புத்தாண்டு பலன் - 2026 - ரிஷப
ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
ரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம்
1,2ம் பாதங்கள்
ராசி மண்டலத்தில் இரண்டாவது ராசியான ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு நவகிரங்களில்
சுக காரகன் என வர்ணிக்க கூடிய சுக்கிரன் உங்கள் ராசியாதிபதி ஆவார். சுக்கிரனின் ராசியில்
பிறந்த நீங்கள் இயற்கையிலேயே ஆடம்பரத்தை அதிகம் விரும்பக் கூடிய நபராக இருப்பீர்கள்.
உங்களின் கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களை வசிகர படுத்தக் கூடிய இயற்கை சுபாவம் கொண்ட
உங்களுக்கு வரும் 2026-ம் ஆண்டின் உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதியும் ராசியாதிபதி
சுக்கிரனுக்கு நட்பு கிரகமுமான சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் இந்த
ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம்
நடக்கும். நீண்ட நாளைய கனவுகள் வரும் நாட்களில் நிறைவேறக் கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு
உண்டு. உங்களின் பொருளாதார நிலை மிக மிகச் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாவது மட்டுமில்லாமல் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள்
உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அதிர்ஷ்டமானது
வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. பண வரவுகள் அதிகப்படியாக இருப்பதால் ஒரு சிலருக்கு
வண்டி, வாகனங்களை வாங்கக்கூடிய யோகங்களும் குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான சாதனங்களை
வாங்கிக் கொள்ளக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த
வம்பு வழக்குகளில் ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரக்கூடிய
நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும்.
உற்றார் உறவினிடமிருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது முழுமையாக மறைந்து மகிழ்ச்சி
தரக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு
வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக
இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். கடந்த காலங்களில்
உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறைய கூடிய ஒரு
சூழ்நிலை உண்டாகும். மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கக்கூடிய நாட்களாக
வருகின்ற நாட்கள் இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள்
பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள்
உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து லாபகரமான
பலன்களை அடைவீர்கள். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு
தற்போது ஒரு சமூக சூழ்நிலை உண்டாகி சாதகமாக அமையும். புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை
அபிவிருத்தி செய்யக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. அரசாங்க
வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள்
உங்களுடைய நிறுவனத்தில் இணைவதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க கூடிய
பலம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய
அதிர்ஷ்டமானது இருக்கிறது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வருவது மட்டுமில்லாமல் கடந்த
காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் தற்போது விடிவு காலம் பிறந்து மன மகிழ்ச்சி
தரக்கூடிய ஒரு இனிய நிலையினை நீங்கள் அடைவீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து
குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய சாதகமான சூழ்நிலை உண்டாகும். சிலருடைய நீண்ட நாளைய
ஆசைகள் தற்போது நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டும்
என்று எண்ணி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு வரும் ஆண்டில் நல்லதோர் சூழ்நிலை
உண்டாகி விரும்பிய இடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்கக்
கூடிய ஒத்துழைப்பானது வெளி நபர்கள் மூலமாக கிடைப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக
வருகின்ற நாட்கள் இருக்கும்.
ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு
இருந்திருப்பார்கள் அதனை இந்தாண்டு முற்பாதியில் மேற்கொண்டால் அதற்கு சாதகமான சூழ்நிலை
உண்டாக கூடிய அமைப்பானது இருக்கிறது. ஒரு சிலருக்கு பங்குச்சந்தைகள் மூலமாகவும் அவர்கள்
செய்த முதலீடுகள் மூலமாகவும் நல்ல ஒரு லாபத்தை ஈட்டக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள்
இருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் மற்றவர்களுக்கு தந்த கடன்களை தற்போது வசூல் செய்யக்கூடிய
அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தற்போது
கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தற்போது குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும்
சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த மனக் கவலைகள் எல்லாம் தற்போது
மறைந்து மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்கும். பூர்வீக சொத்து
வகையில் பங்காளியின் வழியில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தற்போது
மறைந்து பங்காளிகளிடையே சரியான முறையில் பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்க
வேண்டிய சொத்துக்கள் வரும் நாட்களில் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. சிலருக்கு
உல்லாச பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு.
இந்தாண்டில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய
குரு பகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ல் 02-06-2026 முடிய சாதகமாக சஞ்சரிப்பதால்
ஆண்டின் முற்பாதியில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய
ஒரு முன்னேற்றம் ஏற்படும். சுப நிகழ்வுகள் கைகூடும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக
இருப்பதால் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உங்களுக்கு
உண்டாகும். உறவினர்களின் ஆதரவானது மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களது தேக ஆரோக்கியம்
சிறப்பாக இருப்பதால் எதிலும் முன்பை விட சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில்
உங்களுக்கு இருந்து வந்த மனக் கவலைகளை எல்லாம் தற்போது குறையும்.
வரும் 02-06-2026 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம்
வீட்டுக்கு மாறுதலாகி சஞ்சரித்தாலும் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு
அனுகூலமான பலன்களே நடக்கும். குரு 3-ல் சஞ்சரிக்கின்ற பொழுது தனது 5-வது பார்வையாக
7-ம் வீட்டை பார்ப்பார் என்பதால் கணவன்- மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கக்கூடிய
நிலை, குடும்பத்தில் நல்லது நடக்கக்கூடிய யோகம், நெருங்கியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய
அமைப்பு எல்லாம் உங்களுக்கு இந்த ஆண்டில் உண்டு. ஆண்டின் பிற்பாதியில் பண விஷயத்தில்
சற்று சிக்கனத்தோடு இருந்தால் மிகவும் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு
உண்டு.
நவகிரங்களில் சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு- கேது இந்த
ஆண்டில் குறிப்பாக ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள்
ராசிக்கு 4-ம் வீட்டிலும் திருக்கணித சித்தாந்தப்படி 5-12-2026 முடிய சஞ்சாரம் செய்ய
இருப்பதால் உங்களுக்கு தாய் வழியில் சின்ன சின்ன மனக் கவலைகள், தேவையற்ற அலைச்சல்கள்
சில ஏற்படலாம் என்றாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டு. தொழில் வியாபாரத்தில்
போட்டி பொறாமைகள் இருந்தாலும் நீங்கள் எதையும் எதிர்கொண்டு லாபகரமான பலன்களை அடையக்கூடிய
வாய்ப்புகள் உண்டு. சனியின் சாதக சஞ்சாரத்தால் வருகின்ற 2026-ம் ஆண்டில் உங்கள் வாழ்வில்
ஒரு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய ஆண்டாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எல்லா காரியங்களிலும்
சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற முடியும். நீண்ட நாட்களாக சிகிச்சைகளை எடுத்துக்
கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை சிறப்பாகி மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில்
உள்ளவர்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி
நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும்
மே மாத்திற்குள் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.
உத்தியோகம்
கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முற்றிலும் மறைந்து செய்யும் பணியில் கௌரவமான
நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில்
திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று
பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற
வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில்
வெற்றி கிட்டும். வெளியூர் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும்,
தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி
தொழிலை விரிவுபடுத்தும் யோகம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த
கடன்கள் திருப்திகரமாக வசூலாகி உங்களுக்குள்ள சிக்கல்கள் எல்லாம் முழுமையாக குறையும்.
பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடந்த காலங்களில் இருந்த
வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அரசியல்
உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி
கிட்டும். மறைமுக வருவாய் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
கலைஞர்கள்
வரவேண்டிய பணவரவுகளில் இருந்த இழுபறி நிலை விலகி தக்க நேரத்தில் வந்து சேரும்.
உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து பெயர், புகழ் உயரும். வெளியூர் செல்லும் யோகம்
உண்டாகும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல நிலை ஏற்பட்டு மன
நிம்மதி ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்
பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம்,
பூமி, மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும்.
சுப காரியங்கள் கைகூடும். பண விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் மன நிம்மதி
உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பகை விலகும். பிறந்த
இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள்.
மண வயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். அழகிய குழந்தையை பெற்று
எடுக்கும் யோகம் இவ்வாண்டில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம்
போன்றவற்றை வாங்குவீர்கள்.
மாணவ- மாணவியர்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளி,
கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்க கூடிய வாய்ப்பு
உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர்
ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3-ல்
02.06.2026 முதல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு கொண்டை கடலையை
மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது
நல்லது.
உங்களுக்கு ராசிக்கு கேது 4-லும், ராகு 10-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில்
துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும்.
சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு
அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி
பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு
எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8 நிறம் - வெண்மை, நீலம், கிழமை - வெள்ளி, சனி
கல் - வைரம் திசை - தென்கிழக்கு, தெய்வம் - விஷ்ணு, லட்சுமி
No comments:
Post a Comment