Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - மேஷ ராசி

 ஒம்சரவணபவா

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - மேஷ ராசி

 

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி செவ்வாய் ஆவார். எதிலும் தைரியத்தோடும் துணிச்சலோடும் செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9, 12-ம் அதிபதியான குரு பகவான் இது நாள் வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரித்தார். தற்போது ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சி மூலமாக குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) சுக ஸ்தானமான 4-ல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு பணவரவுகள் சாதகமாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து படிப்படியான முன்னேற்றத்தையும் மன அமைதியும் அடைவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு இருந்து வந்த இடையூறுகள் விலகுவதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட முடியும்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரையச்சனி நடக்கிறது. சனி 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது உத்தமம். எதிலாவது ஒரு விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டிய நிலை இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது மிக மிக நல்லது. பொதுவாக ஏழரைச்சனி நடைபெற்றால் தேவையற்ற வகையில் வீண் விரயங்கள், கடன்கள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் ஒரு சில வளமான பலன்களை அடைய முடியும். ஒரு சில நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்த்து ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது அதனை உங்கள் பெயரில் செய்யாமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் செய்வது மிகவும் நல்லது.

4-ல் குரு சஞ்சாரம் செய்வதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற இடையூறுகள் தற்போது விலகி எதிலும் சற்று தெம்போடு செயல்பட முடியும். எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும்.

4-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசிக்கு 8, 10, 12-ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் வரும் நாட்களில் உங்களது ஆரோக்கியமானது மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த மருத்துவ செலவு குறையும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்ட முடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. 4-ல் குரு சஞ்சரித்தாலும், சர்ப கிரகமான ராகு பகவான் வரும் 05-12-2026 முடிய லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் கடந்த காலங்களை ஒப்பிடுகின்ற பொழுது வருகின்ற நாட்களில் படிப்படியான முன்னேற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எல்லா விஷயத்திலும் பிறருடைய உதவியை எதிர்பார்க்காமல் சில காரியங்களை நீங்களே நேரடியாக செயல்படுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய வாய்ப்பு எதிர்பார்க்காமல் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சற்று சுமாராக தான் இருக்கும். அதைப்பற்றி கவலைப்படாமல் உங்களுடைய தொழிலில் நீங்கள் சற்று கவனத்தோடு இருந்தால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக மறைந்து நிம்மதியான நிலை உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். அரசாங்க மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. தொழில் ரீதியாக கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அவர்கள் மூலமாக ஒரு சில ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வீடுகளை பராமரிப்பதற்காக சுபச் செலவுகள் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி அதிலும் குறிப்பாக வேலைபளு சற்று குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உடன் வேலை செய்பவர்கள் உங்களுடைய வேலையை பகிர்ந்து கொள்வதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கவில்லை என்று ஏங்கியவர்களுக்கு தற்போது அதற்கான சன்மானம் கிடைத்து உங்களின் கடன் பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது, உங்களுடைய பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிக மிகச் சிறப்பாக இருக்கும். இக்கட்டான நேரத்தில் நெருங்கிய உறவினர்களின் உதவியானது தக்க நேரத்தில் கிடைப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். கடந்த காலங்களில் உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது மறைந்து ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 5-ல் 5-12-2026 முடிய கேது பகவான் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனியில் விரையச் சனி நடப்பதால் எந்த ஒரு செயலிலும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்த்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரிப்பதன் மூலமாக தேவையில்லாத சட்ட சிக்கல்களை தவிர்த்து நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு தற்போது பாதிப்புகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்களுக்கு இருந்த அலைச்சல் டென்ஷன்கள் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் நல்லது நடக்கும். புத்திரர்களால் சிறுசிறு மனக்கவலைகள் ஏற்படும். அசையா சொத்துக்களால் சுப செலவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்கலாம்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறைகளில் இருப்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு உள்ள கடந்த கால நெருக்கடிகள் குறைந்து ஒரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சுமாரான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து விடும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் வரும் நாட்களில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் ஓரளவுக்கு உயர்வினை உண்டாக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை விரிவு செய்யும் நோக்கம் சிறு தடைக்கு பின்பு நிறைவேறும். தொழில் போட்டி காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளில் இடையூறுகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சிந்தித்து செயல்பட்டால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகம்

பணியில் இதுவரை இருந்த கெடுபிடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாடகளாக எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும் நாட்களில் கிடைக்கும். சில நேரங்களில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் உயரதிகாரிகளின் ஏச்சிக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்புடன் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பினை சரியாகி பயன்படுத்தி கொண்டால் உயர்வான நிலையை அடைய முடியும்.

அரசியல்

உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நல்ல நிலையை அடைவீர்கள். மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறக்கூடிய வாய்ப்புக்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் பழகுவது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருந்து நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மறைமுக வருவாய் விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

விவசாயிகள்

விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிட முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பங்காளிகளிடையே ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் விரைவில் உங்களுக்கு சாதகமான நல்ல தீர்ப்பு கிடைத்து நிம்மதி ஏற்படும். எதிலும் முனைப்புடன் செயல்பட்டால் வரும் நாட்களில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். கால்நடைகளால் ஓரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொண்டால் விரைவில் சிறப்பான நிலையை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தாமதப்படும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பத்திரிக்கை நண்பர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவதும், தேவையற்ற கிசு கிசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் நல்லது.

பெண்கள் 

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடந்த கால கடன்கள் வரும் நாட்களில் குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையா சொத்துகளால் சுபசெலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் வேலையில் நிம்மதியான நிலை இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட கூடும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவார்கள். மேற்படிப்புகாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபட்டு ஓரளவுக்கு வெற்றியினை பெறுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

 

குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில்  31-10-2026 முதல் 13-12-2026 வரை

குரு பகவான் அதிசாரமாக 5-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வழியில் இருந்த வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நவீன பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் சாதகப்பலன் கிட்டும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சனி 12-ல் சஞ்சரிப்பதால் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சிக்கனதாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

குரு பகவான் வக்ர கதியில்  13-12-2026 முதல் 13-04-2027 வரை

குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பான நிலையில் இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. ஏழரைச்சனி நடைபெறுவதாலும் 4-ல் கேது சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வேலைபளு சற்று கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் பழிச் சொற்கள் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.

ஏழரைச் சனியில் விரய நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, உடல் ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது. சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

உங்கள் ராசிக்கு கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,                 நிறம் - ஆழ்சிவப்பு                               கிழமை - செவ்வாய்

கல் - பவளம்               திசை - தெற்கு                          தெய்வம்முருகன்

No comments: