Thursday, January 1, 2026

புத்தாண்டு பலன்கள் - 2026 - மிதுன ராசி

 புத்தாண்டு பலன்கள் - 2026 - மிதுன ராசி

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்

நவகிரங்களில் கல்விகாரன் என வர்ணிக்கப்படக்கூடிய புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதில் சிறந்து விளங்கக்கூடிய நபராக இயற்கையிலேயே இருப்பீர்கள். வரும் 2026-ம் ஆண்டில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் ஜென்ம ராசியில் 02-06-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய அதிர்ஷ்டமானது உண்டாகும். உங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3-ம் வீட்டில் கேது பகவான், பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் ராகு பகவான் 5-12-2026 முடிய சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஆண்டின் முற்பாதியில் சற்று பொறுமையோடு இருந்துவிட்டால் பிற்பாதியில் மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். ஆண்டின் முற்பாதியில் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

ஆண்டு முற்பாதியில் நீங்கள் சற்று நிதானத்தோடு இருந்தாலும் வருகின்ற 02-06-2026 முதல் தன காரகன் குருபகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்கள் வாழ்வில் சகல விதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குரு மாற்றத்திற்கு பிறகு பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பெற்றோர்களுடைய ஆசியானது மிகச் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து பாகப்பிரிவினை தற்போது சுமூகமாக முடியும். கடன் பிரச்சினைகள் குறையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.

தொழில் வியாபாரத்தில் தொடக்கத்தில் நீங்கள் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் ஜூன் மாதம் முதல் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் உங்களுக்கு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குறிப்பாக தொழில் ரீதியாக இருந்து வந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய நபர் அதிகாரியாக வரக்கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கிறது. கடந்த காலங்களில் நீங்க செய்த பணிக்கு தற்போது தக்க சன்மானம் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். மே மாதத்துக்கு பிறகு உங்களின் பொருளாதார நிலையானது சிறப்பாக இருந்து அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு தந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி நிம்மதி ஏற்படும். உங்கள் மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் படிப்படியாக விலகுவதால் பணியில் நீங்கள் அதிக ஈடுபாடுடன் செயல்படக்கூடிய பலம் உண்டாகும்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் இந்த ஆண்டில் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானம் என வர்ணிக்க படக்கூடிய 10-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சனியின் சஞ்சாரத்தால் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய பலம் உங்களுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக ஆண்டு முற்பாதியில் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் ஆண்டு பிற்பாதியில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

உங்களது தேக ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் எல்லாம் வருகின்ற நாட்களில் குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை நம்பாமல் சில காரியங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும்.

ஜூன் மாதம் முதல் குருபகவான் தன ஸ்தானத்தில் அமையப்பெற்று உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறையக் கூடிய அமைப்பும், வம்பு வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய பலமும், கடந்த கால வீண் செலவுகள் குறையக்கூடிய ஒரு யோகமும், புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும் ஏற்படும். நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்து வரக்கூடிய தேவையற்ற பிரச்சினைகள் எல்லாம் ஆண்டின் பிற்பாதியில் முழுமையாக குறைந்து ஒரு முன்னேற்றமான நிலையினை அடைய கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொண்டு அதன் மூலமாக ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

வரும் 2026-ம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்கள் மட்டும் சற்று நிதானத்தோடு செயல்பட்டு விட்டால் அதன் பிறகு உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியினை அடையக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் பொருளாதார நிலையில் படிப்படியான வளர்ச்சிகள் உங்களுக்கு இருக்கும் என்றாலும் கடன்கள் வாங்குகின்ற பொழுது உங்கள் பெயரில் மட்டும் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது தற்போதைக்கு மிகவும் சிறப்பு.

 

உடல் ஆரோக்கியம்

கடந்த கால அலைச்சல்கள் குறைந்து உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது மே மாதத்திற்கு பிறகு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையில் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை ஜுன் மாதம் முதல் செயல்படுத்தினால் மிகவும் சாதகமான பலனை பெற முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். மே மாதத்திற்கு பிறகு எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் குறையும். கடந்த கால வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு செல்வம் செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர் அணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றி கிடைக்கும். ஜுன் மாதம் முதல் உங்கள் பொருளாதார நிலை மேலும் சிறப்பாகி உங்கள் வாழ்க்கை தரம் உயரும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியும்.  பட்டபாட்டிற்குகான பலனை தடையின்றி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஜுன் மாதம் முதல் நல்லது நடக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ மாணவியர்

மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு.

 

பரிகாரம்   

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, சனிப்ரீதியாக அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

குரு பகவான் ஜென்ம ராசியில் 02.06.2026 முடிய சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,          நிறம் - பச்சை, வெள்ளை,   கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்          திசை - வடக்கு              தெய்வம் - விஷ்ணு

No comments: