Thursday, January 1, 2026

புத்தாண்டு பலன்கள் - 2026 - மேஷ ராசி

ஒம்சரவணபவா

புத்தாண்டு பலன்கள் - 2026 - மேஷ ராசி

 

 கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்

ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி செவ்வாய் என்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய நபராக இருப்பீர்கள். வரும் 2026-ம் ஆண்டில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரையச் சனி நடப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்க வேண்டும். எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வது மிகவும் நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதும் மிகவும் சிறப்பு. முடிந்தவரை தேவையற்ற தூரப் பயணங்களை தள்ளி வைப்பது மிகவும் நல்லது. மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திலும் சற்று அக்கறை செலுத்த வேண்டும். எந்த ஒரு உடல் பாதிப்பு என்றாலும் அதை ஆரம்ப கட்டத்திலேயே பார்க்கின்ற பொழுது தேவையற்ற வீண் மருத்துவ செலவுகளை குறைப்பதற்கு வழிவகுக்கும். வீட்டில் வயதில் மூத்தவர்கள் இருந்தால் அவர்கள் மூலமாக எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்த வரை நீங்கள் மருத்துவ காப்பீடுகள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் மன தைரியத்தோடு செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளித்து ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். ஒரு சில காரியங்களில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மற்றவர்கள் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படக்கூடிய காலமாகும்.

வரும் ஆண்டில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலும், கேது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலும் இந்த ஆண்டு முழுவதும் குறிப்பாக 05-12-2026 முடிய சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். ராகு 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத சில அனுகூலங்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் நல்லது.

கணவன்- மனைவி இடையே ஒற்றுமையானது மிகச் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உறுதுணையால் ஒரு சில இக்கட்டான நிலையினை தாண்டி வரக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. பூர்வீக சொத்து வகையில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படலாம் என்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அவர்களை கையாளுகின்ற பொழுது சற்று பக்குவமாக கையாள்வது மிகவும் நல்லது.

உங்கள் ராசிக்கு 9, 12-ம் அதிபதியும் ஆண்டு கோளான குரு பகவான் இந்த ஆண்டில் வரும் 02-06-2026 முடிய உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு இருப்பது மிக மிக நல்லது. 3-ம் வீட்டில் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 7-ம் வீட்டை பார்ப்பார் என்பதால் ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவால் ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

வரும் 2-6-2026 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் பிற்பாதியில் நெருக்கடிகள் சற்று குறைந்து படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை அனுபவிப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்து வகையில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குறிப்பாக வண்டி, வாகனங்கள் மூலமாக எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் ஒரு சில இடையூறுகள் ஏற்படும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது.

ஜூன் முதல் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்க கூடிய குரு 31.10.2026 முதல் அதிசாரமாக 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய அணுகூலங்கள், தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், உத்தியோகத்தில் வளர்ச்சி, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கக்கூடிய அமைப்புகள் அசைவு, அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடப்பதால் உங்கள் பெயரில் கடன் வாங்குவதை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது. அப்படி கடன் வாங்கக் கூடிய இக்கட்டான சூழ்நிலை இருந்தால் அதனை உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது தற்போதைக்கு சிறப்பு. தொழில் வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்க முடியும். பெரிய வாய்ப்பு எதிர்பார்க்காமல் கிடைக்கக்கூடிய சிறிய வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரிப்பதன் மூலமாக தேவையற்ற சட்ட சிக்கல்களை தவிர்க்க உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கண்ணும் கருத்துமாக இருந்தால் எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்பை தவறவிடாமல், இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஒரு சில நேரங்களில் நீங்கள் தன்னிலை மறந்து உணர்ச்சிவசப்படக் கூடிய நேரம் என்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு முடிந்தவரை பொறுமையை கடைப்பிடிப்பது மிக மிக நல்லது. நெருக்கடியான நேரம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு வீண் பிரச்சினைகளை தவிர்த்தால் மட்டுமே போட்டிகள் நிறைந்த உலகில் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகளும், வரும் நாட்களில் உங்களது குல தெய்வ வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக எதிர்மறை சக்தியில் இருந்து விடுபட்டு ஏற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களால் உடல் நிலையில் சோர்வு ஏற்படும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக பணவரவுகளில் முன்னேற்றம் இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நல்லது நடக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்

பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் சிறு தடைகளுக்குப் பின் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக கிடைக்கும். பணியில் வீண் அலைச்சல், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என்றாலும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகி ஏற்றம் அடைவீர்கள்.

அரசியல்

பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். பெரியோர்களின் ஆசியால் ஒரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு.

கலைஞர்கள்

பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்களால் மன அமைதி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உடன் இருப்பவர்களிடம் பேச்சில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் உதவியால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நெருங்கியவர்களின் உதவியால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக அமையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை ஏற்படும் நேரம் என்பதால் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் வீண் வாக்கு வாதங்களை குறைத்து கொண்டு படிப்பில் கவனமாக செயல்பட்டால் நற்பெயரை பெறுவீர்கள்.

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 12-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது, நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை, கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.

குரு பகவான் இந்தாண்டு 3, 4-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

கேது 5-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,            நிறம் - ஆழ்சிவப்பு                       கிழமை - செவ்வாய்

கல் - பவளம்           திசை - தெற்கு                   தெய்வம் - முருகன்


No comments: