Friday, December 26, 2025

உடல் நலத்தில் எப்போது கவனத்துடன் இருக்க வேண்டும்

உடல் நலத்தில் எப்போது கவனத்துடன் இருக்க வேண்டும்

முனைவர் முருகு பால முருகன்

 

    இன்றைய சூழ்நிலையில் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்வதையே விரும்புகிறோம். ஒருவர் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால் அவர் அனைத்து செல்வத்தையும் அடைந்து விட்டதாகவே இன்றைய நிலையில் நிலைமை உள்ளது. ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தனிப்பட்ட ஜாதகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிறந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகநிலை சிறப்பாக இருந்தால் திடகாத்திரமான உடலமைப்பு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் உண்டாகும். அதுவே பிறந்த நேரத்தில் இருக்கும் கிரக நிலை சற்று சாதகமற்று இருந்தால் உடல் உபாதைகள், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகிறது.

    ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னம், ஆயுள் ஸ்தானம் என வர்ணிக்கப்படக் கூடிய 8&ஆம் வீடு, ஆயுள்காரகன் சனி ஆகியவை பலம் பெறுவது மிகவும் முக்கியம். கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் சிறப்பான உடல் அமைப்பு, நல்ல ஆரோக்கியத்தை ஒருவர் அடைய முடியும். கிரகங்கள் நீச்சம் பெற்று இருந்தாலும், பலம் இழந்திருந்தாலும் வக்ரம் பெற்றிருந்தாலும் எந்த கிரகம் பலம் இழந்து இருக்கிறதோ அக்கிரக தொடர்புடைய உடல் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். ஜாதகத்தில் நீச்ச கிரகத்தை கூட நம்பி விடலாம் வக்ர கிரகங்களை நம்பமுடியாது. வக்ர கிரகங்கள் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பலனை ஏற்படுத்தும் என்பதனை தீர்மானிக்க முடியாது.

    உடல்நலம் சிறப்பாக இருப்பது போல் தெரியும் ஆனால் வக்ர கிரக தசாபுக்தி நடைபெறுகின்ற பொழுது எதிர்பாராத திடீர் உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. சரி விஷயத்துக்கு வருவோம், ஒருவர் நீண்ட ஆயுளோடு இருப்பதற்கு லக்னாதிபதி பலம் பெறுவதும், சனி வலுவாக இருப்பதும், லக்னத்திற்கு 6, 8&ஆம் வீடுகள் பலமாக இருப்பதும் சிறப்பு. ஜோதிடத்தில் ஆறாம் வீட்டை கொண்டு ருணம் ரோகத்தை பற்றி அறிய முடியும். ஆறாம் வீடு பாதிக்கப்பட்டால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். எட்டாம் வீடு ஆயுள் ஸ்தானமாகும். எட்டாம் வீடு பாதிக்கப்பட்டால் அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    லக்னாதிபதி, 6, 8&க்கு அதிபதி, சனி ஆகிய கிரகங்கள் சுபகிரக பார்வையுடன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் சிறப்பான ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், திடகாத்திரமான உடலமைப்பும் ஏற்படும். சரி எப்பொழுது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என பார்க்கின்ற பொழுது ஒருவர் ஜாதகத்தில் நீச்சம் பெற்ற கிரகங்களின் தசா புத்தி, வக்ர கிரகங்களின் தசா புத்தி நடைபெறுகின்ற பொழுது ஆரோக்கிய குறைபாடுகள், உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக 6, 8 அதிபதிகள் பலவீனமாக இருந்து அதாவது நீசம் பெற்றோ, பகை நட்சத்திரங்களில் அமையப் பெற்றோ, வக்ரம் பெற்றோ இருந்து அதன் தசாபுக்தி நடைபெறுகின்ற பொழுது திடீரென்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. எந்த கிரகம் பலவீனமாக இருக்கிறதோ அக்கிரகத்தின் காரகத்துவ ரீதியாக உடல் உபாதைகள் ஏற்படும். ஜோதிடத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. உதாரணமாக நீங்கள் உங்களது தனிப்பட்ட ஜாதகத்தை சோதித்துப் பாருங்கள்.

    சூரியன் பலவீனமாக இருந்தாலும், சர்ப கிரக சேர்க்கைப் பெற்று இருந்தாலும் அதன் தசா புக்தி காலங்களில் இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட உபாதைகள், கண்களில் கோளாறு ஏற்படுகிறது.

    சந்திரன் பலவீனமாக இருந்தாலும், சர்ப கிரக சேர்க்கைப் பெற்று இருந்தாலும் அதன் தசா புக்தி காலங்களில் ஜல சம்பந்தப்பட்ட பாதிப்புகள், உண்ணும் உணவே விஷமாகும் நிலை, மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது.

    ஒருவர் ஜாதகத்தில் புதன் வக்ரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு புதன் திசை அல்லது புக்தி நடைபெறுகின்ற பொழுது நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அதிலும் குறிப்பாக மூட்டு வலி, கை, கால் வலி ஏற்படுகிறது.

    குரு வக்ரம் பெற்றிருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் அதன் தசா புக்தி காலங்களில் வயிறு பாதிப்பு, குடல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் செவ்வாயின் திசை அல்லது புக்தி நடைபெறுகின்ற பொழுது ஹார்மோன் பிரச்சினை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை குறிப்பாக ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகள், மாதவிடாய் கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண்களுக்கு ரத்த சம்பந்தபட்ட பாதிப்புகள், வெட்டு காயங்கள் விபத்துகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

    சுக்கிரன் வக்ரம் பெற்றிருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் அதன் திசை புக்தி காலங்களில் கண் பாதிப்பு, சர்க்கரை வியாதி, ரகசிய உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    சனி வக்ரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அதன் தசா புக்தி காலங்களில் உடலில் எதிர்ப்பு சக்திகள் குறையும் நிலை, உடல் ஊனம், எலும்பு சம்பந்தபட்ட பிரச்சினை, பற்களில் பிரச்சினை, கால் பாதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

    சர்ப கிரகங்களான ராகு கேது சாதகமற்று இருந்து அதன் திசை புக்தி நடைபெற்றால் அலர்ஜி பிரச்சினை, ஒருவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாத நிலை உண்டாகிறது.

    அடுத்து ஜோதிட ரீதியாக ஒருவருக்கு எந்த நேரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என பார்க்கின்ற பொழுது, சில கிரக திசைபுக்தி நடைபெறுகின்ற பொழுது உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அவை எது என பார்க்கின்ற போது 12 லக்னத்தையும் சரம், ஸ்திரம், உபயம் என பிரித்துள்ளார்கள்.

    சர லக்னம் என வர்ணிக்கப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 7-&ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் என வைத்துள்ளார்கள்.

    ஸ்திர லக்கனம் என வர்ணிக்கப்படும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3, 8&ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும்.

    உபய லக்னம் என வர்ணிக்கப்படும் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 11&ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும்.

    ஆக மேற்கூறிய விதிப்படி சர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 7&-ஆம் வீட்டு அதிபதிகளும், 2, 7&ஆம் வீடுகளில் அமையப் பெற்ற கிரகங்களின் திசை, புத்தி நடைபெறுகின்ற பொழுதும், ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3, 8&ல் அமையப் பெற்ற கிரகங்களும், 3, 8&ஆம் அதிபதியின் திசை புத்தி காலத்திலும், உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 11&ல் அமையப் பெற்ற கிரகங்களும், 7, 11&ஆம் அதிபதியின் திசை புத்தி காலங்களில் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மேற்கூறிய கிரகங்களின் திசை புக்தி நடைபெறுகின்ற பொழுது ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம ராசிக்கு 1, 7, 2, 8-&ல் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது சஞ்சரித்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அக்கிரகத்துக்குரிய தெய்வங்களை மனதார வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

 

No comments: