புத்தாண்டு பலன்கள் - 2026 - கும்ப ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
கும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம்
பாதங்கள்
நவகிரகங்களில் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களுக்கு இக்கட்டான
நிலையில் உதவி செய்யக்கூடிய நல்ல பண்பு கொண்டவராகவும், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு
செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட நபராகவும் இயற்கையிலேயே இருப்பீர்கள். வரும் 2026-ம் ஆண்டில்
சர்ப கிரகமான ராகு பகவான் ஜென்ம ராசியிலும், கேது பகவான் 7-ம் வீட்டிலும்
5-12-2026 முடிய சஞ்சாரம் செய்வதாலும், ராசியாதிபதி சனி பகவான் 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனியில்
பாதச்சனி நடைபெறுவதாலும் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய
நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். நீங்கள் வெளிப்படையாக பேசினாலும் அதனை மற்றவர்கள்
தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது.
உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல்
பொறுமையோடு சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள்
உண்டு.
உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து
செல்வது மிகவும் சிறப்பு. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில்
தேவையில்லாத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உங்களது ஆரோக்கியத்திலும்,
மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் ஆகும்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சின்ன பாதிப்பு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக
எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. தேவையற்ற வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்
என்பதால் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது கூட தற்போதைக்கு நல்லது. உற்றார் உறவினிடம்
தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் பேசுகின்ற பொழுது பொறுமையோடு
இருக்க வேண்டும்.
பொதுவாக ஏழரைச்சனி நடக்கின்ற காலங்களில் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படக்கூடிய
அமைப்பு இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு இருப்பதும், அதிக முதலீடுகள்
கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பதும் மிகவும் நல்லது, அப்படி ஏதாவது முதலீடுகள்
செய்ய வேண்டும் என்றால் அதற்காக கடன் வாங்காமல் இருப்பது மிகவும் நல்லது. இக்கட்டான
நிலையில் கடன் வாங்கக்கூடிய நெருக்கடி இருந்தால் அதனை உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப
உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது மிகவும் நல்லது. முடிந்தவரை தேவையில்லாத பயணங்களை
தள்ளி வைப்பது மிகவும் சிறப்பு. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்களுக்கு கிடைக்கக்கூடிய
வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
பொதுவாக கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. வேலையாட்கள் உடைய ஒத்துழைப்பானது
சிறப்பாக இருக்காது என்பதால் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் ஒரு
சில வளமான பலன்களை அடையலாம்.
சனி, ராகு, கேது சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் தன காரகன், பொன்னவன் என போற்றப்படக்கூடிய
குருபகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ம் வீட்டில் ஆண்டு தொடக்கம் முதல்
02-06-2026 சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத பணம் வரவுகளைப்
பெற்று உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற
முடியும். ஆண்டின் முற்பாதியில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.
தொழில் வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய
வாய்ப்புகள் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து
வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள்
கிடைக்கும். கடினமான காரியத்தை கூட உங்கள் தனித் திறமையால் சரியான முறையில் கையாண்டு
அடைய வேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல்
பணியில் நல்ல பெயர் எடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஆண்டின் முற்பாதியில் உண்டு. ஒரு சிலருக்கு
பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்லக் கூடிய அமைப்புகள், மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு
வேறு ஏதாவது இடத்தில் தங்கி வேலை செய்யக் கூடிய ஒரு அமைப்பெல்லாம் உண்டாகும். குடும்பத்தில்
மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. ஒரு சிலருக்கு பிள்ளைகள்
வழியில் இருந்து வந்த மனக் கவலைகள் எல்லாம் ஆண்டின் முற்பாதியின் குறையக் கூடிய ஒரு
வாய்ப்புகள் உண்டு.
வரும் 2-6-2026 முதல் குருபகவான் 6-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற
அமைப்பு என்பதால் குரு மாறுதலுக்கு பிறகு பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது,
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தொழில் வியாபாரத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது
மிகவும் நல்லது. ஜூன் மாதத்திற்கு பிறகு தொழில் ரீதியாக ஒரு இக்கட்டான நிலை இருக்கும்
என்பதால் சூழ்நிலை புரிந்து கொண்டு பக்குவத்தோடு நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை
தவிர்க்க முடியும். அதுபோல உத்தியோகத்தில் இருப்பவர்களும் மேலதிகாரிகள் மற்றும் உடன்
இருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான
முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது.
ஜூன் மாதத்திற்கு பிறகு 6-ல் சஞ்சரிக்க கூடிய குருபகவான் அதிசாரமாக
31-10-2026 முதல் 7-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால்
நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள்
உங்களுக்கு உண்டு. எதிர்பாராத பண வரவுகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள், குடும்பத்தில்
மகிழ்ச்சி, தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், உத்தியோக ரீதியாக ஒரு வளமான பலன்கள்
கிடைக்கக்கூடிய யோகமானது உண்டு.
வரும் 2026-ம் ஆண்டில் சனி, ராகு சாதகமற்று இருப்பதால் உடன் இருப்பவர்கள் சொல்லக்கூடிய
ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழக்காமல் இருப்பதும், அதுபோல அதிகம்
முதலீடுகள் கொண்ட செயல்களை முடிந்தவரை தள்ளி வைப்பதும் மிகவும் நல்லது. ஜூன் முதல்
அக்டோபர் வரை உள்ள காலங்களில் குருவின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் அந்த நேரத்தில்
பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் வரும் 2026-ம் ஆண்டில் எதையும் எதிர்கொண்டு
ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க
இடையூறு ஏற்படும். சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும்
திறன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
பயணங்களால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் உங்கள் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும்.
குடும்பத்தில் தேவையற்ற வழியில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாகத் தான்
இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு
ஜுன் மாதத்திற்கு முன்பு நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக்
கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா
சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.
உத்தியோகம்
பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு
நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும்
சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு ஜுன் மாதத்திற்கு முன்பு எதிர்பார்த்த
வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல முன்னேற்றம்
ஏற்படும். மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
தொழில், வியாபாரம்
உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் ஜுன் மாதத்திற்கு முன்பு கிடைத்து
மன மகிழ்ச்சி ஏற்படும். எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி
விடக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எடுத்த
ஆடர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால்
அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து
செல்வது மிகவும் நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்காது என்பதால்
கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து
செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை
வசூலிப்பதில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும்
தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும்.
அரசியல்
மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது
இருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டி இருந்தாலும்
சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும்.
அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
கலைஞர்கள்
எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலையும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளையும்
சந்திக்க நேரிடும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் வளமான பலனை பெற முடியும்.
தூர பயணங்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் படபிடிப்புகளில்
கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு
தேவை.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறை பாடுபட வேண்டி இருக்கும். புழு, பூச்சிகளின்
தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.
பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வாய்க்கால் வரப்பு
பிரச்சினைகளால் பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை மற்றவர்கள்
விஷயத்தில் தலையிடாது இருப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன்
செயல்பட முடியும். ஜுன் மாதத்திற்கு முன்பு பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து குடும்பத்தில்
மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
குறையும். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது
மிகவும் நல்லது.
மாணவ- மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டால்
வெற்றி பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி
அளிக்கும்.
பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 2-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும்
சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு மலர்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம்.
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும்
பெருமாள் கோவில்களுக்கு செல்வது, முடிந்தால் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம்
செய்வது நல்லது.
உங்கள் ராசிக்கு வரும் 02.06.2026 முதல் குரு 6-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை
தோறும் குரு பகவானுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால்
அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது,
மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.
ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால்
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால்
அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும்.
மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும
அபிஷேகம் செய்வது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி
பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு
எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8 கிழமை - வெள்ளி, சனி திசை - மேற்கு
No comments:
Post a Comment