Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - மீன ராசி

 ஒம்சரவணபவா

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - மீன ராசி

 

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

குருவின் ராசியில் பிறந்த நீங்கள் எதிலும் திறமைசாலியாகவும் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்யக்கூடிய பண்பு கொண்டவராகவும் இயற்கையிலேயே இருப்பீர்கள். உங்கள் ராசியாதிபதி குருபகவான் இது நாள் வரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ல் சஞ்சரித்து வந்ததால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்தீர்கள். தற்போது ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இதுநாள் வரை உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் விலகி சகல விதத்திலும் ஏற்ற மிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல் டென்ஷன் எல்லாம் விலகி மன நிம்மதி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களின் அன்றாட தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் பிறருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும்.

உங்கள் ராசியாதிபதி குரு பகவான் 5-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 9, 11-ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய சின்ன சின்ன உடல் உபாதைகள் கூட ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல வரன் அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களுடைய ஆதரவானது மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு வரும் நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும், அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள், வம்பு. வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் கடந்த கால தேக்க நிலை விலகி உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைத்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகுவதால் தொழிலில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக உங்கள் முயற்சிகள் வெற்றியை தரும் என்றாலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை வரும் நாட்களில் பைசல் செய்யக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த கால வேலை பளு சற்று குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் வேலை செய்பவர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சுலபமாக செய்து முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வரும் நாட்களில் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரக்கூடிய நேரம் ஆகும்.

குரு பகவான் 5-ல் சஞ்சரிக்கக்கூடிய இந்த நேரத்தில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. இதன் காரணமாக உங்களது ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது மிகவும் நல்லது. உடல் ரீதியாக சிறு பாதிப்பு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை உடனே எடுத்துக் கொண்டால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய தொகையை கையாளுகின்ற பொழுது சற்று யோசித்து செயல்படுவது நல்லது. பொதுவாக ஏழரைச் சனி நடக்கும் காலங்களில் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படலாம் என்பதால் கடன் வாங்குகின்ற விஷயங்களிலும் பிறருக்கு முன் ஜாமீன் போடுகின்ற விஷயங்களிலும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். அவசர தேவைக்காக கடன் வாங்க வேண்டிய நிலை இருந்தால் முடிந்தவரை உங்கள் பெயரில் வாங்காமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயர்களில் வாங்குவது நல்லது. முக்கிய விஷயங்களை பொது வெளியில் பேசாமல் இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும்.

சனி ஒரு நீதி கிரகமாகும் ஒரு காரியத்தை நாம் சட்டத்துக்கு உட்பட்டு செய்தால் எந்தவித சங்கடமும் ஏற்படாது. அதுவே நாம் ஏதாவது சட்டத்துக்கு புறம்பான செயல்கள் செய்தால் ஏழரைச்சனி காலங்களில் தேவையில்லாத நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய ஒரு அனுகூலமற்ற நிலை உண்டாகும் என்பதால் எந்த ஒரு செயல் செய்கின்ற பொழுதும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது. குருவின் சாதக சஞ்சாரத்தால் உங்களின் பொருளாதார நிலை சாதகமாக இருக்கும் என்பதால் வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது, தேவையில்லாத பயணங்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது.

இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 12-ல் ராகு என சர்ப கிரகங்கள் வரும் 5-12-2026 முடிய சஞ்சரிப்பதும் அதன் பின்பு 5-ல் கேது, 11--ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் ஏழரைச் சனி நடைபெற்றாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டவர்களுக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.   குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் சற்று குறையும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து எதிலும் முனைப்புடன் செயல்படுவீர்கள் என்றாலும் தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது சற்று பொறுமையுடன் செல்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் மறைந்து கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் அமையும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி ஒன்று இல்லம் தேடி வந்து சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் வண்டி வாகனங்களை புதுப்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள்

கொடுக்கல்- வாங்கல்   

கமிஷன், காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இருந்த கடுமையான நெருக்கடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமாக செயல்பட்டால் நல்ல லாபத்தை சம்பாதிக்க முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நீண்ட நாட்களாக நடைபெறும் வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு முன்னேற்றத்திற்கு உதவும்.

தொழில் வியாபாரம்

புதிய முயற்சிகள் மூலம் லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறுவீர்கள். புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். கூட்டாளிகள் உங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பினை தருவார்கள். வேலையாட்கள் தகுந்த நேரத்திற்கு கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு பணிசுமையும் அதனால் அலைச்சல் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்து வந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகுவதால் துணிவுடனும் தைரியத்துடனும் செயல்பட முடியும். வெளியூர் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் சாதகமானப் பலனை பெறுவீர்கள்.

உத்தியோகம் 

தங்கள் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுக்கும் செயல்களை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுவதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மேலும் மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் அமையும். வேலைபளு அதிகமாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும்.

அரசியல்

கட்சியில் உங்களுக்கு பெயர் புகழ் உயரும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்களின் பேச்சிற்கும் நீங்கள் கூறும் ஆலோசனைக்கும் அரசியலில் மதிப்பு மரியாதையும் இருக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பினை பெறுவீர்கள். மக்களின் தேவையறிந்து செயல்படுவதால் மக்களின் சிறந்த ஆதரவினை அடைவீர்கள். பத்திரிக்கை உங்களின் நற்செயல்களை பாராட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசு மூலம் உதவிகள் கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றை வாங்கிப் போடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சேமிப்பும் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கூலி ஆட்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் மகிழ்ச்சிகளும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பத்திரிகையாளர்களும் உங்களை பற்றிய நற்செய்திகளை மட்டுமே வெளியிடுவார்கள். உடல் நலத்திற்கு முக்கியதுவம் தருவது நல்லது.

பெண்கள்

திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உற்றார், உறவினர்களால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணியில் இருந்த நெருக்கடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது

மாணவ மாணவியர்

கல்வியில் இருந்த மந்த நிலைகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலனை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். உயர்படிப்பிற்கான வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

 

குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில்  31-10-2026 முதல் 13-12-2026 வரை

குரு அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் கேது சஞ்சாரம் செய்வதாலும் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகி மன நிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. சக ஊழியர்கள் உதவியால் கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்க முடியும்.

குரு பகவான் வக்ர கதியில்  13-12-2026 முதல் 13-04-2027 வரை

குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைக்கவும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு நிம்மதி அளிக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் விரைவில் நல்ல நிலை அடைய முடியும்.

 

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9          கிழமை - வியாழன், ஞாயிறு               திசை - வடகிழக்கு

கல் - புஷ்ப ராகம்   நிறம் - மஞ்சள், சிவப்பு    தெய்வம்தட்சிணாமூர்த்தி

No comments: