புத்தாண்டு பலன்கள் - 2026 - சிம்ம ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
சிம்மம் மகம், பூரம். உத்திரம்
1ம் பாதம்
நவகிரகங்களில் தலையாய கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியனின் ஆதிக்கத்தில்
பிறந்த நீங்கள் எதிலும் தைரியசாலியாகவும் பலரை வழிநடத்துவதில் வல்லவராகவும் இருப்பீர்கள்.
உங்களுக்கு வரும் 2026-ம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமும் உங்கள்
ராசிக்கு 5, 8-க்கு அதிபதியுமான குரு பகவான் வரும் 02-06-2026 முடிய உங்கள் ராசிக்கு
லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களின்
பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல்
மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த காரியத்தையும் தைரியத்தோடு
செயல்படுத்தக்கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து மற்றவர்களுக்கு
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். உங்கள் செயல்களுக்கு
உடன் இருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருந்து நல்ல ஒரு நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள்
ஏற்படும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு
ஆண்டு தொடக்கத்தில் ஒரு தீர்வு ஏற்பட்டு மனமகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வகையில் ஒரு
சில மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய
வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலில் நல்ல லாபத்தை
ஈட்டக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய
உத்தரவுகளை பெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல ஒரு நிலை
ஏற்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படக்கூடிய
வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் எண்ணங்களை ஆண்டின் முற்பாதியில் செயல்படுத்தினால் அதற்கு
ஒரு நல்ல ஆதரவு கிடைத்து மன மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு நிலையினை அடைய முடியும்.
உங்கள் ராசிக்கு ஆண்டின் முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய குரு
பகவான் 02-06-2026-க்கு பிறகு உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ம் வீட்டில் சஞ்சாரம்
செய்ய இருப்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று
முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம்
என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் நல்ல
முன்னேற்றத்தை அடைந்தாலும் பிற்பாதியில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடைய வேண்டிய
இலக்கை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகள் காரணமாக நியாயப்படி கிடைக்க வேண்டிய ஒரு
நல்ல வாய்ப்புகள் எல்லாம் தடைப்படக்கூடிய நேரமாக ஆண்டின் பிற்பாதி இருக்கும். அதிக
முதலீடுகள் கொண்ட செயல்களை உங்கள் பெயரில் செயல்படுத்தாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில்
செயல்படுத்துவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் பணிச்சுமை சற்று கூடுதலாக
இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்
மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும்.
அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில்
மட்டும் கவனம் செலுத்துவது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது.
ஆண்டின் பிற்பாதியில் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒரு
சிலருக்கு தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும் என்பதால்
பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல்
இருப்பது மிகவும் நல்லது.
வரும் 2026-ம் ஆண்டு முழுவதும் ஒரு ராசியில் அதிக காலம் தங்கக் கூடிய கிரகமான
சனி பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு
அஷ்டமச் சனி நடக்க இருக்கிறது. இதன் காரணமாக உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்
கொள்ள வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுவது, தேவையற்ற தூர பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.
வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் எந்த ஒரு செயலிலும் மற்றவர்களை
எதிர்பார்க்காமல் எதிலும் நீங்கள் நேரடியாக முன் நின்று செயல்பட்டால் ஒரு சில ஆதாயத்தை
அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பொதுவாக அஷ்டமச் சனி நடக்கின்ற பொழுது குடும்ப
உறுப்பினர்களுடைய ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு
தேவையில்லாத மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை மருத்துவ செலவுகளை எதிர்கொள்வதற்கு
மருத்துவ காப்பிட்டுகள் கூட எடுத்துக் கொள்வது நல்லது. பொதுவாக உடல் ரீதியாக பாதிப்பு
ஏற்படுகின்ற பொழுது அதற்கான சிகிச்சைகளை ஆரம்ப கட்டத்திலேயே நீங்கள் எடுக்கின்ற பொழுது
அதிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அஷ்டமச்
சனி நடக்கின்ற பொழுது நீங்கள் மிகவும் நிதானத்துடனும் கவனத்துடனும் இருக்க வேண்டிய
நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தேவையில்லாத தூரப்பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது
மிக மிக நல்லது.
சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு- கேது வரும் 2026-ம்
ஆண்டில் கேது உங்கள் ராசியிலும். ராகு 7-ம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான
அமைப்பு என சொல்ல முடியாது. ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட குடும்பத்தில் தேவையற்ற
கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற வகையில் மன குழப்பங்கள் உண்டாகலாம். ஒரு சிலருக்கு
உடன் இருப்பவர்களிடம் பேசுகின்ற பொழுது மனஸ்தாபம் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை
குறையும். அதுமட்டுமில்லாமல் புதுமண தம்பதிகளுக்கு எதிர்பாராத வகையில் குடும்பத்தில்
மனஸ்தாபங்கள் ஏற்படும். முடிந்தவரை பொறுமையை கடைப்பிடிப்பது, கணவன்- மனைவியிடையே கௌரவம்
பார்க்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது தற்போதைக்கு நல்லது. கூட்டுத்
தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால்
கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடைய முடியும். ஒரு சில நேரங்களில்
முக்கிய விஷயங்களில் முடிவெடுக்கின்ற பொழுது கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்படுவது
மிகவும் நல்லது.
வரும் 2026-ம் ஆண்டில் எந்த ஒரு விஷயத்திலும் ஆண்டின் முற்பாதியில் மேற்கொள்ளக்கூடிய
செயல்கள் அனைத்தும் குருவின் சாதக சஞ்சாரத்தால் ஒரு சில ஆதாயமான பலன்களை அடைய வாய்ப்புகள்
உண்டு. ஆண்டின் பிற்பாதியில் எதிலும் சற்று பொறுமையோடும் நிதானத்தோடும் செயல்படுவது
மிகவும் நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில்
கட்டுபாடு தேவை. உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை திறன்பட
செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். நெருங்கியவர்களிடம்
ஏற்படக் கூடிய தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது
நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக ஒய்வு நேரம் குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில்
ஜுன் மாதத்திற்கு முன்பு நல்லது நடக்கும். அசையும் அசையா சொத்துகளில் செய்யும் முதலீடு
காரணமாக பொருளாதார நெருக்கடிகள், எதிர்பாராத வகையில் கடன் ஏற்படும் நிலை உண்டாகும்.
நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து
செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.
உத்தியோகம்
நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தாலும் உடல் ஆரோக்கிய குறைப்பாட்டால் பணியில்
கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும்
சமாளிக்க முடியும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும். பிறர் செய்யும்
தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் மற்றவர்களிடம் கவனமாக இருப்பது
நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில்
நல்லது நடக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் மறைமுக எதிர்ப்புகளை எதிர்
கொள்ள நேரிடும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும் என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் செயல்களில் கவனமுடன் செயல்படுவது
கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் லாபகரமான பலனை அடைவீர்கள்.
வேலையாட்களால் நிம்மதி குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
எதிர்பார்த்த லாபத்தை ஜுன் மாதத்திற்கு முன்பு அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில்
கவனமாக செயல்பட்டால் அடைய வேண்டி இலக்கை அடையலாம். தக்க சமயத்தில் தாராள தன வரவு உண்டாகி
உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும்,
நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதையும் தவிர்ப்பது நல்லது.
அரசியல்
உங்களது செல்வம், செல்வாக்கு உயரும் என்றாலும் எதிர்பாராத வகையில் வீண் செலவுகள்
ஏற்படும். எந்தவொரு பணியிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையில்லாத பிரச்சினைகள்
ஏற்பட்டு மன அமைதி குறையும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைப்பது நல்லது.
கலைஞர்கள்
உங்களுக்கு அனுகூலப் பலன்கள் ஏற்படும் யோகம் ஜுன் மாதத்திற்கு முன்பு உண்டு.
தொழில் போட்டிகளால் நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி
கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்
பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். நடிப்பு துறை மட்டுமின்றி பாடல் இசை துறைகளில்
உள்ளவர்களுக்கு சிறப்பான நிலை ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும்
எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியை
தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில்
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது வேலையாட்களை
அனுசரித்து செல்வது நல்லது.
பெண்கள்
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலமாகும். உடன் பிறந்தவர்கள்
வழியில் மனச் சஞ்சலங்களும் வீண் செலவுகளும் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் ஜுன்
மாதத்திற்கு முன்பு கைகூடும். சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த புத்திர பாக்கியம்
கிடைக்கும். பெரியோர்களின் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பண வரவுகள் சாதகமாக
இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.
பயணங்களில் நிதானத்தோடு செல்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது
நன்று. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில்
ஒரளவுக்கு உதவிகள் கிட்டும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் வரும்
02.06.2026 முதல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு கொண்டை கடலையை
மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது
நல்லது. மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.
உங்களுக்கு சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து
நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை
கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை
அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள்,
குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும்
கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை
செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி
பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு
எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம்
- வெள்ளை, சிவப்பு கிழமை - ஞாயிறு,
திங்கள்
No comments:
Post a Comment