Showing posts with label Marriage. Show all posts
Showing posts with label Marriage. Show all posts

Wednesday, February 8, 2012

திருமண பொருத்ததில் கவனிக்கப்பட வேண்டியவை

நட்சத்திர ரீதியாக 10 பொருத்தங்கள் பார்ப்பது எவ்வளவு அவசியமோ, அது போல     ஜாதக ரீதியாகவும் கிரகங்களின்  ஆதிக்கத்தை ஆராய்ந்து பொருத்தங்கள் பார்ப்பதும் மிகவும் முக்கியம். தம்பதியர் மன ஒற்றுமையுடன் வாழ்வார்களா, அனுசரித்துச் செல்வார்களா, புத்திரபாக்கியம் சிறப்பாக இருக்குமா, உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை இருக்குமா? என பலவிதமான பொருத்தங்களையும் ஜாதக ரீதியாக ஆராய்ந்து திருமணம் செய்து வைப்பது மிகவும் நல்லது. அதனைப் பற்றிய பல்வேறு முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

செவ்வாய் தோஷம்  

குடும்ப வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஸ்தானங்களான 2,4,7,8,12 ல் செவ்வாய் அமைவது செவ்வாய் தோஷமாகும். ரத்த காரகன், காம காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய செவ்வாய் ஒரு உஷ்ண கிரகமாவார். செவ்வாய் பெண்கள் விஷயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியவராகவும், களத்திர காரகனாகவும் விளங்குகிறார்.
மேற்கூறிய இடங்களில் செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் அமையப் பெறுமேயானால், அவருக்கு அதே மாதிரியான ஜாதகப் பலன் அமையப் பெற்றவரை திருமணம் செய்து வைப்பது தான் நல்லது. அப்பொழுதுதான் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவும்,  கட்டில் சுகவாழ்வு திருப்தியானதாகவும் இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத நபரை திருமணம் செய்து வைத்தால் உடலுறவில் திருப்தியற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அது மட்டுமின்றி செவ்வாயின் திசை அல்லது புக்தி காலங்களில் வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்பு, எதிர்பாராத விபத்து, பிரிவு, வாழ்க்கைத் துணையையே இழக்கக்கூடிய அவலநிலை உண்டாகும்.

செவ்வாய் 7,8 ல் அமையப் பெறுவது கடுமையான தோஷமாகும். 2,4,12 ல் இருந்தால் தோஷத்தின் தன்மை சற்று குறையும். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது சிறிது தோஷம் இருந்து அவருக்கு செவ்வாய் திசையே வராது என்றால் திருமணம் செய்யலாம். 2,4,12 ல் செவ்வாய் அமைந்து பரிவர்த்தனை அல்லது குரு பார்வை இருந்து  செவ்வாய் திசை வராமல் இருந்தாலும் பார்க்கலாம். செவ்வாய், மேஷம், விருச்சிகம், கடகம், மகரத்தில் அமைந்தால் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் நமக்கு திருமணமே ஆகாதோ என பயப்பட தேவையே இல்லை. ஏனென்றால் நாட்டில் 40% பேருக்கு செவ்வாய் தோஷம்  இருக்கத்தான் செய்கிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷத்துக்குரிய ஜாதகங்களை தேர்வு செய்து திருமணம் செய்வதும், உரிய பரிகாரங்களை மேற்கொள்வதும் நற்பலனை உண்டாக்கும்.

சர்ப தோஷம்

சர்ப கிரகங்களான ராகு கேது 7,8 ல் அமைகின்ற போதும் 7ம் அதிபதி ராகு கேது சேர்க்கைப் பெற்றோ, சாரம் பெற்றோ அமைகின்ற  போதும், ராகு கேது பிடிக்குள் அனைத்து பிரதான கிரகங்களும் அமைகின்ற போதும் கடுமையான சர்ப தோஷம் உண்டாகிறது. அது போல திருமண வயதில் ராக கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெற்றாலும் சர்ப தோஷம் உண்டாகி திருமணம் நடைபெற தாமத நிலை ஏற்படுகிறது. இப்படி சர்ப தோஷம் உள்ளவர்களுக்கு சர்ப தோஷம்  உள்ளவரனாக பார்த்து திருமணம் செய்து வைத்து நல்லது. அப்பொழுதுதான் மணவாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளின்றி ஒற்றுமையுடன் வாழ முடியும். இல்லை என்றால் வாழ்க்கை கீரியும், பாம்பும் போல போராட்டகரமானதாக இருக்கும்.
குறிப்பாக ராகு, கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் 7ம் அதிபதியும் களத்திர காரகனான சுக்கிரனும் அமையப் பெற்றால் சர்ப தோஷம் உண்டாகி திருமணம் நடைபெறாத தாமத நிலையை ஏற்படுத்தும். உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலமாக தடைகள் விலகும்.


மாங்கல்ய தோஷம்

நம் நாட்டில் சுமங்கலி பெண்களுக்கு தனி மரியாதை உண்டு. ஒரு பெண்ணின் ஜனன ஜாதகத்தில் 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 8ல் சுபகிரகங்கள் அமையப் பெற்றாலும், 8ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் நீண்ட மாங்கல்ய பாக்கியம் உண்டாகி, கணவரின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஆணுக்கு ஆயுள் பாவம் பலமிழந்திருந்தால் மாங்கல்ய பலம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து வைப்பது நல்லது.

அதுவே பெண் ஜாதகத்தில் 8ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாகும். இதனால் இளம் வயதிலேயே வாழ்க்கை துணையை இழக்கக் கூடிய அவலநிலை ஏற்படும். இப்படி மாங்கல்ய பாவம் பலமிழந்த பெண்ணிற்கு நல்ல ஆயுள் பலம் கொண்ட வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் தீர்க்க சுமங்கலியாக வாழக்கூடிய  பாக்கியம் உண்டாகும். எனவே, பொருத்தம் பார்க்கும் போது 8ம் வீட்டையும் இருவரின் ஜாதக ரீதியாக ஆராய்ந்து பார்ப்பது உத்தமம்.

களத்திர தோஷம்

களத்திர ஸ்தானமான 7ம் இடமும் களத்திர காரகன் சுக்கிரனும் பாவகிரகங்களால் சூழப்பட்டிருந்தால் களத்திர தோஷம் உண்டாகிறது. இதுபோல தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு இதே போல கிரக அமைப்புகள் உள்ள வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தால்தான் மணவாழ்க்கையானது போராட்டமின்றி அமையும்.



புத்திர தோஷம்

ஆண் பெண் இருவருக்கும் நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என ஆராய்வது அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் 5ம் இடமும், புத்திர காரகன் குருவும் பலமாக இருப்பது நல்லது. அப்படி புத்திர ஸ்தானம் பலமாக உள்ளவராகப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் ஒருவரின் பலத்தாலேயே சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். அப்படி பலமிழந்த ஜாதகருக்கு பலமிழந்தவராக பார்த்து மணம் முடித்தால் புத்திர பாக்கியம் என்பது எட்டாகனியாக ஆகிவிடும்.

தசா சாந்தி

ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும் போது ஆண், பெண் இருவருக்கும் நடக்கக்கூடிய தசா புக்திகளையும் ஆராய வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் அப்படி ஒரே தசா புக்தி நடந்தால் திருமணம் செய்யக்கூடாது. குறைந்தபட்சம் 3 வருட இடைவெளி இருப்பது நல்லது. அப்பொழுது தான் மணவாழ்வில் ஒற்றுமை இருக்கும்.


வயசுப் பொருத்தம்

வயசு பொருத்தம் என பார்க்கின்ற போது கண்டிப்பாக ஆணைவிட பெண்ணுக்கு 3 வயது முதல் 6 வயது வரை குறைவாக இருப்பது நல்லது. ஆணைவிட பெண்ணுக்கு அதிக வயது இருக்கக்கூடாது.  இப்படி வயசு பொருத்தம் பார்ப்பது சரியாக இருக்கும். மேலும் ஆணுக்குப் பெண்ணை விட 10, 15 வயது அதிகமாக இருப்பதும் நல்லதல்ல. அதிக வயதுள்ள ஆண்மகனாக இருந்தால் இல்வாழ்வில் இன்பம் இருக்காது.


சகுனப் பொருத்தம்

ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும் போதும் வரன் பார்க்கச் செல்கின்ற போது சகுனம் சிறப்பாக இருப்பது நல்லது. சகுனம்  சரியில்லையென்றாலும் திருமணம் செய்யக்கூடாது.


மனப்பொருத்தம்

இத்தனைப் பொருத்தங்கள் பார்ப்பதெல்லாம் பெரியதில்லை. மிக முக்கியப் பொருத்தமான மனப்பொருத்தம் இருப்பது மிகவும் நல்லது. இருவருக்கும் மனரீதியாக பிடித்திருந்தால்தான் வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Tuesday, February 7, 2012

நட்சத்திர பொருத்தம்


திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதைப் பருவத்தில் பயிர் செய்வது மட்டுமின்றி பாதுகாப்பதும் அவசியம். ஆண், பெண் இருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய திருமண உறவானது நீண்டகாலம் கமிழ்ச்சியுடன் அமைவது நல்லதல்லவா. மணவாழ்க்கையில் எல்லா வகையான சிறப்பான அம்சங்கள் அமைந்தால்தான் மனமகிழ்ச்சியுடன் வாழமுடியும். இல்லை என்றால் மகிழ்ச்சி இருக்காது. எப்படி டாக்டரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்லக்கூடாதோ, அது போல வரன் தேடும் விஷயத்தில் ஜோதிடரிடமும் பொய் சொல்லக்கூடாது. ஒருவரது பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் சரியான பிறந்த நேரம், ஊர் ஆகியவற்றைத் தெளிவாக எந்த தவறுதலும் இன்றி ஜோதிடரிடம் கூறினால் மட்டுமே,  அவரால் தெளிவான ஜனன ஜாதகத்தை கணிக்க முடியும். அப்படி கணிக்கப்படும் ஜாதகமே அவரின் மரண காலம் வரை உள்ள பலா பலன்களை எடுத்துரைக்கும் ஜாதகத்தைக் கொண்டுதான் திருமணத்தை நிச்சயிக்க வேண்டும். ஜோதிட ரீதியாக ஆண் பெண் இருவருக்கும் வரன் தேடும் படலம் தொடங்கியதும் முதலில் நாம் பார்ப்பது நட்சத்திரம் பொருந்துகிறதா என்பதுதான். ஆனால் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாகவும் பொருத்தங்கள் உள்ளதா என தெளிவாக ஆராய வேண்டும். பெயர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சுமாரான அமைப்பே ஆகும்.

முதலில் நட்சத்திரப் பொருத்தங்களான 10 வகையான பொருத்தங்களை பார்க்க வேண்டும். பிறகு ஜாதக ரீதியாக உள்ள சாதக, பாதகப் பலன்களைப் பற்றி ஆராய வேண்டும். இப்படி பொருத்தங்கள் பார்த்து செய்யும் திருமணங்கள் நீண்டகால சந்தோஷப் பலன்களை ஏற்படுத்தும். இப்பொழுது பத்து பொருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.

தினப்பொருத்தம்

ஆண் பெண் இருபாலரின் நட்சத்திர பொருத்தங்களில் தினப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் இருவரும் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை  எண்ணும் போது 2,4,6,8,9,11,13, 15,,17,18,20,22,24,26,27 ஆகிய நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உண்டு. கண்டிப்பாக 7வது நடத்திரமாக இருந்தால் திருமண செய்யக்கூடாது.

ஏகநட்சத்திரம்,

பெண், ஆண் இருவரும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம, விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவைகள் மிகவும் உத்தமம்.
அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடமாக இருந்தால் மத்திமம் மற்ற நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.

கணப்பொருத்தம்,

ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணமாக இருந்தால் கணப் பொருத்தம் உத்தமம். ஆண் தேவ கணமும், பெண் மனுஷ கணமும் ஆனால் உத்தமம். பெண் தேவ கணமும் ஆண் மனுஷ அல்லது ராஷஸ கணமானால் மத்திமம். மற்றவை பொருந்தாது. கணப்பொருத்தமானது சிறப்பாக இருந்தால் இருவருக்கும் அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். செல்வ செழிப்பு தாராளமாக உண்டாகும்.

மகேந்திர பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 4,7,10,13,16,19,22,25 ஆக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு. இதன் மூலம் இருவருக்கும் நீண்ட ஆயுள் உண்டு.

ஸ்திரீ தீர்க்க பொருத்தம்

பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 13 க்கு மேல் வந்தால் உத்தமம். 7 க்கு மேல் வந்தால் மத்திமம்.  பொருத்தம் சிறப்பாக இருந்தால் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்.

யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும், தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும். யோனி ஆண், பெண் இனக்குறிகளை குறிக்கும். 14 வகை மிருகங்களின் காம உணர்வு 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது.

பகையோனிகள் நட்சத்திரங்கள்

குரங்கு & ஆடு, பூராடம், திருவோணம்& பூசம், கிருத்திகை

சிங்கம் & யானை, அவிட்டம், பூரட்டாதி& பரணி, ரேவதி

குதிரை & எருமை, அஸ்வினி, சதயம்&சுவாதி, அஸ்தம்

பசு& புலி, உத்திரம், உத்திராடம், விசாகம்& சித்திரை, உத்திரட்டாதி

எலி & பூனை, மகம், பூரம்& ஆயில்யம், புனர்பூசம்

பாம்பு & எலி , ரோகிணி, மிருகசீரிஷம்& மகம், பூரம்

கீரி& பாம்பு, உத்திராடம்& ரோகினி, மிருகசீரிஷம்,

மான் & நாய், கேட்டை, அனுஷம்& மூலம், திருவாதிரை

இது இருவரின் உடல் பொருத்தம் ஆகும்.
பலனறிதல்

குதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம். இதே போல் யானை சிங்கம் ஆடு குரங்கு, நாகமும் கீரியும், நாயும்  மானும், பூனை எலியும், புலிபசுவும் ஒன்றுக் கொன்று பகையாம் எனவே, இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக்கூடாது.

இதன்படி அஸ்வினி அல்லது சதய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு அஸ்தம் சுவாதி நட்சத்திரத்தில்   பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு இடையில் யோனி பொருத்தம் ஏற்படாது.

நட்சத்திரம்  கணம்   பால்   மிருகம்
அஸ்வினி தேவ   ஆண்  குதிரை
பரணி  மானுஷ        ஆண்  யானை
கிருத்திகை  ராஷஸ  பெண்  ஆடு
ரோகிணி மானுஷ   ஆண்  நாகம்
மிருகசீரிஷம் தேவம்  பெண்  சாரை
திருவாதிரை  மானுஷ        ஆண்  நாய்
பனர்பூசம் தேவம்  பெண்  பூனை
பூசம்  தேவம்  ஆண்  ஆடு
ஆயில்யம் ராஷஸ  ஆண்  பூனை
மகம்  ராஷஸ  ஆண்  எலி
பூரம்   மானுஷ        பெண்  எலி
உத்திரம் மானுஷ        பெண்  எருது
அஸ்தம் தேவம்  பெண்  எருமை
விசாகம் ராஷஸ  ஆண்  புலி
அனுஷம் தேவம்         பெண்  மான்
கேட்டை  ராஷஸ  ஆண்  மான்
மூலம்   ராஷஸ  பெண்  நாய்
பூராடம்  மானுஷ   ஆண்  குரங்கு
உத்திராடம்  மானுஷ        பெண்  மலட்டு பசு
திருவோணம்  தேவம்         பெண்  குரங்கு
அவிட்டம் ராஷஸ  பெண்  சிங்கம்
சதயம்  ராஷஸ  பெண்  குதிரை
பூரட்டாதி  மானுஷ        ஆண்  சிங்கம்
உத்திரட்டாதி  மானுஷ        பெண்  பசு
ரேவதி  தேவம்         பெண்  யானை

ராசி பொருத்தம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 7,9,10,11,12, ஆக இருந்தால் உத்தமம். 3,4 ஆக இருந்தால் மத்திமம். ராசிப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் மன ஒற்றுமை இருக்கும்.

ராசி அதிபதி பொருத்தம்

பெண் ராசிக்கு ஆண் ராசி அதிபதி நட்பு ஆனால் உத்தமம். சமம் ஆனால் மத்திமம். பகையானால் பொருந்தாது. ராசி அதிபதி பொருத்தம் சிறப்பாக இருந்தால் மட்டுமே உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக  அமையும்.
கிகரகம  நட்பு  சமம்  பகை
சூரியன்      சந்திரன்   புதன்  சுக்கிரன்
    செவ்வாய்,          சனி  ராகு, கேது
  குரு  
சந்திரன்  சூரியன்  செவ்வாய் ராகு, கேது
  புதன்  குரு, சனி
    சுக்கிரன்
செவ்வாய் சூரியன் சுக்கிரன்,  புதன், ராகு, கேது
  குரு, சந்திரன் சனி 
புதன்  சூரியன்  செவ்வாய் சந்திரன்
  சுக்கிரன் குரு, சனி
    ராகு
குரு  சூரிய   சனி, ராகு
  சந்திரன் கேது   புதன், சுக்கிரன்
  செவ்வாய்
சுக்கிரன்  புதன், சனி செவ்வாய்
  ராகு, கேது  குரு   சூரியன், சந்திரன்
சனி  புதன்  குரு  சூரிய, சந்தி
  சுக்கிரன்   செவ்வாய்
  ராகுகேது
ராகு   சுக்கி சனி புதன்  சூரிய சந்தி
கேது     குரு   செவ்வாய்

வசியப் பொருத்தம்

ராசி   வசிய ராசிகள்
மேஷம்  சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்  கடகம், துலாம்
மிதுனம்  கன்னி
கடகம்   விருச்சிகம், தனுசு
சிம்மம்  துலாம், மீனம்
கன்னி   ரிஷபம், மீனம்
துலாம்  மகரம்
விருச்சிகம்  கடகம், கன்னி
தனுசு   மீனம்
மகரம்   கும்பம்
கும்பம்  மீனம்
மீனம்  மகரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ரச்சுப் பொருத்தம்

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் & சிரசு ரச்சு.
ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் & கண்டரச்சு.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி & உதிரரச்சு.
பரணி, பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி & தொடை ரச்சு.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே ரச்சானால் பொருத்தம் இல்லை. இது மாங்கல்ய பொருத்தம் என்பதால் இந்த பொருத்தம் இருந்தால்தான் திருமணம் செய்ய வேண்டும்.

வேதை பொருத்தம்

அஸ்வினியும் கேட்டையும்,
பரணியும் அனுஷமும்
 கிருத்திகையும் விசாகமும்,
ரோகிணியும் சுவாதியும்,
திருவாதிரையும் திருவோணமும்,
புனர்பூசமும் உத்திராடமும்
பூசமும் பூராடமும்,
ஆயில்யமும், மூலமும்,
மகமும் ரேவதியும்,
பூரமும் உத்திரட்டாதியும்,
உத்திரமும் பூரட்டாதியும்,
ஹஸ்தமும் சதயமும்

ஒன்றுக்கொன்று வேதைகள். வேதைகள் இருவருக்கும் உண்டானால் பொருத்தம் இல்லை.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Monday, February 6, 2012

திருமண தோஷத்தை நீக்கும் திருத்தலங்கள்


திருமணஞ்சேரி,

திருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இருக்கிறது. திருமணஞ்சேரி திருத்தலம் சென்று  இறைவன் அருள் வள்ளல் நாதரையும், இறைவி யாழினும் மென் மொழீயையும் தரிசித்து தங்களுடைய திருமண ஏக்கத்தை வேண்டுதலாய் வைத்தால் திருமணமானது விரைவில் வைகூடும் என்பது ஐதீகம்.
இதற்கு சான்றாக பல புராண கதைகளும் உள்ளன.  பண்டைய காலத்தில் மாகவிஷ்ணுவும் பரமேஸ்வரனும் பார்வதியை சாட்சியாக வைத்து சதுரங்கம் ஆட, அந்த ஆட்டத்தில் மாகாவிஷ்ணு ஜெயிக்க, பார்வதி தேவி தன் அண்ணன் ஜெயித்த சந்தோஷத்தில் பரமனை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டாராம். இதனால் கோபமடைந்த பரமன் நீ பூமியில் பசுவாக பிறப்பாயாக என  சபித்தாராம்.  தன் தவறை உணர்ந்த பார்வதி மன்னிப்பு கேட்க நீ மணச்சேரி கிராமத்தில் என்னை பூஜித்து வந்தால் உனக்கு சாப விமோசனம் கொடுத்து உன்னை மணந்த கொள்வேன் என்றாராம். பசுவான பார்வதியும்  அவ்வாறே மணஞ்சேரியில் நம்பிக்கையுடன் பரமேஸ்வரனை பூஜித்து வர சாப விமோசனம் கொடுத்து தேவியை திருமணம் முடித்துக் கொண்டாராம் பரமேஸ்வரன். திருமண ஏக்கத்தை போக்குவதால் மணச்சேரி என்ற ஊர் 
திருமணஞ்சேரி ஆயிற்று.

இத்திருத்தலத்தில் பூஜை  நேரத்தில் கன்னிப் பெண்கள் 3 மாலையையும், ஒரு எலுமிச்சம் பழத்தையும் கொண்டு வந்து அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அர்ச்சகர்கள் அந்தமாலையை  இறைவனுக்கு சாற்றி எலுமிச்சம் பழத்தை இறைவனிடம் வைத்து இரண்டு மாலைகளையும் எலுமிச்சம் பழத்தையும் விபூதி, குங்கும பிரசாதத்தையும் திரும்பக் கொடுப்பார்கள். கன்னிப் பெண்கள் இறைவனிடம் மனமுருகி தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை இறைவனிடம் வைத்து விட்டு மாலையையும் எலுமிச்சம் பழத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்து, பூஜையறையில் மாலையை  வைத்து விட்டு  எலுமிச்சம்பழத்தை மென்று தின்ன வேண்டும்.
தினமும் கோவிலிலிருந்து கொண்டு வந்த விபூதி குங்குமத்தை அவர்கள் மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டே  வந்தால் திருமணமானது விரைவிலேயே கைகூடிவிடும். இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரரும், அவரது கரம் பற்றி நாணத்துடன் நிற்கும் கோகிலாம்பாள் அம்மையும் விரைவில் திருமணம் நடைபெற அருள்பாலிப்பார்கள் என்பது கண்கூடாக கண்ட உண்மை.

திருமணம் முடிந்தவுடன் கணவருடன் அந்த இருமாலைகளையும் கொண்டு வந்து இக்கோவிலின் திருக்குளத்தில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையை முடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஜாதி, மத வேறுபாடுகளின்றி எல்லா மதத்தினரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வது இக்கோவிலின் சிறப்பாகும்.

திருவிடந்தை,

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் உள்ளது திருவிடந்தை ஆலயம். திருமணமாகாதவர்கள் இவ்வாலயத்திற்குச் சென்று இருமாலைகள் வாங்கி இறைவன் இறைவிக்கு சாற்றி, அந்த மாலைகளை திரும்பப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் தொட்டு வணங்கிவர தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணத் தடைகள் விலகி கைகூடும்.

ஸ்ரீவில்லபுத்தூர்,

மதுரையிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் சூடிக்கொடுத்த சுடர்மணியாம் ஆண்டாள் பிறந்து இறைவனை மணாளனாக கைபிடித்தார். இத்திருத்தலத்திலும் இறைவனை வேண்டி, மாலை சாற்றி, பூஜைகள் செய்து வழிபட்டால் விரைவில் பழுத்தில் மணமாலை விழும் என்பது ஐதீகம்.

அழகர்கோவில்,

மதுரையில் அழகர் சன்னதியில் உள்ள இறைவனை எப்பொழுதும் மணக்கோலத்தில் காணலாம். ஈரேழு உலகில் உள்ள தேவர்களும், முனிவர்களும் சேர்ந்து இறைவன் இறைவிக்கு திருமணம்  செய்து வைத்து கண்டுகளித்த இடமாக இது விளங்குகிறது. இதனால் மணமாகாதவர்கள் இங்கு வந்து அம்மை அப்பனை வணங்கினால் திருமணம் வெகு சிறப்பாக கைகூடும்.

திருச்செந்தூர்,

ஆறுபடை விடுகளில்  ஒன்றான முருகனின் திருத்தலம் இது. திருமணத்திற்கான பலத்தை கொடுக்கக்கூடிய மங்கள குருபகவானே இங்கு வந்து முருகனின் அருளை பெற்றுச் சென்றதாக வரலாறு.  அது மட்டுமின்றி செவ்வாய் தோஷம்த்திற்கும் சிறந்த பரிகார ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. எனவே இங்கு சென்ற கடலில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டால் மணமாகாதவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும்.

திருப்பரங்குன்றம்,

இங்கு முருகனுக்கு தினமும் திருமணக்கோலம். எனவே திருமணமாகாதவர்கள் இத்திருத்தலத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.

வைத்தீஸ்வரன் கோவில்,

இங்கு முருகப் பெருமான் முத்துகுமார சுவாமி என்ற பெயரில் வீற்றிருக்கிறார். சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது அவரின் 3 வது கண்ணில் இருந்து வியர்வை துளியானது பூமியில் விழுந்தது. அதிலிருந்து தோன்றியனே  அங்காரகன் எனும் செவ்வாயாவார். இத்திருத்தலம் செவ்வாய்க்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.  எனவே செவ்வாய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு சென்று முருகப் பெருமாளையும், அங்காரகனையும் வழிபட்டால் திருமண தோஷங்கள் விலகி திருமணம் வெகு விரைவில் கைகூடும்.

உமாமகேஸ்வரன் ஆலயம்,

கேரள மாநிலம் கொல்லத்திலுள்ள இவ்வாலயத்தில் இறைவனும் இறைவியும் இன்பமான இல்வாழ்வினை வாழ்ந்து மக்களுக்கு சிறப்பான இல்லற வாழ்வை அருளிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாலயம் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் மாலை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்தால் விரைவில் மண வாழ்க்கை அமைந்து இனிமையான இல்வாழ்க்கை உண்டாகும்.

திருநாகேஸ்வரம்,

ஒருவரின் ஜாதக ரீதியாக களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு இராகு பகவானை பூஜிப்பது நல்லது. நவகோள்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும் புதனைவிட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரைவிட  ராகு கேதுவும் பலம் பொருந்தியவர்களாக உள்ளார்கள். சூரிய சந்திரனையே பலம் இழக்க செய்யும் ஆற்றல் ராகு கேதுவுக்கு உண்டு. ராகு கேதுவுக்கு ராசி கட்டத்தில் சொந்த வீடு என்று எதுவும் இல்லை. அவர் எந்த ராசியில் அமைந்துள்ளாரோ, எந்த கிரகத்தின் சேர்க்கை பார்வைப்பெற்றுள்ளாரோ அதற்குத் தகுந்த பலன்களை ஏற்படுத்துவார்.

ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்து விட்டால் அனைத்துவிதமான நற்பலன்களையும் அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். ஆண்டியையும் அரசனாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் ராகு. அதுவே, ராகு பலம் பெறவில்லை என்றால் இதற்கு தலைகீழ பலன்களை அடைய நேரிடும். ஒருவரது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு இருந்தாலும், 7ம் அதிபதி ராகுவின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும், திருமண வயதில் ராகு திசை நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதமாகிறது. 5 ம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை தாமதம் உண்டாகிறது. ஆகவேதான், களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்க ராகுவை வழிபடுவது சிறப்பு.

சிறப்பான சிவனருள் பெற்ற ராகுவானவர் திருநாகேஸ்வரத்தில் மட்டுமே நாகவல்லி, நாக கன்னி என இரு தேவியருடன் தனிக்கோவில் கொண்டு மங்கள ராகுவாக அமைந்துள்ளார். குறை தீர்க்க தன்னைத் தேடிவரும் பக்தர்களுக்கு  சிறப்பாக அருள்பாலித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறார். இங்கு ஐந்தலை அரசு எனும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறிவிடும். இத்திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில்  அன்பர்கள் வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்கின்றனர். தங்களது பல்வேறு தொல்லைகளிலிருந்து விடுபட்டு இன்பம் பெற்றிட இங்கு  வரும் பக்தர்களுக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்யவும், விளக்கேற்றவும் ஒரு கட்டணத்தை வசூலித்து ஆலய நிர்வாகமே அனைத்து வித  ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தருகிறது. தோஷங்கள் விலக ராகுவை வழிபடுவோம். பல தொல்லைகளிலிருந்து விடுபடுவோம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்

நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்க சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். அதிலும் குறிப்பாக கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தவர்கள், தங்களுக்கு உண்டாகக்கூடிய திருமணத்தடையை  போக்கிக் கொள்ள இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ளலாம். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும். சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த நெய்வேதிய பிரசாதத்தை மட்டும் உண்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும்.  இப்படி திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதத்தை மேற்கொள்வது மூலம் நல்ல மண வாழ்க்கை அமையும். அதிலும்  மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தியானது மிகவும் விஷேசமானது. அது செவ்வாய் கிழமையாக இருந்து விட்டால் மிக மிக  விஷேசமான நாளாக கருதப்பட்டு மஹா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வோம். எல்லா வளங்களையும் பெற்று பயன் பெறுவோம்.

கீழப்பெரும்பள்ளம்,

வானகிரி என வழங்கப்படும் இத்திருத்தலத்தில் கேது பகவான் கூப்பிய கரங்களுடன் இத்தலத்து இறைவனாகிய சிவன் நாகநாத சுவாமியை வணங்கும் விதமாக அமைந்துள்ளார். பாம்புகளின் தலைவனாகிய வாசுகியும் இங்கு வந்து வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.  கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள், புத்திரதோஷம் உள்ளவர்கள், திருமணம் தடைபடுகிறவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். வட மேற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார் கேதுவின் மனைவி சித்ரலேகா. இத்திருத்தலத்தில் வந்து முறைப்படி வழிபட்டால் இல்லற வாழ்க்கையானது நன்றாக அமையும். கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு  வந்து வழிபட்டால் எல்லா தடைகளும் விலகி சிறப்பான வாழ்க்கை அமையும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Sunday, February 5, 2012

திருமணம் எப்பொழுது நடக்கும்?

பண்டைய காலங்களில் இளம் பிராயத்திலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. ஆனால், காலங்கள் மாற மாற இளமையில் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என கூறப்பட்டதால் இளமை திருமணங்கள் வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும் தமிழ் கலாசாரத்தில் சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆணுக்கு 21 வயது பெண்களுக்கு 18 வயது  ஆகிவிட்டாலே திருமணத்தை செய்து வைத்து விடுவார்கள். இலங்கையில் சில பகுதிகளிலும் இந்த வயதுகளில் திருமணம் செய்கிறார்கள். ஆனால் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் ஆண்களுக்கு 35, 40 வயதுகளிலும் திருமணம் செய்கிறார்கள்.

இளம் வயதிலேயே திருமணம் செய்வது தவறு. இளம் வயது திருமணத்தால் எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலை, சுற்றத்தாரை அனுசரித்து செல்ல முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படுகிறது.  திருமணத்திற்கு உடல் தகுதி, மனத்தகுதி இரண்டுமே அவசியமாகும்.

இது ஒரு புறம் இருக்க வயது முதிர்ந்து திருமணம் செய்து கொள்வதால் பெண்களுக்கு பிள்ளைகளை பெற்றெடுப்பதில் சிக்கல்கள், அவர்கள் வளர்வதற்குள் முதுமை, பருவத்தை எட்டி விடும் நிலை போன்றவை ஏற்படுகிறது. திருமணத்தை தக்க வயதில் செய்வதுதான் சிறப்பு. ஒருவரின் ஜெனன ஜாதக ரீதியாக அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பதினைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். வரன் பார்க்கும் பெற்றோர்களுக்கு ஒரு தவறான கருத்து உள்ளது. குருபலன் வந்து விட்டால் தன் பிள்ளைக்கு திருமணம் நடந்து விடும் என்று ஜோதிடரை அணுகும் போது குருபலம் வந்து விட்டதா பாருங்கள் என ஜாதகத்தை காண்பித்து கேட்கிறார்கள். குரு பலம் என்பது கோட்சார ரீதியாக குருபகவான் ஜென்மராசிக்கு 2,5,7,9,11 ஆகிய வீடுகளில் சஞ்சரிப்பதைத்தான் சொல்வார்கள்.

குரு இந்த வீடுகளில் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும், சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்புகளையும் ஏற்படுத்துவார் என்றாலும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு கோட்சார ரீதியாக உண்டாகக் கூடிய குருபலம் மட்டுமின்றி ஜெனன ஜாதக ரீதியாக நடைபெறகூடிய தசாபுக்திகளும் பலமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவருக்கு திருமணம் கைகூட 7ம் அதிபதியின் தசாபுக்தியோ, 7ல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியோ, 7ம் அதிபதி சேர்க்கைப் பெற்ற சுபகிரக தசாபுக்தியோ, 7ம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ நடைபெற்றால் திருமணம் கைகூடும், அதுபோல களத்திரகாரன் என வர்ணிக்கப்படக்கூடிய சுக்கிரனின் தசாபுக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களாகிய பரணி, பூரம், பூராடத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ, நடைபெற்றால் திருமண சுபகாரியம் கைகூடும். சந்திரனுக்கு 7ல் அமையப் பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தியிலும், 7ம்  அதிபதியின் தசாபுக்தியிலும் ஒருவருக்கு என்னதான் ஜாதக அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும், கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெறும் காலங்களில் திருமணம் அவ்வளவு எளிதில் கைகூடி வருவதில்லை. அப்படியே கூடினாலும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சிலருக்கு கேதுதிசை ராகுபுத்திக்கு பிறகு வரக்கூடிய குருபுத்தி காலத்தில் மணவாழ்க்கை அமைந்தாலும் வரக்கூடிய வரனுக்கும் ராகுகேது தோஷம் இருந்தால் மட்டுமே ஒரளவுக்கு மனவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

கேதுவின் திசையைவிட திருமண வயதை அடைந்தவர்களுக்கு கேதுவின் புத்தி நடைபெறுகின்ற போதும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் காலங்களிலும் எவ்வளவு தான் முயற்சித்தாலும் திருமணங்கள் கை கூடுவதில்லை. அப்படியே கூடி வந்தாலும் பல இடையூறுகள் ஏற்பட்டு தாமத நிலையினை உண்டாக்கும். கேது ஞான காரகன் என்பதால் கேது திசாபுக்தி காலங்களில் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். வாழ்க்கை துணையை சந்தோஷப்படுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். இதனால் மணவாழ்க்கையானது மகிழ்ச்சியற்றதாக மாறும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Saturday, February 4, 2012

திருமண வாழ்க்கை இல்லாத நிலை


பிறக்கும் போது பெற்றோரின் அரவணைப்பில் வளரும் நாம் பள்ளிக்கு செல்லும் வயதில் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவரின் ஆதரவோடு வளர்கிறோம். திருமண வயது என்ற ஒன்று வந்தவுடன் நமக்கென  அமையும் வாழ்க்கைத் துணையின் அரவணைப்பில் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என ஒரு தனித்துவமே வந்து விடுகிறது. என்ன தான் பெற்றோரின் அரவணைப்பும் பாசமும் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றாலும், திருமண உறவு என்ற ஒன்று வரும் போது தான் மனிதன் முழுமையடைகிறான்.

மற்ற எல்லா உறவுகளிடம் இருந்தும் ஒரு அடிதள்ளிச் செல்ல நேரிடுகிறது. அதிலும் வரக்கூடிய வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டானால் அந்த வாழ்க்கையே இன்பமயமாகிறது. ஆனால் சிலருக்கு இந்த  திருமண உறவு என்பது எட்டாக்கனியாகவே  மாறிவிடுகிறது. சிலருக்கு திருமணம் என்று நடந்தாலும் இளம் வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழக்கக்கூடிய சூழ்நிலை, பிரியக்கூடிய வாய்ப்பு என பலவகையில் சங்கடங்கள் உண்டாகின்றது. சிலருக்கு வாழ்க்கை துணையாலேயே பாதிப்புகள் உண்டாகிறது. இதில் ஜோதிட ரீதியாக வாழ்க்கை துணையே ஏற்படாத நிலை ஏன் என பார்ப்போம்.

ஒருவரது ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்ககூடிய 2,4,7,12 ஆகிய வீடுகளும், களத்திர காரகன் சுக்கிரனும் வலு இழந்து பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால், திருமண வாழ்க்கையே இல்லாத நிலை ஏற்படும். குறிப்பாக ஒருவரது  ஜாதகத்தில் 4க்கு மேற்பட்ட கிரகங்கள் எந்தவொரு வீட்டில் அமைந்தாலும் அது சந்நியாச வாழ்க்கையை ஏற்படுத்தும். அது போல செவ்வாய், சூரியன், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கைப் பெற்ற புதன்  ஆகியவை  பாவகிரகங்கள் என்பதால் இவற்றில் 4 அல்லது  5 கிரகங்கள் சேர்க்கைப் பெற்று ஒருவரது ஜாதகத்தில் சேர்ந்திருக்குமேயானால்  மணவாழ்க்கை ஏற்படாமல் போய்விடும். குறிப்பாக இந்த மாதிரியான கிரக சேர்க்கைகளானது 7ம் வீட்டில் இருந்தாலும், சுக்கிரன் அல்லது 7ம்  அதிபதியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சந்நியாச வாழ்க்கை வாழ நேரிடம்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் 2 க்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்து 7ம் வீடு பாவிகள் வீடாக அமைந்து, சுபர் பார்வையின்றி இருந்தாலும், தேய்பிறை சந்திரனானவர் இருபாவிகள் சேர்க்கை பெற்று 7ம் வீட்டில் அமைந்தாலும்,  சந்திரன் சுக்கிரன் இணைந்து சனி, செவ்வாய்க்கு 7ல் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 12ம் வீட்டில் சந்திரன் பாவிகள்  சேர்க்கை பெற்றிருந்தாலும் திருமண வாழ்க்கை அமைந்தாலும் நிலைக்காத நிலை உண்டாகும்.  களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் ராக பகவான் இருபாவிகள் சேர்க்கை பெற்று சுபர் சம்மந்தம் இல்லாமல் இருந்தாலும் சனி சந்திரன் இணைந்து 7 ல் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தாலும், சுக்கிரன், சந்திரன் பலவீனமாக இருந்து 7,12 ல் பாவிகள இருந்தாலும் மண வாழ்க்கை அமைய தடைகள் ஏற்படும். அப்படியே அமைந்தாலும் பிரச்சினைகள் பிரிவுகள் உண்டாகும்.

நவகிரகங்களில் அலிகிரகம் என வர்ணிக்கப்படுவது சனி, ராகு, புதன் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், சனி பகவான் ராக சேர்க்கை பெற்று, 1,7 ல் இருந்து சுபர் பார்வையின்றி இருந்தாலும், ஜென்ம லக்னத்தை சனி, ராகு, புதன் போன்ற கிரகங்கள் சூழ்ந்திருந்தாலும், 8ல் சனி, ராகு, புதன் அமைந்து  7,8 ம் வீட்டிற்கு சுபர் பார்வையின்றி இருந்தாலும், 8ம் வீடு புதன் வீடாக இருந்து சனி, ராகு 8ம் வீட்டைப் பார்த்தாலும், புதன், சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தாலும், ஜென்ம ராசி என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய  பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டு இல்வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகும். மேற்கூறிய கிரக அமைப்புகள் பெண்கள் ஜாதகத்தில் இருக்குமேயானால் மணவாழ்க்கை சிறப்பாக அமையப்பெறாத நிலை ஏற்படுகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Friday, February 3, 2012

திருமணத்தின் மூலம் வாழ்வில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள்

ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு சென்றவுடன், அந்த வீட்டில் எதிர்பாராத முன்னேற்றங்களும் பொருளாதார உயர்வுகளும் உண்டாகினால் இந்த பெண் வந்த நேரம் நல்ல நேரம். இவள் மகாலஷ்மி என எல்லோரும் போற்றுவார்கள். கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தும் குடும்பத்தில் கூட மனைவி என்ற உறவு வந்தவுடன் அதிர்ஷ்டங்களும் தேடி வரும். வாழ்க்கைத் தரமும் உயரும், குப்பை மேட்டிலிருந்தவர்களும் கோபுரத்திற்கு வருவார்கள். மனைவி வந்த பின் தான் வாழ்க்கையில் மாற்றங்களும் உண்டாகும். பொன் 'பொருள்' வரவு, தொழிலில் உயர்வு, சுக வாழ்வு, சொகுசாக அமையும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடானது களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திர காரகனாவார். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 7ம் வீடும், சுக்கிரனும் ஆட்சி உச்சம் பெற்று அமைந்தால் திருமணத்திற்கு பின் அவர் வாழ்வில் பொருளாதார மேன்மைகளும் உயர்வுகளும் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 2ம் இடம் தனஸ்தானம் ஆகும். 11ம் இடம் லாப ஸ்தானம் ஆகும்.  ஒருவரின் ஜாதகத்தில் 2,11 க்கு அதிபதிகள் 7ம் வீட்டு அதிபதியுடனோ, சுக்கிரனுடனோ இணைந்து பலம் பெற்றிருந்தாலும், 7ம் அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் தரமே உயர்ந்து எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவம் வீடு, வாகன யோகத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். ஜாதகத்தில் 4ம் அதிபதியும், 7ம் அதிபதியும், சுக்கிரனும் பலம் பெற்றிருந்தால் 4,7 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்கு பின் சொந்த பூமி மனை, வீடு,யோகம், வண்டி,வாகன வசதிகள் போன்றயாவும் சிறப்பாக அமையும். 4,7 க்கு அதிபதிகள் சுக்கிரனுடன் இணைந்து ஆட்சி உச்சம் பெற்றோ, பரிவர்த்தனை பெற்றோ, பலமாக இருந்தால், சிறப்பாக தொழில் யோகம் உண்டாகி நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் 10ம்  அதிபதியுடன் 7ம் அதிபதி இணைந்திருந்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து தொழில் செய்து வாழ்வில் உயரக்கூடிய யோகம் உண்டாகும்.

7,10 க்கு அதிபதிகளுடன் சுக்கிரனின் சம்மதமும் ஏற்பட்டிருந்தால் கணவன், மன¬வி இணைந்து தொழில் மூலம் சம்பாதித்து ஏற்றங்கள், உயர்வுகளை அடைய முடியும். உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 7,10 க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெற்றிருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாட்களை கூட்டாளிகளாகச் சேர்க்காமல் மனைவியை மட்டுமே கூட்டாளியாக வைத்து தொழில் செய்வது மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஏனென்றால் உபயலக்னகார்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் ஆகும்.
ஒருவர் ஜாதகத்தில் 10 ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் 7ம் அதிபதி அதிபலம் பெற்றிருந்தால் தங்கள் பெயரில் தொழில் செய்வதை விட அவர்களின் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையமுடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Thursday, February 2, 2012

காதல், கலப்பு திருமணம் ஏற்படமா?

இன்றைய இளைஞர்களுக்கு காதல் என்ற சொல்லே ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல இனிமையாக இருக்கும். இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பேய் என்றும் காதலைக் கூறலாம். காதல் செய்வதால் வரக்கூடிய சாதக பாதகங்களைப் பற்றியோசிப்பதற்கு  இன்றைய இளைஞர்களுக்கு நேரமில்லை. காதல் என்பது ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, வரதட்சணை போன்ற பிரச்சனைகளுக்கும் ஓர் தீர்வு என்பதால் அது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காதல் என்ற பெயரால் காம விளையாட்டுகளில் ஈடுபட்டு, பெற்றவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் காதலர்களை ஏற்றுக் கொள்ள முடியாது தான்.

காதலுக்கு கண்ணில்லை என்பதால் காதலிக்கும் போது நிறை குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் சின்ன சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாகி விடும். காதலிப்பது மன ரீதியாக ஆரோக்கியமான விஷயம் என்பதால், காதலிப்பதில் தப்பில்லை. திருமண வாழ்க்கையை அனுசரித்து வாழ  முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே காதலிப்பது நல்லது. ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, ஏமாறுவது போன்றவை நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. காதலிக்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் அவரவரின் பிறந்த ஜாதகத்திலேயே கிரகங்களால் குறிப்பிடப்பட்டு இருக்கும். காதல் என்பது காமம் அல்ல. அது ஒரு அன்பின் ஈர்ப்பு. இனக்கவர்ச்சியும், உடல் உணர்ச்சியையும் காதல் என்ற பெயரால் அசிங்க படுத்தாமல் இருப்பது நல்லது. முதலில் மனதை புரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிட ரீதியாக காதலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும். இதில் சந்திரன் மனோகாரகன். சுக்கிரன்  காதல், பாலியல் உணர்வுகளுக்கு காரகன். காதல் உணர்வுகளுக்கும் காமவிளையாட்டுகளுக்கும் செவ்வாயின் பங்கும் உண்டு. ஏனென்றால், செவ்வாய் பெண்களுக்கு களத்திரகாராகனாவார். ஜென்ம லக்னத்திற்கு  5 ம் வீடும் 7ம் வீடும் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் போன்றவையும் பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டாலும், சந்திரன், சுக்கிரன், செவ்வாயுடன் 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், அந்த ஜாதகங்களுக்கு காதல் கண் மூடித்தனமாக அதிகரித்து திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது.

சந்திரன் மனோகாரகன் என்பதால் காதல் உணர்வை அதிகம் தூண்டி விடுவார். குருபகவானிடம் வித்தை கற்கசீடராக சேர்ந்த சந்திரன் அழகாக இருந்ததால், குருவின் மனைவி தாராவின் ஆசை நாயகன் ஆனார்.  இதை அறிந்த குரு உண் அழகினால் தானே இந்தநிலை என சந்திரனை தேய்ந்து வளர சாபமிட்டார். இதனால்தான் சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என கூறுவார்கள். காதல் எல்லை தாண்டினால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. சந்திரனை நிலா என்றும் கூறுவதுண்டு. எத்தனை காதலர்கள் நிலாவைப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பார்கள். நிலவின் ஒளியில் மடியில் படுத்து மயக்கமொழி பேசியிருப்பார்கள். நிலா தூது செல்லாது என தெரிந்தும் எத்தனை காதலர்கள் தூது விட்டிருப்பார்கள். காதலர்கள் தம்பதிகள் ஆனதும் முதலில் செல்வது தேனிலவுக்குத் தானே.

திருமணம் என்பது இருமனங்களை ஒன்றுபடுத்தக்கூடிய சமயச் சடங்காகும். அவரவர் மொழி,  இனங்களுக்கேற்ப நடத்தப்படும் இந்த சடங்கானது பாரம்பரியமிக்கதாகும். இதிலிருந்து மாறி அவரவர் மனதிற்கேற்றவரை தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளும் காதல் வாழ்க்கையானது, இந்த சமய சடங்குகள் அனைத்தையும் தாண்டி கலப்புத் திருமணமாகவும் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 5ம்  வீடானது பூர்வீதத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். இந்த 5ம் வீடானது பாதிக்கப்படுகின்ற போது உறவுகளிலிருந்து விலகி காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 5 வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும், 5ம் அதிபதி சனி, ராகு கேது சேர்க்கைப் பெற்றாலும், 5ல் அமையக்கூடிய பாவிகளுடன் 7ம் அதிபதி சேர்க்கைப் பெற்றாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்து உடன் பாவகிரகங்களின் தொடர்பு -ஏற்பட்டிருந்தாலும் காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். 5,7 க்கு அதிபதிகள்  பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர்  பார்த்துக்கொண்டு சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும், காதல் ஏற்பட்டு கலப்பு திருமணம் நடைபெறுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரனாவார். 7ம் வீட்டதிபதியும், சுக்கிரனும் சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், 7ல் செவ்வாய் சனி, ராகு அமையப் பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தாலும் காதல் திருமணம் கலப்பு திருமணம் நடைபெறுகிறது..  7ம் வீட்டில் கேது அமையப்பெற்று 7ம் அதிபதியும் சுக்கிரனும் கேது சேர்க்கை அல்லது கேதுசாரம் பெற்றிருந்தால் திருமணம், கலப்புத் திருமணம் நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும் 5 ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7 ம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு மற்றும் கலப்புத் திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் ராகுபகவான் அமையப் பெற்று, 7ம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது வேறுபட்ட ஒருவரை  கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7ம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இருகிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்கவழக்த்தில் மாறு பட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Wednesday, February 1, 2012

சொந்தத்தில் திருமணம்

ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணை யானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பது திருமண வயதை அடைந்தவர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும். அக்காலங்களில் சொந்தங்கள் விட்டு போய்விடக்கூடாது என்பதற்காகவும், சொத்துக்கள் கைமாறி வெளியில்  சென்றால் பிறர் அனுபவிப்பார்கள், அதைவிட நம் சொந்தங்கள் அனுபவிக்கட்டுமே என்பதற்காகவும் ஒன்றுக்குள் ஒன்றாகவே சொந்தத்தில் திருமணத்தை செய்து முடிப்பார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக சொந்தங்களில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்கும் என கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் சொந்தத்தில் திருமணம் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. என்றாலும் தூரத்து சொந்தங்களில் திருமணம் செய்து வைக்கிறார்கள். சரி ஜோதிட ரீதியாக ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கை துணையானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஜென்ம லக்னத்திற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீடும்,  களத்திரகாரகன் சுக்கிரனும் சுபகிரக சேர்க்கை, பார்வை மற்றும் சுபநட்சத்திரங்களில் அமையப் பெற்று இருந்தால் மனைவியானவள் நல்ல ஒரு கௌரவமான இடத்திலிருந்து அமைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், சுக்கிரனும் சொந்த பந்தங்களைக் குறிக்க கிரகங்களின் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் உறவில் திருமணம் நடைபெறக்கூடிய உன்னதமான அமைப்பு உண்டாகும். நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரியன் தந்தை காரகனாவார். ஜென்ம லக்னத்திற்கு 9ம் இடம் தந்தை ஸ்தானமாகும். 9 க்கு 9 இடமாக, 5 ம் வீடு தந்தை வழி மூதாதையர் பற்றியும் பூர்வ புண்ணியத்தை பற்றியும் குறிப்பிடும் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5,9 ல் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7ம் அதிபதியும், சுக்கிரனும் சூரியன் சேர்க்கை அல்லது சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவற்றில் அமையப் பெற்றோ 5,9 க்கு அதிபதிகளுடன் 7ம் அதிபதியும். சுக்கிரனும் அமையப் பெற்றோ இருந்தால் திருமணமானது தந்தை வழி உறவில் அமையும்.

நவக்கிரகங்களில் தாய்காரகன் சந்திரனவார். தாய்மாமனை குறிக்கக்கூடிய கிரகம் புதன் பகவான் ஆவார். 4ம் வீட்டில் வளர்பிறை சந்திரனும், புதன் பகவானும் சுபர் பார்வை பெற்றாலும் 7ம் அதிபதி சுபராக இருந்து வளர்பிறை சந்திரன் புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரனும் சந்திரன் புதன் சேர்க்கை பெற்றாலும்,  நட்சத்திரங்களான ரோகினி, அஸ்தம், திருவோணம், ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்றவற்றில் அமையப்பெற்றாலும் தாய் வழி உறவில் அல்லது மாமன் மகளை மணம் முடிக்கக்கூடிய அமைப்பு, பெண் என்றால் மாமன் மகனை மணம் முடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஜென்ம  லக்னத்திற்கு 3ம் இடமானது இளைய உடன் பிறப்பையும், 11 ம் இடமானது மூத்த உடன் பிறப்புகளையும் பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானமாகும். நவக்கிரகங்களில் செவ்வாய் சகோதர காரகனாவார். ஒருவரது ஜாதகத்தில் 7ம் அதிபதியும், சுக்கிரனும் 3,11 க்கு அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்று, சுபர்சாரம் மற்றம் சுபர்சேர்க்கை பெற்று, செவ்வாயின் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் உடன் பிறந்தவர்களின் உறவினர்களின் வழியில் மண வாழ்க்கையானது அமையும்.

ஆக ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும் சுக்கிரனும் பந்தங்களை குறிக்கக்கூடிய கிரகங்களான சூரியன், சந்திரன் செவ்வாய், புதன் குரு தொடர்புடன் அமைந்தால் நெருங்கிய உறவில் திருமணம் நடைபெறும். என்றாலும் 7ம் அதிபதியோ, சுக்கிரனோ சனி, ராகு, கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவில் அமையாமல், தூரத்து உறவில் அந்நியத்தில் திருமணம் கைகூடும். சுபகிரகங்களின் ஆதிக்கம் 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருக்குமேயானால் ஜாதி மத வேறுபாடுமின்றி பிறந்த குலத்திலேயே திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவரது ஜாதகத்தில் 7ம் வீட்டில் சனி அமையப் பெற்றாலோ, 7ம் அதிபதி சனி சேர்க்கை பெற்றாலோ உறவுகளில் இல்லாமல் அந்நியத்தில் திருமணம் நடக்கும். சனிபகவானனவர் சுபகிரக சம்மந்தத்துடனிருந்தால் அந்நியத்தில் ஓரளவுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமையும். 7ல் அமையும் சனி ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றாலும்,5ல் சனி ராகு அல்லது கேதுயுடன் இனைந்தாலும் சனி,ராகு இனைந்து 7ம்    அதிபதியின் சேர்க்கை அல்லது சுக்கிரனின் சேர்க்கை பெற்றிருந்தாலும்  கலப்பு திருமணம், மதம் மாறி திருமணம், செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Tuesday, January 31, 2012

கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள்

ஒருசில குடும்பங்களில் கணவன் மனைவியிடையே காரணமின்றி பிரச்சினைகள் உருவாகும். வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அனுசரித்துச் செல்ல முடியாத நிலையால் விவாகரத்து வரை போய் நிற்கும். நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்ற பாகுபாடு மண வாழ்வில் ஏற்படுமாயின், அந்த வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கும். உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சனை என்ற ஒன்று இல்லை. ஆனால், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு சின்ன பிரச்சினைகள் கூட மலையளவு பெரியதாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமின்றி அவர்களை சார்ந்திருக்கும் குடும்பமும்தான். இதனால் பிள்ளைகளுக்கும் நிம்மதி- குறைவு, தீயபழக்கங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை போன்றவை ஏற்படுகிறது. பார்த்து பார்த்து செய்து வைக்கும் திருமணமானாலும்,அவர்களே தேர்ந்தெடுத்து அமைத்து கொள்ளக்கூடிய காதல் வாழ்க்கையானாலும் ஏனிந்த அவலநிலை என மனம் புண்படத்தான் செய்கிறது. ஜோதிட ரீதியாக ஏணிந்த பிரச்சினை ஏற்படுகிறது என ஆராய்ந்தோமானால் பல்வேறு உண்மைகள் புலப்படுகிறது.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 7ம் அதிபதியும், சுக்கிரனும் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவகிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவது நல்லதல்ல. இப்படி பாவகிரக சேர்க்கை பெற்றிருந்தால் இந்த கிரகங்களின் தசா புக்திகள்  வரும் போது கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். நவகிரகங்களில் ஞான காரகன், மோட்ச காரகன் என வர்ணிக்கப்படுவர் கேது பகவான். கேது பகவானானவர் ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாட்டை அதிகரித்து இல்வாழ்க்கையில் ஈடுபாட்டை குறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர். ஒருவரின் ஜாதகத்தில்  கேது பகவானின் புக்தி நடைபெறும் காலங்களிலும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் அமையப் பெற்ற  கிரகங்களின் புக்தி நடைபெறும் காலங்களிலும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். அதிலும் குறிப்பாக 1,2,8 ல் கேது அமைந்திருந்தாலும், 7ம் அதிபதி கேதுவின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும் கேதுவின் புக்தி காலங்களில் அதிக பாதிப்புகள் உண்டாகிறது.

சர்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் பின்னோக்கி சஞ்சரிக்கக்கூடியவர்கள். கோட்சார ரீதியாக ராகு,  கேது ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் தங்குவார்கள். எப்படி ஜென்ம  லக்னத்திற்கு 1,7, 2,8 ல் சஞ்சரிக்கும் போது ராகு, கேது, அதன் தசாபுக்தி காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார்களோ, 1,7, 2,8 ல் ராகு&கேது ஒன்றரை வருடங்கள் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளையும், வீண் பிரச்சினைகளையும் உண்டாக்குவார். இதில் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என பார்த்தோமானால் அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான பாதிப்புகள் நெருக்கடிகள் உண்டாகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Monday, January 30, 2012

உங்கள் துணைவரின் பண்பும் தோற்றமும்

ஆண் பெண் இருவருமே தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் அடையவர்களாக இருப்பார்கள். அழகு என்பது சிலருக்கு இயற்கையிலேயே அமைந்து விடும். சிலர் அழகாக இல்லாவிட்டாலும் தன்னை அழகு படுத்திக் கொள்வார்கள். அக்காலங்களில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்துஅந்த மஞ்சளின் வாசம் மேனியில் தவழ, நெற்றியில் குங்குமம் இட்டு, தலையில் நன்றாக எண்ணெய் வைத்து தலைவாரி, கொண்டைபோட்டு அந்த கொண்டையில் நான்கு முழ பூவை மடித்துச் சொருகி வாயில் வெற்றிலை போட்டு மென்று, நாக்கு முழுக்க சிவப்ஙபேறி பேசும் அழகே அழகுதான். மஞ்சள் பூசுவது தோளுக்கு நல்லது. வியர்வை நாற்றம் தெரியாது. குங்குமம் நெற்றியில் வைத்துக் கொள்வதால் மன அழுத்தங்கள் விலகும். கூந்தலில் பூவைத்துக் கொள்வது மங்களகரமான அழகையும் கணவரை மயக்க செய்யும் நிலையையும் உண்டாக்கும். இயற்கை அழகு  இயற்கை அழகுதான். ஆனால் தற்போதுள்ள நிலைமையே தலைகீழ். முகத்திற்கு பவுடர் ஸ்டிக்கர் பொட்டு, தலையை விரித்துப் போட்டுக் கொண்டு செல்லும் ஸ்டைல், காலில் போட்டிருப்பது செருப்பா, மரப்பலகையா என புரியாத அளவிற்கு உயரம், உம் இதுவும் ஒரு அழகுதான்!.

ஆண்களையும், பெண்களையும் அழகுபடுத்த எத்தனை அழகு நிலையங்கள், அழகு ராணியா, அருக்கானியா என போட்டிகள். ஆனால் புற அழகு வெளித் தோற்றத்தில் பிறரை கவர்ந்திழுக்க மட்டுமே. அக அழகுதான் எல்லோர் மனதிலும்  உங்களை நிலை நிறுத்தி வைக்கும். சரி, ஜாதக ரீதியாக ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணையானது அழகு,அறிவு,திறமை வாய்ந்ததாக இருக்குமா என பார்ப்போம்.

ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடானது களத்திர ஸ்தானமாகும். களத்திர காரகன் சுக்கிரனாவார். பொதுவாக 7ல் உள்ள கிரகத்தையும், 7ம் அதிபதியையும், 7ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்ற கிரகத்தையும் கொண்டு அமையக்கூடிய வாழ்க்கை துணையானது எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணநிலை  இருக்கும் என்பதால், 7ம் அதிபதி எந்த ராசியில் உள்ளாரோ அதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் அதிபதி, 7ம் அதிபதியின் சேர்க்கை பெற்ற கிரகம், 7 ல் உள்ள கிரகம் இவற்றில் எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் தன்மை கொண்டவராக வாழ்க்கைத் துணை இருப்பார்.

நவகிரகங்களில் நாயகனாக விளங்கும் சூரியன் ஒருவரது ஜாதகத்தில் பலம்பெற்று அமையுமேயானால் வரக்கூடிய வாழ்க்கைத் துணை சிவப்பு நிறமாக இருப்பார். சற்றுமுன் கோபமும் இருக்கும். பெரிய அந்தஸ்துள்ள  குடும்பத்தை சார்ந்தவராகவும், இளம்வயதாக இருந்தாலும் தோற்றத்தில் சற்று முதுமையானவராகவும் இருப்பார்.

வளர்பிறை சந்திரன் 7ம் வீட்டில் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கைத் துணை அழகானவராகவும், மென்மையான குணம் படைத்தவராகவும், வாழ்க்கை துணை மீது அதிகபாசம் உடையவராகவும், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவராகவும் இருப்பார். அதுவே தேய்பிறை சந்திரனாக இருந்தால் அழகற்றவராகவும், சோம்பல் உடையவராகவும், ஜல தொடர்புடைய பாதிப்புகள் உடையவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார்.

செவ்வாய் 7ம் வீட்டில் பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய வாழ்க்கை துணையானவர் சிவந்தமேனியுடையவராகவும், வசீகரமான உடலமைப்பு கொண்டவராகவும், மற்றவர்களை அனுசரித்துச் செல்லக்கூடியவராகவும், வசதியான வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பார். அதுவே செவ்வாய் நீசம் பெற்றிருந்தால் கோபம் அதிகம் உடையவராகவும், மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்ல முடியாமல் சண்டையிடுபவராகவும் கர்பபை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், மாதவிடாய் கோளாறுகள் உள்ளவராகவும் இருப்பாள்.

7ம் புதன் சுபர்பார்வை சேர்க்கைப் பெற்று பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய வாழ்க்கைத்  நன்கு படித்தவராகவும் புக்திகூர்மை உள்ளவராகவும், அறிவாற்றல் உடையவராகவும், எதையும் எளிதில் புரிந்து கொண்டு மற்றவரை வழிநடத்திச் செல்பவராகவும் இருப்பார். அதுவே புதன் பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றால் சுமாரான அழகுடையவராகவும், குழந்தை போன்ற குணமும், மனக்குழப்பவாதியாகவும், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உடையவராகவும் இருப்பார்.

7ல் குரு தனித்து அமையாமல் சுபகிரக சேர்க்கையுடன் இருந்து பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய வாழ்க்கை துணையானவர் தெய்வீக குணமும், நல்ல அழகும்., ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும், வசதியான இடத்தைச் சார்ந்தவராகவும், சமுதாயத்தில் கௌரவமான நிலையை உடையவராகவும் இருப்பார். அதுவே குரு பலமிழந்திருந்தால் குடும்ப வாழ்வில் ஈடுபாடற்றவராகவும், தேவையற்ற பழக்க வழக்கங்கள் உள்ளவராகவும் இருப்பார்.

7ம் வீட்டில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய வாழ்க்கைத் துணையானவர் நல்ல அழகும், வசதி வாய்ப்புகள் நிறைந்த குடும்பத்தைச் சார்ந்தவராகவும் பிறரை கவர்ந்திழுக்கும் உடலமைப்பும் கொண்டவராகவும், நல்ல பழக்க வழக்கங்கள் உடையவராகவும் இருப்பார். அதுவே சுக்கிரன், சனி, ராகு, தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால் உடல் இச்சைகள் அதிகம் ஏற்பட்டு தடம்மாறி செல்லக்கூடியவராக இருப்பார்.

ஜென்ம லக்னத்திற்கு 7ல் சனி பலம் பெற்றால் வரக்கூடிய வாழ்க்கைத் துணைக்கு வயது முதிர்ந்த தோற்றம் அல்லது அதிக வயது இருக்கும். கறுப்பாகவும், அழகற்றவராகவும் இருப்பார். ஆனால், அறிவாற்றல் அதிகம் இருக்கும். அதுவே சனி 7ல் பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தால் உடல் அங்க பாதிப்புகள் மற்றும் ஊனம் உடையவராகவும் மிகவும் சோம்பேறியாகவும், பார்ப்பவருக்கு அறுவெறுக்கத்தக்க தோற்றம் கொண்டவராகவும் இருப்பார்.

7ம் வீடானது ராகு&கேது போன்ற சர்பகிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் வரக்கூடிய வாழ்க்கைத் துணை கவர்ச்சியற்றவராகவும் வயது முதிர்ந்தும் காணப்படுவார். திருமணம் நடைபெறவும் தாமதநிலை ஏற்படும். அதுவே சுபகிரக வீட்டில்அமைந்து சுபகிரகங்களின் சேர்க்கையோடு பார்வை பெற்றால் வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் மேன்மைகளை அமையும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Sunday, January 29, 2012

கிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய்களும்

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவது எவ்வளவு முக்கியமோ, அது போல கணவன் மனைவி இருவரும் நோய் நொடி இல்லாமல்  வாழ்வதும் முக்கியம். கஷ்டப்பட்டு சம் பாதித்த அனைத்து பணத்தையும் டாக்டருக்கு மொய் எழுதிக் கொண்டிருந்தால், அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. ஒரு சிலருக்கு தினமும் ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிக் கொண்டேயிருக்கும். காலையில் தலைவலி அடுத்த நாள் உடல் வலி, உட்கார்ந்தார் எழுந்திருக்க முடியாத நிலை என ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு, இதனால் மன உளைச்சல், குடும்பத்தை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத சூழ்நிலை, அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை உண்டாகும். ஒரு சிலருக்கோ நிரந்தரமாக உடல் பாதிப்புகள், சர்க்கரை வியாதி, ரத்த அபத்தம், இருதய பாதிப்பு என உடலோடு வியாதி ஒட்டிக்கொண்டேயிருக்கும.  மருத்துவருக்கு செலவு செய்து செய்து, பேசாமல் நாமே மருத்துவம் படித்திருக்கலாமே எனத் தோன்றும். இப்படி நோயுடனேயே போராட வேண்டிய காரணம் என்ன வென்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தோனால், ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடும், களத்திர காரகன் சுக்கிரனும் பலஹீனமடைந்தால் மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு (பெண் என்றால் கணவருக்கும்) உண்டாகும்.

7ம் அதிபதி நீசம் பெற்றிருந்தாலும், சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றாலும் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருப்பதும் பலஹீனமான அமைப்பாகும். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஏற்பட்டு அதன் தசா புக்திகள் நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் மனைவிக்கு (கணவருக்கு) ஏற்படும்.

நவகிரகங்களில் ஆணுக்கு களத்திர காரகன் சுக்கிரனும், பெண்ணுக்கு செவ்வாயும் ஆகும். சுக்கிரன் செவ்வாய் பலவீனமடைவதும் பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றிருப்பதும் குடும்பத்தில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டிற்கு 2ம் பாவமான 8ம் வீட்டிலும், 12ம் பாவமான 6ம் வீட்டிலும் பாவகிரகங்களான சனி  ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்று அதாவது ஜென்ம லக்னத்திற்கு 6,8 ல் பாவகிரகங்கள் அமையப்பெற்று 7ம் பாவமானது பாவிகளால் சூழப்பட்டால் 7ம் வீடானது பலவீனப்பட்டு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

அதுபோல 7ம் வீட்டிற்கு 8ம் வீடான ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டில் அதிக பாவ கிரகங்கள் அமைவது, 2ம் வீட்டதிபதி பலவீனப்படுவது போன்றவை சாதகமற்ற அமைப்பாகும். இது போன்ற கிரக அமைப்புகள் ஏற்பட்டு அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் மனைவிக்கு (கணவருக்கு) ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 2,6,7,8 போன்ற வீடுகளில் பாவ கிரகங்கள் அமையப் பெற்று, அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் மனைவிக்கு உடல்ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் மேற்கூறிய கிரக அமைப்புகள் இருக்கின்ற போது அதன் தசா புக்தி காலங்களில் கணவருக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்றாலும், குறிப்பாக 8ம் பாவத்தை அதிமுக்கியத்துவம் கொடுத்து மாங்கல்ய ஸ்தானமாக குறிப்பிட்டுவதால் 8ம் இடம் பலவீனப்பட்டோ, 8ல் பாவிகள் அமைந்தோ அதன் தசாபுக்தி நடைபெற்றால் கணவருக்கு கண்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை  உண்டாகும்.

சந்திரனுக்கு 2,6,7,8 போன்ற ஸ்தானங்களில் அதிக பாவகிரகங்கள் அமையப் பெற்று அமைந்திருந்தால் அதன் தசாபுக்தி காலங்களிலும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Friday, January 27, 2012

படித்த மனைவி

கல்வி என்பது அனைவருக்கும் இன்றி அமையாத ஒன்றாகும். இதில் மணவாழ்க்கை ரீதியாக வரக்கூடிய வாழ்க்கைத் துணையானது நன்கு படித்திருந்தால் வாழ்க்கை தரமும் உயர்வாகவே இருக்கும். இன்றைய சூழலில் பெற்ற குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றாலும் முதலில் எழும் கேள்வி பெற்றோர் படித்தவர்களா? என்றுதான். ஏனென்றால் கணவனோ மனைவியோ படித்திருந்தால் நல்ல உத்தியோகத்தைப் பெறமுடியும். அதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கும் நல்ல கல்வியைத் தர முடியும் பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் நல்ல பழக்க வழக்கங்கள், பலகலைகளில் தேர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இவை அனைத்திற்கும் மூலதனமாக அமைவது கணவன் மனைவியின் கல்வி தகுதியே ஆகும். ஜோதிட ரீதியாக உஙகளுக்கு  வரக்கூடிய வாழ்க்கைத் துணையானது படித்தவராக இருக்குமா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். முதலில் ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் பெண்ணாவள் படித்தவளாக இருப்பாளா என்பதனை பற்றி பார்ப்போம்.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டைக் கொண்டு அடிப்படைக் கல்வி, பேச்சுதிறன், எழுத்துத்திறன் பற்றியும், நான்காம் வீட்டைக் கொண்டு இளமைக் கல்வி, மற்றும் பொது அறிவைப் பற்றியும், 5ம் வீட்டைக் கொண்டு உயர்கல்வி, புத்திசாலித்தனம், அறிவுக் கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றை பற்றியும், 10 ம் வீட்டைக் கொண்டு தொழில், உத்தியோக நிலை பற்றியும், இத்துடன் நவக்கிரகங்களில் குரு, புதனைக் கொண்டு ஒருவரது கல்வி ஆற்றலைப் பற்றியும் மிகத் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

ஒரு ஆணுக்கு அமையக் கூடிய மனைவியானவள் படித்தவளாக இருப்பாளா என ஆராய்வதற்கு களத்திர ஸ்தானமான 7ம் வீட்டிற்கு 2,4,5 ம் அதிபதிகள் மற்றும் குரு,புதன் பலத்தைக் கொண்டு தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 7ம் வீட்டிற்கு 4,5 க்கு  அதிபதிகள் (ஜென்மலக்னத்திற்கு 10,11 க்கு அதிபதி) சுபர் சேர்க்கைப் பெற்று  கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், ஆட்சி உச்சம் பெற்ற இப்படிப்பட்ட கிரகநிலை ஒரு பெண் ஜாதகத்தில் இருந்தால் நன்கு படித்த கணவணாக அமைவார். 

ஒரு ஆணின் ஜாதகத்தில் 7க்கும் 4 ம் அதிபதி பலமிழந்து 7க்கு, 5 ம் அதிபதி பலம் பெற்றிருந்தால் வரக்கூடிய மனைவியானவள் கல்வித் தகுதியில் சற்று குறைந்தவளாக இருந்தாலும், நல்ல அறிவாற்றலும் குடும்பத்தை நிர்வகிக்கும் ஆற்றலும், கணவருக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக இருக்கும் பண்பும் உண்டாகும். 7க்கு 2ம் இடமான 8 ம் அதிபதி பலம் பெற்றிருந்தால் நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல், குடும்பத்தை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் போன்றவை  சிறப்பாகவும், மனைவி வழி உறவுகளிடையே ஒற்றுமையாகவும், மகிழ்ச்சி கரமாகவும் இருக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டிற்கு 4,5 க்கு அதிபதிகள் புதன் போன்ற சுபகிரக சேர்க்கை பெற்று, ஆட்சி உச்சம் பெற்று, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று, சந்திரன் சுக்கிரனும் பலம் பெற்று, பரிவர்த்தனைப் பெற்றிருந்தால் நல்ல அழகான, படித்த, பண்புள்ள, நாகரீகமான பெண் மனைவியாக அமைவள்.

ஆக 7 க்கு 4,5 அதிபதிகள் பலம் பெற்றிருப்பது மூலமாக நல்ல படித்த வாழ்க்கைத் துணையானது அமையும். அதுமட்டுமின்றி 7க்கும் 10ம் அதிபதி 7ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ  அமைந்திருந்தால் நன்கு படித்த  மனைவி அமைவது மட்டுமின்றி, உயர்ந்த பதவிகளில் உத்தியோகம் வகிக்க கூடியவராகவும், கணவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக விளங்கக்கூடியவராகவும் இருப்பார்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

Thursday, January 26, 2012

ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு

கணவன் மனைவியிடையே உள்ள தொடர்பானது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போல இணை பிரியாததாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையானது மனமொத்து வாழ்வதாக அமைந்து விட்டால், அந்த வாழ்வில் இன்பத்திற்கு எல்லையே இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் அன்போடு வாழும் குடும்ப சூழல் மிக சிறப்பானதாக இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் பிறன் மனைவி நோக்காது, வாழும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தையும், தம்மை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சிகரமானதாக வைத்துக் கொள்ள முடியும்.

ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்து மென்ன வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என மனைவியிடம் மட்டுமே தம்முடைய மனக்குறைகளை பகிர்ந்து கொள்ளும் ராமர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்றாலும், அதில் இருவருக்குமே பங்க உள்ளது என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ராமன் சீதையைப் போல வாபம் ஜோடிகள் இந்தியாவில் ஏராளம் ஏராளம். இப்படி ஒருவருக்கொரவர் ஒருடல் ஈருயிராய் வாழ்வதென்பது அறிதல்லவா. இப்படி சீதாராமனாய் வாழக்கூடிய யோகம் எத்தனைப் பேருக்க உள்ளது என ஜோதிட ரீதியாக பார்ப்போமா?

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம  லக்னத்திற்கு 7ம் பாவம் களத்திரஸ்தானமாகும். 2ம் வீடு குடும்பஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் 7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்து, 7ம் அதிபதி கேந்திர, திரிகோணஸ்தானங்களில் தனித்து அமையப் பெற்று, சுபர் பார்வை மற்றும் சுபர் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும், அப்படியே 7ம் வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றாலும் ஒரே ஒரு கிரகமாக இருப்பதும் அதிலும் குறிப்பாக சுபகிரகமாக இருப்பதும் நல்லது.

ஒருவரது வாழ்க்கையில் களத்திரகாரகனாக சுக்கிரன் மிக முக்கிய பங்குவகிப்பதால் அவர் கிரகச்சேர்க்கையின்றி அமைவதும், சுபர் பார்வையுடன், சுபர் நட்சத்திரத்தில்  அமைந்திருப்பதும் நல்லது. குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் அதிக கிரகச் சேர்க்கையில்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது. குருவின் பார்வையானது 7ம் வீட்டிற்கோ, 7ம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ இருப்பதும் மிகவும் சிறப்பு. மேற்கூறியவாறு ஒருவரது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அமையுமேயானால் ஏக தாரம் மட்டுமே உண்டாகி வாழ்க்கையில் எந்த விரத சலனங்களும் இன்றி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இருக்கும்.

பொதுவாக 7ம் அதிபதியும் சுக்கிரனும் கிரகச் சேர்க்கை இல்லாமல் இருப்பது ஏக தாரத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், அக்கிரகங்களுக்கு இருபுறமும் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் பாவி கிரகங்களின் பார்வை பட்டாலும் வாழ்வில் சில பாதிப்புகள் உண்டாகிறது. இப்படி அமையப் பெற்ற பாவகிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகளை உண்டாவதில்லை.

சுக்கிரன் களத்திரகாரகன் என்றாலும், செவ்வாயும் திருமண வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். செவ்வாயும் சூரியனும்  கூடி ஒருவரின் ஜாதகத்தில்  எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் இரு தாரம் உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால் செவ்வாய் சூரியன் சேர்க்கை  இல்லாமல் இருப்பது நல்லது.
ஜென்ம லக்னம் எப்படி ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு முக்கியமோ, சந்திரா லக்னமும் அவ்வளவு முக்கியமாகும். சந்திரனுக்கு 7ல் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் சந்திரனுக்கு 7ம் அதிபதி கிரகச் சேர்க்கையின்றி இருப்பதும் நல்லது.
இப்படிப்பட்ட கிரகச் சேர்க்கைகள் ஆண், பெண் ஜாதகங்களில் அமைந்திருக்குமேயானால் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் இன்றி பெண்கள் சீதையைப் போலவும், ஆண்கள் ராமனைப் போலவும் வாழ முடியும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

Wednesday, January 25, 2012

தாமத திருமணம்

வசதி வாய்ப்புகள் குறைவால் திருமணம் தாமதமானால், அவர்கள் ஏழை அதனால் திருமணம் செய்து வைக்க முடிய வில்லை என்றொரு சமாதானம் ஏற்படும். ஆனால் எல்லா வசதி வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களுக்கே திருமணம் தள்ளிக் கொண்டே சென்றால், அவள் ராசியில்லாதவளாகி விடுவாள். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். சில பெற்றோர்கள் வரன் பார்த்தே சொத்துக்களை இழந்திருப்பார்கள். சிலர் தேடினோம் தேடினோம் தேடிக்கிட்டே இருக்கோம் என்பார்கள். முதலிலேயே நல்ல வரன் ஒன்று வந்தது அதையே முடித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் நல்ல வரனாக அமையட்டுமே என நினைத்தோம். அதுவே பெரிய தவறாகிப் போய்விட்டது. என ஆதங்கப் படுபவர்களும் உண்டு. ஏன் இந்த தாமதநிலை.

இவளை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக கண்ணை மூடுவோம் என எமனிடத்தில் பெண்ணுக்கு வரன் கேட்பார்கள் சிலர். ஜாதக ரீதியாக இதைப் பற்றி ஆராயும்போது, கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரமே காரணமாகிறது. பருவத்தே பயிர் செய், என்பது போல எந்த வயதில் திருமணம் நடக்க வேண்டுமோ அந்த வயதில் திருமணம் நடைபெறுவதுதான் சிறப்பாகும். ஏனிந்த தாமதநிலை என்று ஜோதிட ரீதியாக ஆராயும்போது திருமண ஸ்தானத்திற்குரிய 7ம் அதிபதி மறைவு ஸ்தானமாகிய 6,8,12 ல் மறைந்து அமைந்திருந்தாலும், ஆண்களுக்கு களத்திர காரகனான  சுக்கிரனும், பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் மறைவு ஸ்தானங்களாகிய 6,8,12 ல் இருந்தாலும் திருமணம் தாமதமடையக்கூடிய நிலை உண்டாகும்.

நவக்கிரகங்களில் மந்த காரகன் என்று கூறக்கூடிய சனி பகவானின் ஆதிக்கம் ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் எந்தவொரு சுபகாரியம் நடைபெறுவதற்கும் தாமத நிலை உண்டாகும். நவகிரகங்களில் சனியின் பார்வையானது சற்று கெடுதலை உண்டாக்கக்கூடியது. சனி, தான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10ம் வீடுகளை பார்வை செய்வார். இப்படி பார்வை செய்யும் சனி பகவானின் பார்வை 7ம் வீட்டிற்கோ, 7ம் வீட்டின் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ உண்டாகுமானால் திருமண வாழ்க்கை ஏற்பட தாமத நிலை உண்டாகும். சிறப்பான மணவாழ்க்கைக்கு 7ம் வீடு மட்டுமின்றி தாமதமின்றி திருமண அமைய குடும்ப ஸ்தானமான 2ம் வீடும் பலமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். சனியின் கொடிய பார்வை இந்த 2ம் வீட்டிற்கும் 2ம் வீட்டின் அதிபதிக்கோ இருக்குமேயானாலும் மணவாழ்க்கை என்பது தாமதமாகத்தான் அமையும்.

இது மட்டுமின்றி களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும் 7ம் வீட்டதிபதி சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருந்தாலும் மண வாழ்க்கையானது தாமதமாகவே உண்டாகும். பொது வாக , சனி எந்தவொரு காரியத்திலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்றாலும் லக்னாதிபதியாகவோ, 7ம் அதிபதியாகவோ சனி ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில் பெரிய கெடுதல்களை உண்டாக்குவதில்லை.

ஒருவர் ஜாதகத்தில் கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரங்கள் கூட திருமணத்தை தாமதப்படுத்தும். ஒருவருக்கு 7ம் பாவம் 7ம் அதிபதி அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் இவருக்கு நடக்கக்கூடிய தசா புத்தியானது சாதகமின்றி இருந்தால், எடுத்துகாட்டாக சர்பகிரகங்களான ராகுகேதுவின் தசாபுக்தியோ, ராகு கேது சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ திருமண வயதில் நடைபெறுமேயானால் திருமண வாழ்க்கை அமைய தாமத நிலை உண்டாகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

Tuesday, January 24, 2012

இளமைத் திருமணம்


பெண்ணின் திருமண வயது 21. இது எல்லா இடங்களிலும் பொதுவாக தற்போது வைக்கப்பட்டுள்ள விளம்பரம். இதை எல்லோரும் கடைபிடித்துதான் ஆகவேண்டும் என்ற சட்டமில்லை. சட்டத்திலேயே 18 வயது ஆனாலே திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது கடமை என பெற்றோர்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சொந்தங்கள் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக, ஒரு குழந்தை பிறக்கும்போதே இது என் தங்கை மகனுக்கு, இது என் அண்ணன் மகளுக்கு என ஒரு முடிவெடுத்து வைத்து விடுவார்கள். எனக்குத் தெரிந்து என் பாட்டி உறவில் வரக்கூடிய ஒருவருக்கு வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்து, புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம். ஆனால் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் திருமணங்கள் செய்வதற்கு தற்போது யாரும் ஒத்துக் கொள்வதில்லை. இளமையிலேயே திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. சரியான வயதில் திருமணம் நடைபெற வேண்டும். இவ்வாறு  பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய பாக்கியம் ஒரு சிலருக்கே அமைகிறது.  இப்படி தக்க வயதில் திருமணம் நடைபெறுவதற்கு ஜோதிட ரீதியில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருப்பதே காரணம். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என கூறக்கூடிய 7ம் பாவமானது பலமாக இருந்தாலும், 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சுபர் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும், சுபகிரகங்களின் சாரம் பெற்றிருந்தாலும் அவருக்கு தக்கவயதில் திருமணம் நடைபெறக் கூடிய பாக்கியம் உண்டாகம். 7ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நட்புகிரக வீடுகளில் அமையப் பெற்றிருப்பதும் நல்லது.

நவகிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடியவைகள் குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், சுபர்சேர்க்கைப் பெற்ற புதன் ஆகும். சுபகிரகங்கள் 7ம் வீட்டில் அமையப் பெற்றாலும், 7ம் அதிபதி சுபகிரக சேர்க்கை பெற்று, சுபகிரகங்களின் தசாபுக்தி திருமணவயதில் நடைபெற்றாலும் இளமையிலே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். 7ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி ஆண்களுக்கு சுக்கிரனும் பெண்களுக்கு  செவ்வாயும், சுபகிரக சேர்க்கை, சுபகிரக நட்சத்திரத்தில் அமையப் பெற்றாலும், சுபர் பார்வை பெற்றாலும் இளம் வயதில் திருமணம் நடக்கும். சுபகிரகங்களில் முக்கிய கிரகமான குரு, தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7,9  ஆகிய வீடுகளை பார்வை செய்வார். சுபகிரகமாகிய குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டிறோ, 2ம் அதிபதிக்கோ சுக்கிரனுக்கோ இருக்குமேயானால் தக்க வயதில் திருமணம் நடைபெறக்கூடிய வர்ய்ப்பு உண்டாகும்.

திருமண வயதை அடைந்த ஆண், பெண் இருவருக்கும் இளம் வயதில் பாவகிரகங்களின் தசாபுத்திகள் நடைபெற்றால் சுக்கிரனின் திசையோ அல்லது புக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தியோ நடைபெற்றால் தக்க வயதில் திருமணம் கைகூடும். மணவாழ்க்கை வாழ்வதற்கேற்ற உடல் தகுதியும் மன தகுதியும் உண்டாகி இல்வாழ்க்கை இன்பகரமாக இருக்கும். இளமை திருமணம் என்பதை 10,12 வயதுகளில் நடக்கக்கூடிய பால்ய திருமணமாக தவறாக நினைத்து பிள்ளைகளின் வாழ்வை கெடுக்காமல் தக்க வயதில் திருமணம் செய்து வைப்பது நல்லது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001

Monday, January 23, 2012

திருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்

குடும்ப வாழ்வில் கணவன், மனைவி ஒற்றுமை மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்பட்டால்தான் மண வாழ்க்கை என்பதே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நவக்கிரகங்களால் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அவற்றில் திருமணத்தையே தீர்மானிக்கும் கிரகமாக சுக்கிரன் விளங்குகிறார். திருமணத்தை மட்டுமின்றி ஆடம்பரமான வாழ்க்கை அமைவதற்கும் சுக்கிரன் மிக முக்கிய கிரகமாவார். ஒருவருக்கு பூமி, மனை, யோகம், வண்டி வாகனங்கள், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமைவதற்கு சுக்கிரன் மிக முக்கிய காரகனாகிறார். ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள் போன்றவைகள் சேருவதற்கும் சுக்கிரனே காரகனாகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனானவர் கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று சுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு இயற்கையாகவே மண வாழ்க்கை சிறப்பாக அமைவது மட்டுமின்றி சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழும் யோகம் உண்டாகிறது.

சுக்கிரன் கிரகச் சேர்க்கையின்றி சுபர் பார்வையுடன் அமையப் பெறுவது சிறப்பு. அப்படி சுக்கிரன் கிரக சேர்க்கைப் பெறுவாராயின் களத்திரம் தோஷம் உண்டாகும். குறிப்பாக சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், சுக்கிரன் பாவிகளின் சேர்க்கை பெற்று ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் போன்றவற்றில் அமைந்திருந்தாலும் வாழ்வில் தடம் மாறி செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது.

சுக்கிரன் மேற்கூறியவாறு அமைந்திருந்தால் நற்பலன்களை தரமாட்டார் என்பது மட்டுமின்றி சுக்கிரனை பற்றி ஆராய்கின்ற போது மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் அஸ்தங்கம் ஆகும். அதாவது சுக்கிர பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்குவது மட்டுமின்றி, சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பார். சூரியனானவர் மிகவும் சக்தி வாய்ந்த உஷ்ணகிரகம் என்பதால், சூரியனுக்கு மிக அருகில் எந்த கிரகம் சென்றாலும் அந்த கிரகத்தின் வலிமையை முழுமையாக குறைத்து விடுவார். சூரியனை ஒட்டியே சுக்கிரன் சஞ்சரித்தாலும் சூரியனுக்கு முன்பின் 8 டிகிரிக்குள் அமையப் பெற்றால் பலம் குறைந்து அஸ்தங்கம் பெறுகிறார். அதுவும் ஒரு டிகிரிக்குள் அமைவரானால் சுக்கிரன் தன் முழு பலத்தையுமே இழந்துவிடுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் பலமிழந்த அஸ்தங்கம் பெற்று விட்டால் ரகசிய நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை, சிலருக்கு திருமணமே நடைபெறாமல்  போகக்கூடிய  அனுகூலமற்ற நிலை உண்டாகிறது.

சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு சுக்கிரனின் தசா, புக்தி நடைபெறும் காலங்களில் ரகசிய நோய்களின் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. சுக்கிரன் தேவகுருவான  குருவின் சேர்க்கை பெற்றாலும் களத்திர தோஷம் தான்.

ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்தால் அதன் தசாபுக்தி காலங்களில் வாழ்வில் பல உயர்வுகள் தேடிவரும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெறுமேயானால் பெண்களால் சாதகமான பலன்களும், தொழில் ரீதியாக உயர்வுகளும் ஏற்படும். பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் மட்டுமின்றி பெண்களுக்கு மிக முக்கிய கிரகமாக விளங்கக் கூடிய செவ்வாயும் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கைத் துணையால் நல்ல மேன்மைகள் உண்டாகிறது. சுக்கிர ஓரையில் திருமணம் சம்பந்தப்பட்ட சுபகாரியங்களை மேற்கொள்வதும் நல்லது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
 
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholoar -0091 72001 63001

Sunday, January 22, 2012

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மணவாழ்க்கை


மகிழ்ச்சியான மணவாழ்க்கைதான் ஒவ்வொரு மனிதரின் குடும்ப வாழ்க்கைக்கும் ஆணி வேராக இருக்கும்.  வாழ்ந்தால் அவர்களைப் போல வாழ வேண்டும் என மற்றவர் உதாரணம் கூறுவதற்கேற்ப வாழ்ந்து காட்ட வேண்டும். குறை நிறை இல்லாத குடும்பங்களே இல்லை. வீட்டுக்கு வீடு வாசற்படிதான். என்றாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுடன் இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்வதன் மூலமே மகிழ்ச்சி என்பது அந்த குடும்பத்தில் குடியேறும். வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பது குறிக்கோளாக கொள்ள வேண்டும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடித்தளமே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதுதான். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், அனுசரித்துச் செல்லும் குணமும் இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காலையில் காபி போட்டுத்தர நேரமாகி விட்ட காரணத்தால் விவாகரத்து கோரும் இக்காலத்தில், மன மெர்த வாழ்க்கை அமைவதற்கு ஜெனன ஜாதகத்தில் கிரகங்களின் ஆதிக்கங்கள் பலமாக இருந்தல் அவசியம்
.
ஒருவருக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய 7ம் பாவமும், களத்திர காரகன் சுக்கிரனும் பலமாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடியவை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபசேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் ஆகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவை பாவகிரகங்களாகும். மணவாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு 7ம் அதிபதி சுபரமாக இருப்பதும், 7ம் வீட்டில் சுபகிரகம் இருப்பதும் நல்லது. 7ம் அதிபதி பாவியாக இருக்கும் பட்சத்தில் சுபர் நட்சத்திரத்தில் அமைவதும், சுபர் பார்வையுடனிருப்பதும், சொந்த வீட்டில் அமைவதும் கெடுதியில்லை. பொதுவாக 7ம் அதிபதியும் களத்திர காரகனான சுக்கிரன் கிரக சேர்க்கையின்றி தனித்து அமையப்பெற்று, சுபர் நட்சத்திரத்தில் சுபர் பார்வையுடனிருப்பது நல்லது.

7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர  ஸ்தானமான  1,4,7,10 ல் அமைந்தோ, திரிகோண ஸ்தானம்  என கூறக்கூடிய 1,5,9 லோ அமையப் பெறுவது சிறப்பு. பொதுவாக, எந்தவொரு ஸ்தானத்திற்கும் சுபகிரக பார்வை இருப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக, குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். குரு பகவான் தான் இருக்கும் இடங்களிலிருந்து 5,7,9 ஆகிய ஸ்தானத்திற்கு கிடைக்கப் பெற்றால் அதில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் அதன் கெடுதிகள் அனைத்தும் விலகி நற்பலன்கள் உண்டாகும். இவ்வளவு மகத்துவங்களை பெற்ற குருவின் பார்வை ஜென்ம லக்னத்திற்கு, 7ம் வீட்டிற்கோ, 7ம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ அமையுமானால் மணவாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும், 7ம் அதிபதியும் சுக்கிரனும், பெண்களுக்கூரிய செவ்வாயும் கிரக சேர்க்கையின்றி இருப்பது நல்லது. 7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் நல்லது என்ற காரணத்தால்தான் பொதுவாக மக்கள் 7ம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பேச்சவாக்கில் கேட்பார்கள். திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய  2,4,8,12 ல் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப்பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
 Astrologer Murugubalamurugan Astro Ph.D research scholar -0091 72001 63001