகத்தை ஆராயும் போது ஏதாவது ஒரு ஸ்தானம் பலமாக இருந்தால் அந்த ஸ்தானத்தின் காரகத்துவத்திற்கேற்ற நபர் ஜாதகருக்கு கடைசி வரை நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். அப்படி எந்த ஸ்தானம் கிரகம் பலம் பெற்று அமைந்திருக்கின்றதோ, அந்த ஸ்தானம் மற்றும் கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நபரை கூட்டாகச் சேர்த்து தொழில்  செய்யும் போது நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற லக்னங்களின் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதை நல்லது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001