புத்தாண்டு பலன்கள் - 2026 - துலாம் ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
துலாம் சித்திரை3,4, சுவாதி,
விசாகம்1,2,3ம் பாதங்கள்
நவகிரகங்களில் சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும்
ஆடம்பரத்துடன் செயல்படக்கூடிய சுபாவம் கொண்டவராகவும், மற்றவர்களை எளிதில் எடை போடுவதில்
வல்லவராகவும் விளங்கக்கூடிய உங்களுக்கு ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனி
பகவான் வரும் 2026-ம் ஆண்டில் ருணரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், லாப
ஸ்தானமான 11-ம் வீட்டில் கேது பகவான் 05-12-2026 முடிய சஞ்சாரம் செய்வதும் ஆண்டு கோள்,
தனக்காரகன் என வர்ணிக்க கூடிய குரு பகவானும் உங்கள் ராசிக்கு முதல் ஐந்து மாத காலங்கள்
பாக்கிய ஸ்தனமான 9-ல் சஞ்சாரம் செய்வதும் மிகவும் சிறப்பான அமைப்பாகும். உங்கள் வாழ்வில்
மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள்.
பணவரவுகள் மிக மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம்
முடிவுக்கு வந்து குறிப்பாக தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மன நிம்மதி அடைவீர்கள்.
நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும். இருக்கக்கூடிய
இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் உங்களைத் தேடி
வரும். உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
மற்றவர்களால் முடிக்க முடியாத பணியை கூட நீங்கள் சுலபமாக செய்து முடிப்பீர்கள். கடந்த
காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த வீண் விரயங்கள் எல்லாம் தற்போது குறைந்து சேமிக்க
கூடிய அளவிற்கு ஒரு சாதகமான சூழ்நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு
செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய
அதிர்ஷ்டமானது இருக்கிறது. வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடைய முடியும்.
ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய
பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
வரும் 2026-ம் ஆண்டில் தொழில் வியாபாரத்தில் மிகச் சிறப்பான பலனை அடையக்கூடிய
வாய்ப்புகள் உண்டு. தொழில் நிமித்தமாக உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள்
எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக
இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு.
தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகளும், தொழில் நிமித்தமாக
நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது குறைத்துக் கொள்ளக் கூடிய ஒரு அதிர்ஷ்டமும் உங்களுக்கு
உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெற்று தொழிலை
அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல்
எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். அதிகாரியுடைய ஒத்துழைப்பு
சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். கடந்த காலங்களில் நீங்கள்
பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறந்து உங்களுக்கு இருந்து வந்த நிலுவைத்
தொகைகள் எல்லாம் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படுவது மட்டுமில்லாமல் குடும்பத்தில்
மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பணி நிமித்தமாக நீங்கள் எதிர்பார்த்த
பதவி உயர்வுகளை வரும் நாட்களில் பெற முடியும். உடன் வேலை செய்பவர்களால் இருந்து வந்த
இடையூறுகள் எல்லாம் தற்போது விலகுவதால் மன நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக புதிய
வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் ஒரு கௌரவமான இடத்தில் இருந்து அழைப்பு
வரக்கூடிய யோகமானது இருக்கிறது. உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு பகவான் பஞ்சம ஸ்தானமான
5-ம் வீட்டில் 5-12-2026 முடிய அதாவது இந்த ஆண்டு முழுவதும் 5-ம் வீட்டில் சஞ்சாரம்
செய்வதால் பிள்ளைகள் வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் உறவினரிடம்
தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகலாம். ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய
ஸ்தனமான 9-ம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பான பலனை
தரக்கூடிய ஒரு அமைப்பு என்றாலும் 02-06-2026-க்கு பிறகு 10--ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய
இருப்பதால் சின்ன சின்ன நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் சனி பகவான் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால்
எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பலம் உங்களுக்கு இருக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு
பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக்
கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே
ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். இக்கட்டான நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடைய
ஆதரவானது மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பெற்றோர்களுடைய
ஆசிர்வாதம் சிறப்பாக இருப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில
ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை சுலபமாக
நிறைவேற்றி நல்ல பெயர் எடுக்க முடியும். ஒரு சிலருக்கு உல்லாச பயணங்கள் செல்லக்கூடிய
வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு.
ஜூன் மாதத்திற்கு பிறகு 10-ல் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் 31.10.2026 முதல்
அதிசாரமாக உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நவம்பர், டிசம்பர்
மாதங்களில் உங்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உங்களின் பொருளாதார நிலை
மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் மிகவும் சாதகமான பலன்களை அடைய முடியும்.
உத்தியோகத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய
யோகம் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வரும்
2026-ம் ஆண்டில் எதிலும் துணிச்சலோடு செயல்பட்டு மிகவும் ஏற்ற மிகுந்த பலன்களை பெறக்கூடிய
அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட
முடியும். எடுக்கும் எல்லா காரியங்களில் வெற்றி கிடைப்பதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும்
உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில்
உள்ளவர்களும் உடல் நலத்துடன் இருப்பதால் நிம்மதி ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கும் ஜுன் மாதத்திற்கு முன்பு நல்ல வரன்கள் தேடி வரும்.
சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின்
தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதிநவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக
பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
உத்தியோகம்
பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின்
ஆதரவுகளால் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு
தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து
கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும்.
தொழில், வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில்
வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின்
ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை
ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.
பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள்
தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நல்ல லாபமும் சகல விதத்திலும் ஏற்றம் மிகுந்த
பலன்களையும் அடைவீர்கள். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.
அரசியல்
உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை
காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்
பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடுவதால் சற்றே அலைச்சல்
உண்டாகும். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க
முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் கிடைத்து சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழ முடியும். எதிர்பாராத
வெளியூர் பயணங்களால் பொருளாதார மேன்மைகள் ஏற்படும்.
உங்கள் திறமைகளை வெளிபடுத்தி பரிசுகளை வெல்லும் வாய்ப்பு ஏற்படும். அரசு வழியில் நீங்கள்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் அளவிற்கு
உங்களிள் பொருளாராத நிலை சிறப்பாக இருக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால்
உழைப்பிற்கு ஏற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். இந்தாண்டு முற்பாதியில் மகிழ்ச்சிதரும் சுப
காரியங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைந்து
சிறப்பான பலன்களை அடைவீர்கள். கால்நடைகளால் லாபம் கிட்டும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும்.
பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள்.
இந்தாண்டு ஜுன் மாதத்திற்கு முன்பு திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியம்
அமையும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி
உயர்வுகள் கிட்டும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு
வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க கூடிய வாய்ப்பு ஏற்படும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால்
மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை
உண்டாக்கும்.
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ஆம் வீட்டில்
02.06.2026 முதல் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி
கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால்
அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை
எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை,
எளியவர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது,
மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
ஜென்ம ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும்
கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை
செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8 நிறம்
- வெள்ளை, பச்சை கிழமை - வெள்ளி, புதன்
No comments:
Post a Comment