Thursday, January 1, 2026

புத்தாண்டு பலன் - 2026 - மீன ராசி

 புத்தாண்டு பலன் - 2026 - மீன ராசி

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

நவகிரகங்களில் முழு சுப கிரகமான குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் கம்பீரமான தோற்றமும், சிறப்பான உடல் அமைப்பும், உதவி செய்யக்கூடிய பண்பும் கொண்டவராக இருப்பீர்கள். ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் ஜென்ம ராசியில் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெற இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட இடையூறுகள் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு செயல்பட வேண்டும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது. மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது.

எதிர்பாராத வகையில் கடன்கள் அதிகரிக்கலாம் என்பதால் பண விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது மிகவும் நல்லது. கடன்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அதனை உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தேவையற்ற தூர பயணங்களை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது.

உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் 2026-ம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்கள் அதாவது 02-06-2026 முடிய சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதன் காரணமாக முதல் 5 மாத காலங்கள் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பார்க்கின்ற பணவரவுகள் வருவதில் தேவையற்ற நெருக்கடிகள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே அடுத்தடுத்து வரும் நாட்களில் படிப்படியான வளர்ச்சிகளை நீங்கள் அடைய முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை ஆண்டின் முற்பாதியில் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

வேலைக்கு செல்பவர்களுக்கு பிறர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தை நம்பாமல் தற்போது இருக்கக்கூடிய நிலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள் மீது பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது மிக மிக நல்லது. பொதுவாக பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, பணி தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது.

முதல் ஐந்து மாத காலங்கள் பல்வேறு நெருக்கடிகளை நீங்கள் சந்தித்தாலும் 02-06-2026க்கு பிறகு ராசியாதிபதி குரு பகவான் 4-ம் வீட்டிலிருந்து 5- வீட்டுக்கு பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிக்க உள்ளார். இதனால் ஜூன் மாதம் முதல் உங்கள் வாழ்வில் படிப்படியான வளர்ச்சிகள் இருக்கும். உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடைபெற்றாலும் குருவின் சாதக சஞ்சாரத்தால் வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பணவரவுகள் சற்று சுமாராக இருக்கும். இதன் காரணமாக உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய ஒரு பலமானது ஏற்படும்.

குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு ஜூன் மாதத்திற்கு பிறகு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் இருக்கக்கூடிய தேக்க நிலை முழுமையாக மாறி படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். போட்ட முதலை எடுக்க முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் நீங்கள் தனித்திறமையோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய ஒரு பலமானது உண்டாகும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகளை பெற முடியும். மனதளவில் உங்களுக்கு இருக்கக்கூடிய பாரமானது சற்று குறைந்து மன நிம்மதி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக்கொண்டு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு தகுதிக்கு ஏற்ப நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும்.

2026-ம் ஆண்டில் சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு- கேது சஞ்சாரத்தை பற்றி பார்க்கின்ற பொழுது கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலும், ராகு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டிலும் 05-12-2026 முடிய சஞ்சாரம் செய்ய உள்ளனர். கேது 6-ல் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். வெளியூர் நபர்கள் மூலமாக ஒரு சில மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அதனை தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

வரும் 2026-ம் ஆண்டில் முதல் ஐந்து மாத காலங்கள் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டு விட்டால் ஏழரைச் சனி நடைபெற்றாலும் கேது 6-ல் சஞ்சரிப்பதாலும், ஜூன் மாத முதல் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எது எப்படி இருந்தாலும் பொறுமையை கடைப்பிடித்தால் படிப்படியான வளர்ச்சியை நீங்கள் அடையக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

தேவையற்ற நெருக்கடிகளை பொருளாதார ரீதியாக சந்திக்க நேர்ந்தாலும் ஜுன் மாதத்திற்கு பிறகு எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் அரங்கேறும். கணவன்- மனைவி இடையே சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை நிலவும். அசையா சொத்துகளால் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் ஆதரவாக செயல்படுவார்கள்.

உத்தியோகம்

உங்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கான சன்மானம் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் பணியில் கவனம் செலுத்துவதில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியூர் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் இருக்காது. வேலையாட்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும் காலம் என்பதால் அனைத்து செயலிலும் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையொழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர் தொடர்புகளால் சிறு சிறு அனுகூலங்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.

கொடுக்கல்- வாங்கல்

உடனிருப்பவர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்கு நிம்மதி குறையும் என்றாலும் பணவரவுகள் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும், வலிமையும் கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல்படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்

பெயர், புகழ் சுமாராக இருக்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது சாதித்து விடுவீர்கள். வீண் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

கலைஞர்கள்

பணவரவுகள் திருப்தி அளிப்பதாக இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல், டென்ஷன், நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும் என்றாலும் அதனால் சாதகபலனும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் உங்கள் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இடையூறுகள் ஏற்படும். பட்டபாட்டிற்கான முழு பலனை ஜுன் மாதத்திற்கு பிறகு அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு, வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஜுன் மாதத்திற்கு பிறகு நல்ல வரன்கள் அமையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மாணவ- மாணவியர்

நீங்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுக்க முடியும். கல்வியில் ஞாபக மறதி ஏற்பட்டு படித்ததெல்லாம் தக்க சமயத்தில் ஞாபகத்திற்கு வராமல் போகும் நேரம் என்பதால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். உடல்நல குறைபாட்டால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க நேரிடும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளின் கவனமுடன் செயல்படுவது நல்லது.

 

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

உங்களுக்கு குரு 4-ல் வரும் 02.06.2026 முடிய சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9        கிழமை - வியாழன், ஞாயிறு                     திசை - வடகிழக்கு

கல் - புஷ்ப ராகம்             நிறம் - மஞ்சள், சிவப்பு               தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

No comments: