Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - துலாம் ராசி

 ஒம்சரவணபவா

குரு பெயர்ச்சி பலன் - 2026 - 2027 - துலாம் ராசி

 

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவராகவும், மற்றவர்களை எடை போடுவதில் வல்லவராகவும் விளங்குவீர்கள். உங்கள் ராசிக்கு இதுநாள் வரை 9-ல் சஞ்சரித்த குரு பகவான் தற்போது ஏற்படக்கூடிய பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10-ல் சஞ்சாரம் செய்ய உள்ளதால் நீங்கள் எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். பொதுவாக 10-ல் சஞ்சரிப்பது தொழில், வியாபாரம், உத்தியோக ரீதியாக சின்ன சின்ன நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்றாலும் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியான சனி பகவான் ருணரோக ஸ்தானமான 6-ல் தற்போது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவில் ஒரு ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டியது கிடைக்கக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடைய முடியும். சில விஷயங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும்.

உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தனது சிறப்பு பார்வையாக 2, 4, 6-ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க கூடிய அமைப்புகள், உறவினிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறையக் கூடிய அமைப்புகள், அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள், நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய அதிர்ஷ்டம், எதிலும் தனித் திறமையோடு செயல்பட்டு எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது மறையும். போட்டி பொறாமைகள் விலகும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த வம்பு வழக்குகள் எல்லாம் தற்போது உங்களுக்கு சாதகமாக முடிந்து வளமான பலன்களை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலை எடுப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தை அடைய முடியும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக சின்ன சின்ன இடையூறுகளை சந்தித்தாலும் நீங்கள் தனி திறமையோடு செயல்பட்டு வளமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு சில நேரங்களில் உடல் சோர்வு ஏற்பட்டாலும் வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுக்கின்ற பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது மிக மிக நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்த்து நல்ல லாபத்தை அடைய முடியும். எதிர்பாராத செலவுகள் சில ஏற்பட்டாலும் அது உங்கள் தொழில் வளர்ச்சிக்கான பயனுள்ள செலவாக இருக்கும். கடந்த காலங்களில் உங்கள் மீது இருந்து வந்த பழிச் சொற்கள் எல்லாம் வருகின்ற நாட்களில் குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் வாங்கிய கடன்களை வரும் நாட்களில் பைசல் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் சில விஷயங்களில் அவர்களை கலந்தாலோசித்து செயல்பட்டால் அவர்கள் மூலமாக ஒரு சில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொது வெளியில் பேசாமல் இருப்பதன் மூலமாக தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும் அதனை உங்களது தனித்திறமையால் திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் மேன்மைகளை அடையக்கூடிய யோகமும் உங்களுக்கு உண்டு. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் ஏற்ற மிகுந்த பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் சில நேரங்களில் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு பொறுமையோடு பேசுவது மிக மிக நல்லது.

இந்த தருணத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும். பொதுவாக 6-ல் சனி சஞ்சரிப்பது பல்வேறு வகையில் வளமான பலன்களை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை நீங்கள் எட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு.

தற்போது உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 11--ல் கேது என வரும் 5-12-2026 முடிய சஞ்சரிப்பதாலும் அதன் பின்பு 4-ல் ராகு, 10-ல் கேது என சஞ்சரிக்க இருப்பதாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. பூர்வீக சொத்து வகையில் தேவையற்ற நிம்மதி குறைவு ஏற்படும். பிள்ளைகள் வழியில் சின்ன சின்ன மன கவலைகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு வரும் டிசம்பருக்கு பிறகு தாய் வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் ஏற்படும். கூடுதல் பணி சுமை காரணமாக உங்களுக்கு அலைச்சல்கள் இருந்தாலும் பொருளாதார ரீதியாக அடைய வேண்டிய அனுகூலங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று பொறுமையோடு செயல்பட்டு விட்டால் எந்தவித நெருக்கடியும் சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராத உதவி எல்லாம் கிடைத்து குடும்பத்தில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் ஒரு சில மருத்துவ செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயங்களில் சற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்கலாம்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்னோன்னியம் நன்றாக அமையும். புத்திரர்களால் சில நேரங்களில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண வரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்வதை சற்று குறைத்து கொள்வது நல்லது. அசையா சொத்து வகைகளில் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் சேமிப்புகள் சற்று குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் ஷேர் போன்றவற்றில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருக்கவும். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை மற்றும் தேவையற்ற விரோதங்களை சம்பாதிப்பீர்கள். சனியின் சாதக சஞ்சாரத்தால் எந்த வித நெருக்கடிகளையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் 

நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய காலமிது. எடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வேலையாட்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளையும் பொறாமைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள்.

உத்தியோகம் 

பணியில் கவனமுடன் செயல்பட வேண்டும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் திறமைக்கு ஏற்ற உயர்வினை அடைய முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டி வரும். சில நேரங்களில் வீண் பழிகளை சுமக்க வேண்டி வரலாம். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று கூற முடியாது. எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் உண்டாக கூடும். உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் நல்ல பதவி அடைவதற்கு அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கி கொள்வீர்கள். பத்திரிக்கை நண்பர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்வதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். விளைப்பொருட்களுக்கு ஏற்ற விலையை சந்தையில் எதிர்பார்க்க முடியாது. அரசு வழியில் சிறுசிறு மானியத் தொகைகள் கிடைக்கும். பங்காளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பனவரவுகளால் உங்கள் கடன்கள் குறையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் சில காரணங்களால் கைமாறிப் போகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும். ஆடம்பரமான செலவுகளை செய்ய முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். கையில் இருக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாமல் காப்பாற்றி கொள்வதும், கௌரவம் பாராமல் எல்லோரிடமும் சகஜமாக பழகுவதும் நல்லது. வெளி நபர்களிடம் வீண் பேச்சை குறைக்கவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் ஒரு சில மன சஞ்சலங்கள் உண்டாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைபளு அதிகரிக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பேச வேண்டாம்.

மாணவ மாணவியர் 

படிப்பில் சற்றே நாட்டம் குறைய கூடிய காலம் என்பதால் முழு முயற்சியுடன் கல்வியில் ஈடுபாடு காட்டுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். புதிய நட்புகள் மூலம் உங்களின் பொது அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். திறனை வெளிகாட்டும் போட்டிகளில் வெற்றி கிட்டும்.

 

குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில்  31-10-2026 முதல் 13-12-2026 வரை

குரு அதிசாரமாக 11-ல் சஞ்சரிப்பதும், சனி 6-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் மன கவலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு அமையும்.

குரு பகவான் வக்ர கதியில்  13-12-2026 முதல் 13-04-2027 வரை

குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். சனி 6-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை விலகி ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக சற்று தேக்க நிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் காண முடியும். தகுதியான வேலையாட்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.

 

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

உங்கள் ராசிக்கு ராகு சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8                   நிறம் - வெள்ளை, பச்சை               கிழமை - வெள்ளி, புதன்

கல் - வைரம்                               திசை - தென் கிழக்கு         தெய்வம் - அஷ்டலக்ஷ்மி

No comments: