புத்தாண்டு பலன்கள் - 2026 - கடக ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
கடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சிறப்பான பேச்சாற்றலும் மற்றவர்களை
வசீகர படுத்தக்கூடிய தோற்றமும் திறமையும் இயற்கையிலேயே கொண்டவராக இருப்பீர்கள். உங்கள்
ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான
சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட்டு
அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்த பண உதவிகள் தக்க
நேரத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
தொழில் வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு நிலை இருந்தாலும் அதற்கான
ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை பெரிதளவு எதிர்பார்க்காமல் எந்த
ஒரு காரியத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய
அதிர்ஷ்டமானது ஏற்படும். உங்களுக்கு இந்தாண்டில் வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான
பலன்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு வெளியூர் நபர்கள் மூலமாக ஆதாயத்தை பெறக்கூடிய
வாய்ப்புகள் உண்டு. சில சட்ட சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டாலும் வேலையாட்கள் உடைய
ஆதரவானது மிகச் சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய
பலம் உண்டாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது மிகவும்
நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பதன் மூலமாக தொழிலில்
நல்ல ஒரு வளர்ச்சியினை அடைய முடியும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில்
பேசாமல் இருப்பது நல்லது.
வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மற்றவருடைய
வேலையும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். பணியில் நீங்கள்
சற்று கவனத்தோடு இருந்தால்தான் நல்ல பெயர் எடுக்க முடியும். உங்களுக்கு ஏற்படக்கூடிய
சின்ன சின்ன உடம்பு பாதிப்பின் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு ஒரு
நெருக்கடியான நிலை நிலவும். சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் இவ்வாண்டில்
நல்ல வளர்ச்சியினை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
பணி நிமித்தமாக வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
நவகிரகங்களில் சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு- கேது
குறிப்பாக இந்த ஆண்டில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-லும், ராகு 8-லும்
5-12-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் பேச்சில் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. நீங்கள்
நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
கணவன்- மனைவி இடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்வது
நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக திடீரென்று ஏதாவது உடல் பாதிப்பு ஏற்படலாம் என்பதால்
உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு
இருப்பது நல்லது. அஜீரண கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு செயல்படுவது
உத்தமம். தேவையற்ற பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில்
பயணங்களை தவிர்ப்பது சிறப்பு. ஒரு சிலருக்கு நெருங்கிய உறவினர்களிடம் மனஸ்தாபங்கள்
ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் கவனமாக இருப்பது, ஒரு முறைக்கு பலமுறை யோசித்து
செயல்படுவது மிகவும் நல்லது.
உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியும் ஆண்டு கோளுமான குரு பகவான் 2-6-2026 முடிய
விரைய ஸ்தானமான 12-ம் வீட்டிலும் அதன் பின் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால்
பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர
செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு
அநாவசியமாக வாக்குறுதி கொடுப்பதனை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. சில நேரங்களில்
சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு
நடந்து கொண்டால் தேவையற்ற வீண் நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.
ஆண்டின் முற்பாதியில் குரு பகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுப காரிய
முயற்சிகளில் தேவையில்லாத இடையூறுகள் இருக்கும். ஜூன் மாதம் முதல் குரு ஜென்ம ராசியில்
சஞ்சாரம் செய்ய இருப்பதன் மூலமாக குரு தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9-ஆகிய ஸ்தானங்களை
பார்ப்பார் என்பதால் ஜூனுக்கு பிறகு சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய
வாய்ப்புகள் உண்டு. திருமண வயதை அடைந்த ஆண், பெண்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் திருமண
சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு
மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்தி கிடைக்கும். பெரியோர்களுடைய ஆதரவானது இக்கட்டான நேரத்தில்
கிடைத்து எதையும் சமாளிக்க கூடிய ஒரு பலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் ஒரு சில மகிழ்ச்சி
தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய
வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு வீடுகளை பராமரிப்பதற்காக சுபச் செலவுகள் செய்யக்கூடிய
ஒரு சூழ்நிலை உண்டாகும். பெண்கள் மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள்
வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு.
ஒரு சில நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சாதகமாக
சஞ்சரிப்பதால் எதையும் எளிதில் சமாளித்து ஒரு நல்ல வளர்ச்சியினை அடையக் கூடிய நாட்களாக
வரும் நாட்கள் இருக்கும். குறிப்பாக நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண்
பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
ஜூனுக்குப் பிறகு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் அதிசாரமாக 2-ம்
வீட்டில் 31.10.2026 முதல் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை
தரக்கூடிய அமைப்பு என்பதால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய
அதிர்ஷ்டமானது உண்டு. பொருளாதார ரீதியாக மேன்மைகள், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில்
வியாபாரத்தில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள், உத்தியோக ரீதியாக ஒரு
மிகப்பெரிய ஒரு அனுகூலங்கள் ஏற்படக்கூடிய அதிர்ஷ்டங்கள், மகிழ்ச்சி தரக்கூடிய இனிய
நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு, பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள், உடல் ஆரோக்கியத்தின்
சிறப்பான நிலை, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் தேக ஆரோக்கியம் சற்று சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் இருந்தாலும்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்பட்டால்
அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால்
உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. மனைவி, பிள்ளைகளின் அரோக்கியத்திற்கு
முக்கியத்தும் தருவது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் நேரம் என்பதால்
விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை
அடைய முடியும். பண வரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர
செலவுகளை குறைத்து கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
சுபகாரிய முயற்சிகளில் மே மாதத்திற்கு பிறகு நல்லது நடக்கும்.
உத்தியோகம்
எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள்.
கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பணி சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய
முடியும். உங்கள் தகுதிக்கு ஏற்ற பதவிகள் தேடி வரும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து
குடும்பத்துடன் இனைந்து வாழ முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும்
ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை முற்றிலும் விலகி நல்ல லாபத்தை அடைவீர்கள்.
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். அரசு வழியில் நீங்கள்
எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இனைவார்கள்.
போட்டி பொறாமைகள் விலகி நல்ல முன்னேற்றத்தை தொழிலில் அடைய முடியும். தொழில் ரீதியாக
மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன்
கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி ஆதாயம் அடைவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த இழுபறி நிலை
மாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும்.
அரசியல்
எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பெற்று நல்ல பதவியை அடைவீர்கள். நினைத்த காரியங்களை
நிறைவேற்றி விட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக்
கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருந்தால் ஏற்படும் சிறுசிறு
பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மறைமுக
எதிர்ப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
உங்கள் தனி திறமைகளை வெளிபடுத்த சிறப்பான சந்தர்ப்பங்கள் அமையும். பெரிய மனிதர்களின்
தொடர்பு கிடைப்பதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
விவசாயிகள்
புழு பூச்சிகளால் இருந்த தொல்லைகள் குறைந்து பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
விளை பொருளுக்கேற்ற விலையினை சந்தையில் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அரசு வழியில்
எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும்.
நவீன கருவிகள் வாங்கி விவசாயத்தில் புதிய முறைகளை கையாள்வீர்கள்.
பெண்கள்
கடந்த கால உடல் உபாதைகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து
செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.
அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறும். சுபகாரிய
முயற்சிகளில் மே மாதத்திற்கு பிறகு நல்லது நடக்கும்.
மாணவ மாணவியர்
மாணவ மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். மேற்படிப்பிற்காக
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின்
ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. பயணங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நன்மை
அளிக்கும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளைப் பெற முடியும்.
பரிகாரம்
குரு பகவான் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு
கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய்
தீபமேற்றி வழிபடுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
உங்கள் ராசிக்கு 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை
அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும்.
சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு
அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி
பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு
எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் - வெள்ளை, சிவப்பு கிழமை - திங்கள், வியாழன்
No comments:
Post a Comment