Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - சிம்ம ராசி

 ஒம்சரவணபவா

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - சிம்ம ராசி

 

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

நவகிரகங்களில் தலையாய கிரகமான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையிலே எதிலும் திறமையாகவும் பிறரை வழிநடத்துவதில் வல்லவராகவும் விளங்கக்கூடிய நபராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 5, 8-க்கு அதிபதியான குரு பகவான் இது நாள் வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்தார். தற்போது ஏற்படக்கூடிய  பெயர்ச்சியால் குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் மன நிம்மதி குறைவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டு.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனிபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரித்து அஷ்டமச் சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மட்டுமில்லாமல் மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திலும் சற்று அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் ஏற்படக்கூடிய மருத்துவ செலவு காரணமாக உங்களுடைய கையிருப்பு வரும் நாட்களில் குறையலாம். முடிந்தவரை தேவையில்லாத தூரப் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தற்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. வரும் நாட்களில் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் சற்று பொறுமையோடு இருந்தால்தான் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.

குரு பகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு தனது சிறப்பு பார்வையாக 4, 6, 8-ஆகிய ஸ்தானத்தை பார்வை செய்ய இருப்பதால் குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள், வீடு, வாகனங்களை பராமரிப்பதற்காக செலவுகள் செய்யக்கூடிய ஒரு அமைப்பு உண்டாகும். எந்தவித எதிர்ப்புகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ரீதியாக சில பாதிப்புகள் வந்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு உங்களது மனவலிமையானது சிறப்பாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவதன் மூலமாக அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் அனைத்து விஷயத்திலும் அவர்களது உதவியை எதிர்பார்க்காமல் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்க முடியும். தொழில் போட்டி காரணமாக மன நிம்மதி குறைவுகள் ஏற்படும் என்றாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. அப்படி செய்ய வேண்டிய நிலை இருந்தால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக உங்களுக்கு தொழிலில் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்க கூடிய நிலை, எந்திரங்கள் பழுதாவதன் மூலமாக எதிர்பாராத வகையில் வீண் விரயங்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு அனுகூலமற்ற நிலை உண்டாகக்கூடிய நேரம் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தொழில் நிமித்தமாக சில சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் தொழில் ரீதியான கணக்குகளை சரியான முறையில் பராமரிப்பது மிக மிக நல்லது. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொது வெளியில் பேசாமல் இருப்பது உத்தமம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். தற்போது நீங்கள் இருக்கக்கூடிய நிலையே சற்று சாதகமான நிலை தான், பிறர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பிறர் பேசுவதை பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் ஆகும். குடும்பத்தில் திருமண சுப காரிய முயற்சிகளில் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். பிள்ளைகள் வழியில் மனக்கவலை ஏற்படும் என்பதால் அவர்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது மிக மிக நல்லது.

இந்த தருணத்தில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது பகவான் ஜென்ம ராசியிலும், ராகு பகவான் 7-ம் வீட்டிலும் வரும் 05-12-2026 முடிய சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அதிலும் குறிப்பாக ஒரு சில நேரங்களில் உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் பொறுமையோடு இருப்பது மிக மிக நல்லது. டிசம்பர் மாதம் ராகு- கேது பெயர்ச்சி ஏற்பட்டால் அதன் பிறகு ராகு 6-லும், கேது 12-லும் சஞ்சரிக்கின்ற பொழுது கணவன்- மனைவி ஒற்றுமை சற்று சிறப்பாக இருந்து நெருங்கியவரின் உதவியால் ஒரு சில ஆதாயத்தை அடைய கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். தற்போது அஷ்டமச் சனி நடப்பதாலும், விரைய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பது என்றாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தியபடியே இருக்கும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்த நிலை ஏற்படும். மனைவி பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். அதிக வேலைபளுவால் அலைச்சல் உடல் அசதி ஏற்படும். எடுக்கும் காரியங்களில் தடையும் உடனிருப்பவர்களால் தேவையற்ற மனசஞ்சலங்களும் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகள் கூட சில தடைகளுக்கு பின் கிடைக்கும். அசையா சொத்துகளால் எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடன் வாங்க வேண்டியிருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல் 

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை  ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகளை சந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

தொழில் வியாபாரம் 

தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய ஆடர்கள் கைமாறி போகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் ஒரு சில வாய்ப்புகள் வந்தாலும் குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை விரிவு செய்வதில் இடையூறு ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்களும் டென்ஷன்களும் அதிகரிக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் மனோ தைரியத்தால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து வீடுவீர்கள்.

உத்தியோகம்

பணியில் இருப்பவர்கள் மிகவும் வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய காலமாகும். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். இது மட்டுமின்றி பிறர் செய்யும் தவறுகளுக்கும் உங்களை பொறுப்பேற்க செய்வார்கள். வீண் பழிச்சொற்கள் உங்களின் மன நிம்மதியை குறைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலையானது சோர்வடையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள அதிக பாடுபட வேண்டிய இருக்கும். மக்களின் ஆதரவு குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகள் ஏற்படுவதால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற இடையூறு ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். வயல் வேலைகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் தாமத நிலை ஏற்படும். நீர்மட்டம் குறைவு, அதிக காற்று, மண் வளமின்மை போன்றவற்றால் பயிர்கள் பாதிப்படையும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். விளை நிலங்கள் வாங்கும் முயற்சிகளில் இடையூறு ஏற்படும்.

கலைஞர்கள்

தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொண்டால் மட்டுமே காலத்தை நகர்த்த முடியும். பிடிவாதம், முன்கோபம், அதிகார குணம், போன்ற அனைத்தையும் தவிர்த்து சக கலைஞர்களையும் அனுசரித்து நடப்பதே நல்லது. பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. மாதவிடாய் கோளாறு, உடல் சோர்வு ஏற்படும். கணவர் வழி உறவுகளை அனுசரித்து நடந்தால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமையால் மற்றவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் சிலரிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. மனதில் உள்ள குறைகளை கூறுவதென்றால் கூட நம்பிக்கையான நபர்களிடம் கூறுவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் ஆடம்பரத்தை குறைத்து கொள்வது சிறப்பு.

மாணவ- மாணவியர் 

கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. மந்தநிலை, ஈடுபாடுயின்மை, தேவையற்ற பொழுதுபோக்கு மற்றும் நண்பர்களின் சகவாசங்கள் போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை.

 

குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில்  31-10-2026 முதல் 13-12-2026 வரை

குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 7-ல் ராகு, 8-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு செயலிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். இருக்கும் வாய்ப்புகளை தவறாது பயன்படுத்தி கொண்டால் விரைவில் சிறப்பான நிலையை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தூர பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில்  13-12-2026 முதல் 13-04-2027 வரை

குருபகவான் வக்ர கதியில் சஞ்சரித்தாலும், 8-ல் சனி சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகள் வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். பணியில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

 

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

சனி பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம்.

ஜென்ம ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. ஜென்ம ராசியில் கேது  சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                      நிறம் - வெள்ளை, சிவப்பு               கிழமை - ஞாயிறு, திங்கள்

கல்மாணிக்கம்      திசை - கிழக்கு                          தெய்வம் - சிவன்

No comments: