Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - கும்ப ராசி

 ஒம்சரவணபவா

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - கும்ப ராசி

 

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

நவகிரகங்களில் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையிலே எதிலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய நபராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குரு பகவான் இது நாள் வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரித்து வந்தார். தற்போது ஏற்படக்கூடிய பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானம் என வர்ணிக்க படக்கூடிய 6-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடி ஏற்படும். உங்கள் ராசியாதிபதி சனியும் ஜென்ம ராசிக்கு 2-ல் அமைய பெற்று ஏழரைச்சனியில் பாதச்சனி உங்களுக்கு நடக்கிறது. பேச்சில் சற்று பொறுமையோடு இருக்க வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையானது உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

உங்களது ஆரோக்கியத்திலும் மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் உறவினரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். முடிந்தவரை பிறரிடம் பேசுவதை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. பொதுவாக ஏழரைச்சனி நடக்கின்ற காலங்களில் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு அதன் மூலமாக கடன் வாங்கக் கூடிய ஒரு சூழ்நிலை கூட உண்டாகலாம். அதனால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஒரு சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை சமாளித்து ஏற்றங்களை அடைய முடியும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.

அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்ப்பது மிக மிக நல்லது. அவசர தேவைக்காக முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒரு நிலை இருந்தால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் உங்கள் மனைவி பெயரிலோ அல்லது பிள்ளைகள் பெயரிலோ செய்வது மிக மிக நல்லது. சர்ப கிரகமான ராகு உங்கள் ராசியிலும், கேது 7-ம் வீட்டிலும் வருகின்ற 05-12-2026 முடிய சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது மிக மிக நல்லது.

தொழில் வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத தடங்கல்கள் ஏற்படும். நீங்கள் கவனமாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல லாபங்கள் கூட தடைப்படும். தொழில் ரீதியாக சில சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரிப்பது மிக மிக நல்லது. வேலையாட்களை அவ்வளவு எளிதில் நம்பாமல் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கண்காணித்து செயல்பட்டால் தான் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். மறைமுக எதிர்ப்புகள் காரணமாக மன அமைதி குறையும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களில் பிறரிடம் பேசுகின்ற பொழுது சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக கையாளாமல் நம்பிக்கைக்கு உரிய நபர்கள் மூலமாக ஒரு விஷயத்தை கையாண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஒரு சில இடங்களில் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால்தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். தொழில், வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையும் அதன் மூலமாக வீண் விரயங்களை சந்திக்க கூடிய ஒரு அமைப்பும் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் சில விஷயங்களை அவர்களை கலந்தாலோசித்து செயல்பட்டால் ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பூர்வீக சொத்து வகையில் உறவினரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். வீடு, வாகனங்களை பராமரிப்பதற்காக எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் ஆகும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வரும் நாட்களில் கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக் கூடிய ஒரு சூழ்நிலையும் மற்றவருடைய பணியை நீங்கள் இணைத்து செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலையும் உண்டாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் மேல் அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு செயல்படுவது மிக மிக நல்லது. உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரம் என்பதால் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் ஆகும். உத்தியோக தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. பிறர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்து விட வேண்டாம். இருக்கும்வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது தான் தற்போதைக்கு சிறப்பு. புதிதாக வேலை தேடுபவர்கள் குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய திறமையை வெளிக்காட்டிக் கொள்வதும், உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கு சில முயற்சிகள் எடுப்பதும் தற்போதைக்கு சிறப்பு, வேலைக்கு செல்பவர்கள் பகுதி நேரமாக உங்கள் தகுதியை வளர்த்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது.

தற்போதைக்கு 1,7-ல் சஞ்சரிக்க கூடிய ராகு- கேது வரும் 5-12-2026-க்கு பிறகு 6-ல் கேது, 12--ல் ராகு என சஞ்சரிக்கின்ற பொழுது குடும்பத்தில் நிலவக்கூடிய பிரச்சினைகள் சற்று குறையக் கூடிய அமைப்புகள், குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மேலோங்க கூடிய அமைப்புகள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வரும் நாட்களில் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் சற்று பக்குவமாக நடந்து கொள்வது மிகவும் நல்லது. உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 6-ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் வரும் நாட்களில் சற்று பொறுமையோடு இருப்பது, குறிப்பாக எதிலும் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பது மிகவும் நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய நேரமாகும். நேரத்திற்கு உணவு உட்கொள்வது மூலம் வயிறு கோளாறுகளை தவிர்க்க முடியும். மனைவி பிள்ளைகள் மூலம் வீண் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் வம்பு பிரச்சினைகள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். அலைச்சல் காரணமாக உடல் அசதி இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே அடிக்கடி உண்டாக கூடிய வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடலாம்.

தொழில் வியாபாரம்

தொழிலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் நிலவும். கூட்டாளிகள் ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எவ்வளவு தான் சோதனைகளை சந்தித்தாலும் எதையும் எதிர்கொண்டு லாபங்களை பெறக்கூடிய அளவிற்கு ஆற்றலையும் துணிவையும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

பணியில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். உயரதிகாரிகளின் நெருக்கடி அதிகரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல் நிலை சோர்வடையும். சில நேரங்களில் வீண் பழிச் சொற்களும் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். திறமைகளை வெளிபடுத்த இடையூறுகள் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய உயர்வுகளையும் பிறர் தட்டி செல்வார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொள்ளவும்.

அரசியல்

பணவரவுகளுக்கு தடைகள் நிலவினாலும் பதவிக்கு இடையூறு வராது. உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உத்தமம். கட்சி பணிகளுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக வருவாய்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் எதிலும் அதிக கவனம் தேவை. மக்களின் ஆதரவை பெற அவர்களின் தேவையறிந்து செயல்படுவது மிகவும் உத்தமம். எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. எதிரிகளின் பலம் அதிகரித்து உங்களின் பலம் குறையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. சிறிது லாபத்தைக் காணவே நிறைய பாடுபட வேண்டியிருக்கும். கால் நடைகளாலும் வீண் விரயங்கள் உண்டாகும். அரசு வழியில் சுமாரான உதவியே கிடைக்கும். பூமி, நிலம் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடையே வீண் விரோதம் உண்டாகும். தேவைக்கேற்ற வேலை ஆட்கள் கிடைக்காமல் நடக்க வேண்டிய வேலைகள் தடைப்படும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் தேவையற்ற பிடிவாதங்களை தளர்த்தி கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதே நல்லது. வரவேண்டிய சம்பள பாக்கிகளில் தாமதநிலை ஏற்படுவதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. புத்திரர்களால் சில நேரங்களில் மனசஞ்சலங்கள் உண்டாக கூடும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் மந்த நிலைகள் ஏற்பட கூடும் என்றாலும் விடாமுயற்சியுடன் பாடுபட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். வீணான பொழுது போக்குகள் உங்களின் மனநிலையை மாற்றுவதுடன் வீண் சஞ்சலங்களையும் ஏற்படுத்தும். தகுதி போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் உத்தமம்.

 

குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில்  31-10-2026 முதல் 13-12-2026 வரை

குரு அதிசாரமாக 7-ல் சஞ்சாரம் செய்வதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்து லாபங்களை காண முடியும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். ராகு ஜென்மத்தில், கேது 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளுவும் குறையும். அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறைந்து சுமுகமான நிலை ஏற்படும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில்  13-12-2026 முதல் 13-04-2027 வரை

குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சற்று சிறப்பாக இருந்து எதிலும் திறம்பட செயல்பட முடியும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவுகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். வெளியூர் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் நெருக்கடிகள் குறையும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நீங்கள் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உழைப்பிற்கான ஊதியம் தற்போது கிடைக்கா விட்டாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்

 

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

சனி பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்

வரும் 5.12.2026 முடிய ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது  சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8             கிழமை - வெள்ளி, சனி                             திசை - மேற்கு

கல் - நீலக்கல்            நிறம் - வெள்ளை, நீலம்                    தெய்வம் - ஐயப்பன்

No comments: