Thursday, January 1, 2026

புத்தாண்டு பலன் - 2026 - மகர ராசி

 

புத்தாண்டு பலன் - 2026 - மகர ராசி

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்

நவகிரகங்களில் ஆயுள் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் கடின உழைப்பாளி. எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் உங்களுடைய லட்சியங்களை நிறைவேற்றுவதில் மன உறுதியோடு செயல்படக்கூடிய நபராக இயற்கையிலே இருப்பீர்கள். வரும் 2026-ம் ஆண்டில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமான சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் முயற்சி ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3-ல் சாதகமாக சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். பொதுவாக சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பது மிகவும் சாதகமான அமைப்பாகும். இதனால் வரும் நாட்களில் உங்களுக்கு மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்களை வரும் நாட்களில் நிறைவேற்றக்கூடிய ஒரு பலமானது இருக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கும். உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் நிறைவேறுவது மட்டுமில்லாமல் பிறருக்கு நீங்கள் தந்த வாக்குரிகளை எளிதில் நிறைவேற்ற முடியும்.

 உங்களுக்கு இருக்கக்கூடிய அநாவசிய செலவுகள் குறைவதால் சேமிக்க கூடிய அளவிற்கு ஒரு சில சாதகமான சூழ்நிலை உண்டாகும்.  நீண்ட நாட்களாக பாகப்பிரிவினை ஆகாமல் இருந்தவர்களுக்கு பங்காளிகள் இடையே ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது அதற்கான பிரதிபலன்களை பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவானது தக்க நேரத்தில் கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் வரும் நாட்களில் தீர்வு கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பானது உண்டு. உங்களது ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்யக் கூடிய ஒரு வாய்ப்பானது உண்டாகும். ஒரு சிலர் நவீன வாகனங்களை வாங்கக்கூடிய பிராப்தம் உண்டாகும்.

வரும் 2026-ம் ஆண்டில் சனி பலமாக இருப்பதால் தொழில் வியாபாரத்தில் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை அடைவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். போட்டிகள் குறைவதால் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உண்டு.

வேலைக்கு செல்பவர்களுக்கு மன நிம்மதியுடன் பணி செய்யக்கூடிய ஒரு அமைப்பும், உங்களுடைய தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் வரும் நாட்களில் ஏற்படும். ஒரு சிலர் தங்களுடைய வளர்ச்சிக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய ஒரு வாய்ப்புகள் கூட வரும் நாட்களில் உண்டு. சக ஊழியருடைய ஒத்துழைப்பானது மிகவும் சாதகமாக இருக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சுலபமாக செய்து முடிக்கக் கூடிய ஒரு வாய்ப்பானது உண்டு. ஒரு சிலருக்கு பணியில் பதவி உயர்வுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

வரும் 2026-ம் ஆண்டில் தொடக்கம் முதல் 02-06-2026 முடிய ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக சின்ன சின்ன இடையூறுகள் இருந்தாலும் சனியின் சாதக சஞ்சாரத்தால் எதையும் சமாளிக்க கூடிய ஒரு பலமானது உங்களுக்கு இருக்கும். முதல் ஐந்து மாத காலங்களில் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். ஆண்டின் முற்பாதியில் சுப காரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் இருக்கும். உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் இருக்கும் என்றாலும் சற்று பொறுமை காப்பது மிக மிக நல்லது.

வரும் 2-6-2026 முதல் தனகாரகன் குருபகவான் 6-ம் வீட்டில் இருந்து 7-ம் வீட்டுக்கு மாறுதலாவதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் உண்டாகும். ஒரு புறம் 3-ல் சனி, 7-ல் குரு என்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதன் காரணமாக உங்களின் பொருளாதார நிலை மிக மிகச் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள், குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கக்கூடிய யோகம், மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய அதிர்ஷ்டமானது உண்டாகும். ஜூனுக்கு பிறகு குரு 7-ல் சஞ்சாரம் செய்கின்ற பொழுது ஜென்ம ராசி, 3, 11-ஆகிய பாவங்களை பார்வை செய்வதால் உங்களுக்கு மிகவும் வளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்பானது உண்டு.

வரும் 2026-ம் ஆண்டில் சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டிலும் 5-12-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.  நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. ஆண்களுக்கு மனைவி வழி உறவினர்கள் மூலமாகவும், பெண்களுக்கு கணவர் வழி உறவினர்கள் மூலமாகவும் தேவையில்லாத நிம்மதி குறைவுகள் ஏற்படலாம். பொதுவாக உறவினரிடம் பேசுகின்ற பொழுது மிகவும் பொறுமையோடும் நிதானத்தோடும் செயல்படுவது மிக மிக நல்லது. உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால் பொதுவாக வெளியூர் பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் இருக்கும் என்றாலும் உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது மிக மிக நல்லது.

எது எப்படி இருந்தாலும் உங்கள் ராசியாதிபதி சனிபகவான் இந்த ஆண்டு முழுவதும் 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து சென்றால் வரும் 2026-ம் ஆண்டில் மிகச் சிறப்பான முன்னேற்றங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்கள் வாழ்வில் நீங்கள் நீண்ட நாட்களாக கண்ட கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பேச்சில் பொறுமையோடு இருந்துவிட்டால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். எதிலும் புதுத் தெம்புடனும் பொலிவுடனும் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவ செலவுகள் யாவும் குறையும். உணவு விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பதும், நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அஜீரண கோளாறுகள் உண்டாக்குவதை தவிர்க்க உதவும்.

குடும்பம் பொருளாதார நிலை

மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கை கூடும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு புத்திர வழியில் மன கவலை உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வாழ்வில் நல்லது நடக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி, மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும்.

உத்தியோகம்

கடந்த கால நெருக்கடிகள் விலகி பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். செய்யும் வேலைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஜுன் மாதத்திற்கு பிறகு கிட்டும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிக லாபம் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வம்பு, வழக்குகளில் ஜுன் மாதத்திற்கு பிறகு தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். திறமை உள்ள வேலையாட்கள் கிடைப்பார்கள்.

கொடுக்கல் வாங்கல்

பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிடைக்கும். கடந்த கால கடன்கள் ஜுன் மாதத்திற்கு பிறகு பெருமளவு குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வெற்றிக் கிட்டும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றியும் சிறப்பான லாபங்களும் உண்டாகும்.

அரசியல்

உங்களது பெயர், புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் எல்லாம் எளிதில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்கள் நற்பலனை தரும்.

கலைஞர்கள்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்ல நேரிடும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மறைந்து மன நிம்மதி உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்

உடல் நிலை அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மே மாதத்திற்கு பிறகு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

மாணவ மாணவியர்

மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். போட்டி தேர்வுகளில் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உங்களுக்கு இருந்த மந்த நிலை மாறி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

 

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வரும் 02.06.2026 முடிய குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

ஜென்ம ராசிக்கு ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5,6,8  நிறம் - நீலம், பச்சை        கிழமை - சனி, புதன்

கல் - நீலக்கல்         திசை - மேற்கு       தெய்வம் - விநாயகர்

No comments: