Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - கடக ராசி

 ஒம்சரவணபவா

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - கடக ராசி

 

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

நவகிரகங்களில் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் பேச்சுத் திறன் கொண்டவராகவும் மற்றவர்களை வசீகர படுத்தக் கூடிய அளவிற்கு சிறப்பான உடல் அமைப்பு கொண்டவராகவும் இயற்கையிலேயே இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குரு பகவான் இது நாள் வரை 12-ல் சஞ்சரித்ததால் தேவையற்ற வீண் விரயங்களை எதிர்கொண்டு வந்தீர்கள். தற்போது ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) ஜென்ம ராசியில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். குரு ஜென்மத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும் குரு உங்கள் ராசி அதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகம் என்பதாலும் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் அமையப்பெற்று, ஜென்ம ராசியில் இருக்கக்கூடிய குரு பார்வை சனிக்கு இருப்பது நல்ல அமைப்பாகும். எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொள்வது மிக மிக நல்லது. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலமானது உங்களுக்கு இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு அமைப்பு உண்டு என்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் போன்றவை எல்லாம் தற்போது விலகி நிம்மதி ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து அவர்களிடம் ஒரு ஒற்றுமையான நிலை உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். இக்கட்டான நேரத்தில் நெருங்கியவர்களுடைய உதவி கிடைப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பெற்றோர்கள் மற்றும் பெரிய மனிதர்களுடைய ஆதரவு இருப்பதால் கடந்த கால நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதார நிலையானது மிக மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு வரும் நாட்களில் அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக மனமகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழிலில் கடந்த காலங்களில் ஏற்பட்ட தேவையற்ற வீண் பராமரிப்பு செலவுகள் எல்லாம் தற்போது குறைந்து உங்களது லாபங்கள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிபகவான் 9-ல் சஞ்சரிப்பதால் புதிய யுத்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். தொழில் நிமித்தமாக கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த சட்ட சிக்கல்கள் தற்போது விலகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். தொழில் வியாபார நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் சில அனுகூலங்களை அடையக்கூடிய யோகங்களும் உண்டு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களின் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஒரு சில அனுகூலங்களை எளிதில் அடைய முடியும். ஜென்மத்தில் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு செயல்படுவதும் ஆடம்பர செலவினை சற்று குறைத்துக் கொள்வதும் நல்லது. தொழில் அபிவிருத்தி விஷயங்களில் அனைத்தையும் உங்கள் பெயரில் மட்டும் செய்யாமல் நெருங்கிய உறவினர்கள் பெயரிலோ குறிப்பாக மனைவி, பிள்ளைகள் பெயரில் செய்வது தற்போதைக்கு சிறப்பு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த வேலை பளு எல்லாம் சற்று குறைந்து அனுகூலமான பலன்களை அடைய முடியும். முன்பை விட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் பணிச்சுமை சற்று அதிகப்படியாக இருப்பதால் ஓய்வு நேரம் குறையக் கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனைவி, பிள்ளைகளுடன் இணைந்து வாழக்கூடிய ஒரு அனுகூலமான அமைப்பு உண்டாகும். சக ஊழியர்களால் சில நெருக்கடிகள் தற்போது இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளிக்க கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற பேச்சுகளை தற்போது குறைத்துக் கொண்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது மிக மிக நல்லது. மேலதிகாரிகளுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்த காலங்களில் முடிக்க முடியாமல் இருந்து வந்த பணிகளை கூட வரும் நாட்களில் எளிதில் முடிக்கக்கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். உங்கள் உழைப்புக்கான ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு

சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் தற்போது நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த காலத்தில் உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறைந்து சேமிக்க கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் மனைவி பிள்ளைகளுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் கூட தற்போது விலகி அவர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய யோகமானது தற்போது உள்ளது.

இந்தத் தருணத்தில் சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு- கேது, குறிப்பாக கேது 2-ம் வீட்டிலும் ராகு 8-ம் வீட்டிலும் வரும் 5-12-2026 முடிய சஞ்சரிப்பதும், அடுத்து ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு என சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் கணவன்- மனைவி இடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வெளியூர் மூலமாக அனுகூலங்கள் இருக்கும் என்றாலும் பயணங்களில் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் சிறப்பு.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வயிறு கோளாறு, இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்கள், தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மன¬விக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். இயற்கை உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குல தெய்வ வழிபாடுகளை செய்வது குடும்பத்திற்கு நற்பலனை உண்டாக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் செயல்களால் சுபகாரிய முயற்சிகளுக்கு இடையூறு உண்டாகும். பெரியவர்களிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய காலம் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். உங்களுக்கு இருந்து வரும் வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டி செல்வார்கள். சில நேரங்களில் உடனிருப்பவர்களே சதி செய்வார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்கு பின்பே கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது.

உத்தியோகம்

உத்தியோஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள் என்றாலும் பணியில் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும். உடல் சோர்வு மந்தமான நிலை போன்றவற்றால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். செய்த வேலையையே திருப்பி திருப்பி செய்ய வேண்டியிருக்கும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.

அரசியல்

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய காலமாகும். மறைமுக எதிர்ப்புகளை உங்களது தேவையற்ற பேச்சுக்களால் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். கட்சி பணிகளுக்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருக்கவும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

விவசாயிகள்

போதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விளைச்சலை நல்லவிதமாக எதிர்பார்க்க முடியாது. பயிர்களை இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் அரசு வழியில் சில மானியத் தொகைகளைப் பெற முடியும். விளை பொருளுக்கேற்ற விலையை பெற முடியாமல் போவதால் லாபம் குறையும். புதிய பூமி மனை போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் நல்லது நடக்கும்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்றாலும் எதிலும் ஒழுங்காக செயல்பட முடியாத நிலை உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். உடல் நிலையில் சோர்வு உண்டாவதால் படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். உங்களது வாய்ப்புகளை பிறர் தட்டி செல்வார்கள். வரவேண்டிய சம்பள பாக்கிகள் சற்று தாமதம் ஆனாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் 

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்ளவும். வயிறு கோளாறு, கர்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சிக்கனமாக செயல்பட்டு எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வீடு மனை வாங்கும் எண்ணங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சில அலைச்சல்களை சந்திப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி இலக்கை தொடுவீர்கள். படிப்பில் திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். உடன் பழகும் நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள்.

 

குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில்  31-10-2026 முதல் 13-12-2026 வரை

குருபகவான் அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதும், சனி 9-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்து நிம்மதி ஏற்படும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி சுமுக நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

குரு பகவான் வக்ர கதியில்  13-12-2026 முதல் 13-04-2027 வரை

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். சர்ப கிரகங்கள் 1, 7-ல் சாதகமற்று இருப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெற முடியும். கூட்டாளிகளை தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். நீங்கள் எதிர்பார்த்த புதிய ஆடர்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு விரும்பிய இட மாற்றங்களும் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது.

உங்கள் ராசிக்கு 8-ல் ராகு, 2-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - வெள்ளை, சிவப்பு              கிழமை - திங்கள், வியாழன்

கல்முத்து       திசை - வடகிழக்கு               தெய்வம்வெங்கடாசலபதி

No comments: